பிழையின்றி எழுதுவோம் வாங்க..3


பிழையின்றி எழுதுவோம் வாங்க...3


சில சொற்களை எழுதும்போது
அப்படி இருக்குமோ இப்படியிருக்குமோ 
என்ற ஒரு குழப்பம் ஏற்படும்.
இறுதியில் எப்படியும் இருக்கட்டும்
என்று ஏதோ ஒன்றை எழுதுவோம்.
இப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய
சொற்கள் பல உண்டு.
அதற்கான காரணம் அந்தக் 
குறிப்பிட்ட சொல்லுக்கான சரியான
பொருளை நாம் அறியாதிருத்தலே ஆகும்.

அவை எந்தெந்த இடங்களில் எவ்வாறு
கையாளப்பட்டிருக்கின்றன
என்பதை சற்று கவனமாக உற்று
நோக்கினால் பெரும்பாலான
தவறுகளைத் தவிர்க்க முடியும்.
சரியான சொல்லைச் சரியான இடத்தில்
பயன்படுத்தத் தெரிந்தால் பிழைபட
எழுதுவதைத் தவிர்க்கலாம்.

வாருங்கள் தெரிந்து கொள்வோம்.


தருவாய்,தறுவாய்

மரணத் தருவாயில்  என்று எழுதுவது சரியா?
மரணத் தறுவாயில் என்று எழுதுவது சரியா ?

எத்துணை நேரம் தடுமாறியிருப்போம்.

தருவாய் என்றால் கொடுப்பாய்
என்று பொருள்படும்.

தறுவாய் என்றால் இடம், காலம்
என்ற பொருள்களில் கையாளப்படுகிறது.

"புறப்படும் தறுவாயில் போய்ப்
பார்க்க வேண்டும்"
என்று எழுதினால் புறப்படும் நேரத்தில் 
என்று பொருள்படும்.

ஆதலால் காலத்தைக் குறிப்பிடும்போது
தறுவாய் என்று எழுதுவதே சரி.

கேளீர், கேளிர் 

யாதும் ஊரே யாவரும் கேளீர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பதில் எது சரி என்ற குழப்பம்
பல நேரங்களில் ஏற்படுவதுண்டு.

கேளீர் என்பது கேட்பீராக
என்று பொருள்படும்.

கேளிர் என்றால் உறவினர்.
கணியன் பூங்குன்றனார் உறவினர்
என்றுதானே எழுதியிருப்பார்.

ஆதலால் உறவினர் என்ற பொருளில்
எழுதும்போது கேளிர் என்று எழுதுவது சரி.

கேட்பீராக என்று எழுதும்போது
கேளீர் என்று எழுத வேண்டும்.


வெந்நீர், வென்னீர்


வெம்மையான நீர். அதாவது சுடு தண்ணீர்
என்பது வெந்நீர்.
வென்னீர் என்றால் தவறு.

வெந்நீர் என்று எழுதுவதுதான்
சரியாக இருக்கும்.

பெரும்பாடா? பெறும்பாடா ?

பாடு என்பது துன்பம் , நோய்
என்று சொல்லப்படும்போது
பெரும்பாடு என்றுதான் எழுத வேண்டும்.
இதில் வந்துள்ள பெரும் என்பது
அதிகம், மிகுதி என்ற
பொருளில் வந்துள்ளமையால்
பெரும்பாடு என்பதுதான் சரி.
பெறும்பாடுபட்டுவிட்டேன்
என்று எழுதுவது சரியாக இருக்காது.


பெரும்பாடு  என்பது 
மிகுந்த துன்பம் தரும்
நோய் என்று சொல்லப்படும் இடங்களில்
பயன்படுத்தப்படும் சொல்.

பெறும் என்றால் பெற்றுக் கொண்டுள்ள 
என்ற பொருளில் வருவதால்
பெறும்பாடு என்பது தவறாக இருக்கும்


எத்தனை , எத்துணை

எத்தனை என்பது எண்ணிக்கையில்
விடையளிக்கக் கூடியவற்றிற்குப்
பயன்படுத்தும் சொல்.

எத்தனை ஆண்டு?

எத்தனை ரூபாய் வேண்டும்?

எத்தனை புத்தகங்கள் இருந்தன ?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நான்கு,
ஐந்து, ஆறு என்று ஏதாவது ஒரு
எண்ணை  விடையாகச் 
சொல்லிவிட முடியும்.

எத்துணை என்றால் எண்ண 
இயலாதவற்றைக் குறிப்பிடும்போது
பயன்படுத்த வேண்டும்.

எத்துணை காலம் காத்திருப்பது?

எத்தனை அன்பு என்று கேட்பது
சரியாக இருக்காது.

அன்பை அளவிட்டுச் சொல்ல முடியாது.
அதனால் 
எத்துணை அன்பு!
எத்துணை நல்லவர்!
எத்துணை வலிமை!

என்று எழுதுவதே  சிறப்பாக  இருக்கும்.


மெல்ல, மெள்ள

மெல்ல என்ற சொல்லும் 
மெள்ள என்ற சொல்லும் 
ஒரே பொருள் தருவதுபோல்தான்
இருக்கும்.
ஆனால் இரண்டும் அடிப்படையில்
பொருள் வேறுபாடு கொண்டவை.

மெல்ல - மென்மையாக

மெள்ள - மெதுவாக, அமைதியாக

என்று இரண்டுக்கும் வேறுவேறு 
பொருள் உண்டு.

பிள்ளைகள் வேகமாக ஓடினால்
மெள்ள...மெள்ள....வேகமாக ஓடாதே
என்போம் அல்லவா!

கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினால்
மெல்லப் பேசு ....யாராவது
கேட்டுவிடப் போகிறார்கள்
என்று சொல்லியிருப்போம்
அல்லவா!

இப்போது வேறுபாடு
புரிந்திருக்கும்.

ஆதலால் மெதுவாகப் போ என்று
சொல்லுமிடத்து 
மெள்ள என்ற
சொல்லையும்
மென்மையாகப் பேசு என்று
சொல்லும் போது மெல்ல என்ற
சொல்லையும் பயன்படுத்துவதுதான்
ஏற்புடையதாக இருக்கும்.

( இன்னும் வரும்)






Comments

  1. பிழைகளை தவிர்க்க பயனுள்ள பதிவு.அடுத்த தொடரையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts