வேற்றுமை அணி


        வேற்றுமை அணி

அணி என்றால் அழகு என்று பொருள்.
செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, 
பொருளழகு ஆகியவற்றை வரையறுத்துக்
கூறுவது அணி இலக்கணம்.


செய்யுளும் அழகுபடச் சொல்லப்பட வேண்டும்.
பாடலில் சொல்லப்படும் கருத்தையும்
எளிதாக புரிய வைக்க வேண்டும்.
இதற்காக செய்யுளில் பல்வேறு உத்திகள்
கையாளப்பட்டிருக்கும்.
அதனைத்தான் அணி இலக்கணம்
என்கிறோம்.

அணி இலக்கண நூல்களில் மிகவும் 
தொன்மையான நூல் தண்டியலங்காரம்.
தண்டி என்ற ஆசிரியர் எழுதிய 
அலங்காரம் அதாவது அணி பற்றி
எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம்.

இந்த நூலில் முப்பத்தைந்து 
அணிகளுக்கான இலக்கணம்
கூறப்பட்டுள்ளது.

அவற்றுள் வேற்றுமையணிக்காணம் யாது என்பது
பற்றிய செய்திகளை இக்கட்டுரையில்
 காண்போம்.

வேற்றுமையணி :

"கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை அணியே "

என்பது வேற்றுமை அணிக்குத்
தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் ஆகும்.


செய்யுளில் இரு பொருள்களுக்குரிய
ஒற்றுமைகளை முதலில்  கூறி,
பின்னர் பிரிதொரு காரணத்தால் ஒன்றிலிருந்து
மற்றொன்று வேறுபட்டதெனக்
காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்.


"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி 
ஏங்கலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னே ரிலாத தமிழ்"

இந்தத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலில்
கதிரவனுக்கும் தமிழுக்கும் இடையே உள்ள
பயன் சார்ந்த ஒற்றுமை கூறப்பட்டுள்ளது.

இரண்டு ஒப்புமை உடைய பொருட்களாக
கதிரவனும் தமிழும் 
இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

முதலாவதாக,
இரண்டிற்கும் ஒரு ஒப்புமை உண்டு.
இரண்டும் மலையில் தோன்றுவது.

கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே 
இருந்து தோன்றுகிறது.

தமிழ் பொதிகை மலையிலிருந்து
தோன்றியது.

ஆக தோன்றுமிடம் ஒன்று.

இரண்டாவதாக,
உயர்ந்தோர் தொழும் பண்பு
இரண்டிற்கும் உண்டு.

கதிரவனைக் காலையில்
வணங்கும் பண்பு இன்றும் நடைபெறுகிறது.

தமிழை வணங்கி ,வாழ்த்திவிட்டுதான்
எந்த செயலையும் செய்கிறோம்.

ஆதலால் இரண்டும் தொழப்படும்
உயரிய பண்பு கொண்டவை.

மூன்றாவதாக,
கதிரவன் தனது ஒளியால் 
ஒலிக்கின்ற கடலால்
 சூழப்பட்ட இந்த உலகின்
புற இருளை நீக்குகிறது.

தமிழ்மொழி தமது சிறந்த படைப்புகளால்
மக்களின் அக இருளான 
அறியாமை என்னும்
இருளை நீக்கி வருகிறது.

கதிரவனும் இருளை அகற்றுகிறது.
தமிழும் அறியாமை என்னும் இருளை அகற்றுகிறது.

இப்போது இரண்டிற்குமான
வேற்றுமை என்ன  என்று பார்ப்போம்.
கதிரவனுக்கு நிகர் உண்டு.
சூரிய குடும்பத்திலுள்ள பலகோள்களுள்
ஒன்றுதான் இந்தக் கதிரவன்.

ஆனால் தமிழுக்கு நிகரான மொழி இல்லை.
ஒப்பு உவமை கூற முடியாத
இணையற்ற மொழி தமிழ் மொழி.
அதனால்தான் அதனை தன்னேரில்லாத
தமிழ் என்று சொல்லப்பட்டுள்ளது.

கதிரவனுக்கு இணையுண்டு.
தமிழுக்கு இணையில்லை.

இரண்டுக்கும் இத்தனை ஒற்றுமை இருப்பினும்
இவற்றுள் தமிழ் தன்னிகரில்லாதது என்று
வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதால் இது 
வேற்றுமையணி ஆயிற்று.


இப்போது மிகவும் எளிதான ஒரு திருக்குறளை
வேற்றுமை அணிக்கு எடுத்துக்காட்டாக 
எடுத்துக் கொள்வோம்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு "

தீயினால் சுட்டபுண் உடம்பில் தோன்றினாலும் 
உள்ளே ஆறிவிடும்.
ஆனால் நாவினால் பேசிய தீய சொற்கள்
ஒருவர் உள்ளத்தைச் சுட்டு
என்றும் நீங்காதிருக்கும் வடுவாகி 
நிரந்தரமாக இருக்கும் என்பது
இப்பாடலின் பொருள்.

தீ சுடும்.
நாவும் சுடும். 
அதாவது நாவினால்
ஒருவரைக் கடுமையாகப் பேசிவிட்டால்
அது அவர் உள்ளத்தைக் காயப்படுத்திவிடும்.

அதனால் தீ, நாவு இரண்டிற்கும்
சுடுகின்றதான ஒற்றுமை குணம் உண்டு .

ஆனால் இவை இரண்டிற்கும் இடையே
ஒரு வேற்றுமையும் உண்டு.

தீயினால் சுட்டபுண் ஆறிவிடும்.
ஆனால் நாவினால் சுட்டபுண்
என்றும் ஆறாது. சொல்லிய
வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது.
நம்மால் ஒருவர் உள்ளம்
ஒருமுறை காயப்பட்டுவிட்டால்...
காயப்பட்டது  காயப்பட்டதுதான்.
அதனை ஆற்றவே முடியாது.
அது நிரந்தர வடுவாகிப் போகும்.



தீயும் சுடும்.
கடுமையான வார்த்தைகளும் சுடும்.

ஆனால்.....தீயினால் சுட்டப்புண்
ஆறிவிடும்.
நாவினால் சுட்டப்புண் ஆறாது.
இது வேற்றுமை.

ஆதலால் இது வேற்றுமை அணி.

இதனை மனதில் பதிய வைத்துக்
கொண்டால் போதும்.
வேற்றுமை அணி என்றால் என்ன
என்று கேட்டால் மிக எளிமையாக 
விடையளிக்க முடியும்.

இந்தத் திருக்குறளில் எவ்வளவு அருமையாக
வேற்றுமை அணி கையாளப்பட்டுள்ளது
பாருங்கள்.





 
 

Comments

  1. மிகவும் பயனுள்ள கருத்தை மிக எளிமையாக பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete
  2. 'Vetrumai ani' topic in Tamil grammar was described by various poems and illustrated and explained in a useful way. The technique she used is remarkable. Excellent.

    ReplyDelete

Post a Comment

Popular Posts