செய்தி சொல்லும் சேதி - 8

"குளிர்பானம் குடித்த சிறுமி உடல் 
நீல நிறமாக மாறி
குளிர்பானம் குடித்த சிலமணி 
நேரத்திற்குள் மரணம்"

இது செய்தி.

என்ன...குளிர்பானம் குடித்த
சிறுமி மரணமா? 

குளிர்பானம் குடிக்கும் பழக்கம்
உள்ளவர்கள் அனைவருக்கும் 
அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா!

எந்தக் குளிர்பானமாக இருக்கும்? 
பெயரைத் தெரிந்து கொண்டால்
மறுபடியும் அந்தக் குறிப்பிட்ட பெயர் கொண்ட
குளிர்பானத்தைக் குடிக்காமல் தவிர்த்துவிடலாமே
என்று மண்டைக்குள் ஒரே குடைச்சல்.

நாளிதழை நாள் முழுவதுமாக
புரட்டிப் புரட்டிப் பார்த்து 
பெயர் தெரியாமல்.... அறிந்தவர்கள்
தெரிந்தவர்கள் எல்லோரிடமும் 
விசாரித்திருப்போம்.

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ...
இந்த அதிர்ச்சிக்கிடையேயும் நானெல்லாம்
குளிர்பானம் குடிப்பதே இல்லை என்று
உள்ளுக்குள் உவகை கொள்ளும் நபர்களும்
இருக்கத்தான் செய்வார்கள்.

இதுதான் உலகம்.

பல நேரங்களில் யாரோ ஒருவர்
வீட்டில் எங்கோ நடந்த
ஒரு நிகழ்வு. அதனால் நமக்கு என்ன ? 
என்ற நினைப்போடு செய்தியைப் படித்துவிட்டு
அப்படியே கடந்து போயிருப்போம்.

நமக்கு இன்னார் மகள் இறந்துவிட்டாள்
என்று  தகவல் தெரிவிப்பதற்காக
சொல்லப்பட்ட செய்தியா இது...?

அல்லது தேவை இல்லாமல் நாளிதழ் பக்கத்தை
நிரப்புவதற்காக  எழுதப்பட்ட செய்தியா?
சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

சமூக அக்கறையோடு செய்திகளை 
வெளியிடுவதுதான் ஊடகங்கள் மற்றும்
செய்தித்தாள்களின்
கடமை.....
கடமை  என்பது மட்டுமல்ல பணியுங்கூட 
அதுதான்.

பாதிக்கப்பட்டது யார் வீட்டுக் குழந்தையோ
நமக்கென்ன என்று விட்டுவிட்டுப்
போகக்கூடிய  செய்தி அல்ல இது.


நாளை உங்கள் பகுதியிலும் இதே போன்ற
நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
விழிப்பாக இருங்கள் என்று நம்மை விழிப்படைய
செய்வதற்காக சொல்லப்பட்ட செய்தி.

நாம் எப்படி விழிப்பாக இருப்பது?

நீங்களும் நானும் குளிர்பானம் 
குடிப்பவர்கள்தானே! 

அப்படியானால் இது உங்களுக்காகவும் 
எனக்காகவும் எழுதப்பட்ட
செய்தியாகத்தான் இருக்கும்.
இருக்கும் என்ன....இருக்கிறது.
அதுதான் உண்மை.

நாங்கள்  என்ன பெட்டிக்கடையில் குளிர்பானம்
வாங்கி குடிப்பவரா ?
நாங்கள் தரமான
உயர்ரக குளிர்பானம் குடிப்பவரல்லவா ? 
நாங்கள் குடிக்கும் குளிர்பானம் 
அப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்தாது
 மார்தட்டிக் கொள்வீர்கள்.

மகிழ்ச்சி....

இங்கே குளிர்பானம்
குடித்தது குற்றமல்ல.

காலாவதியான குளிர்பானத்தைக்
குடித்தது தான் தவறு.

குளிர்பானம் வாங்கிக் குடிக்கும்போது
எத்தனைபேர் காலாவதியாகும் நாளைப்
பார்த்து வாங்குவீர்கள் ?

வாங்கியதும் அந்த இடத்தில் நின்றே
மளமளவென்று குடிப்பது தானே 
பெரும்பாலானவர்களின் இயல்பு.
இதில் நானும் நீங்களும் எங்கிருந்து 
விதிவிலக்காகிப் போனோம்.?

பெரும்பாலானபேர் பெரிய கடைகளில்
குளிர்பானம் வாங்கும் போது காலாவதியாகும்
நாளைக் கவனிக்காமல் இருப்பதற்குக் 
காரணம் கடைக்காரர் காலாவதியான பொருட்களை
 வைத்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையாகக்கூட
 இருக்கலாம்.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல்
இருக்கும் வரை சிக்கல் இல்லை.
ஏதாவது நிகழ்ந்து விட்டால் அதன்பிறகு 
குய்யோ முறையோ என்று கத்துவோம்.
போனது போயாயிற்று. 
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்ன பயன்?

அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா?

காலாவதியான குளிர்பானங்களைக் குடிக்காதுங்கப்பா.
இப்படி ஓர் ஊரில் ஒரு துயரகரமான
சம்பவம் நடந்துவிட்டது.
கவனமாக இருங்கள் என்று சொல்வதற்காக தான்
இந்த செய்தி.

இது மக்களுக்காக சொல்லப்பட்ட செய்தி.

இதில் அரசுக்குச் சொல்லும் 
ஒரு செய்தியும் ஒன்று உண்டு.

இந்தப்பகுதியில் காலாவதியான 
பொருட்கள் விற்பனையாகிறது.
உடனடியாக செயலில் இறங்குங்கள் என்று
அரசையும் முடுக்கிவிடுவதற்காக சொல்லப்பட்ட 
செய்தியாகவும் இது இருக்கும்.குளிர்பானத்தில் மட்டும்தான் காலாவதியானதை
விற்கிறார்களா?
மற்ற பொருட்களில் அப்படிப்பட்ட சிக்கல்
எதுவும் இல்லையா 
என்ற கேள்வி கூடவே
எழும்.

பொருட்களில் காலாவதியாகும் நாள் 
குறிப்பிடப்படுவது எதற்காக?
இந்தக் குறிப்பிட்ட நாளுக்குப் பின்னால்
இந்தப் பொருளைப் பயன்படுத்தாதீர்கள்.
பயன்படுத்தினால் அதனால் 
எதிர்வினைகள் விளையலாம்.
விளையும் எதிர்வினைகளுக்கு
நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்வதற்குத்தான்.


மருந்தகத்தில் போய் மாத்திரை வாங்கி வருகிறோம்.
என்றைக்காவது காலாவதியாகும் நாள்
என்றைக்கு என்று  பார்த்ததுண்டா?

தலைவலி  மண்டையைப் பிளக்கிறது.
ஒரு தலைவலி மாத்திரை தாருங்கள் என்று
வீட்டிலுள்ளவர்களிடம் கேட்கிறோம்.
அந்த நேரத்தில் காலாவதியாகிவிட்டதா?
இல்லையா ?என்று பார்த்துக் கொண்டிருந்தால்....

எதையாவது ஒன்றைத்தாருங்கப்பா...
எனக்குத் தலைவலி கொல்லுகிறது.
இப்போ போயி காலாவதி...கலாவதி என்று
ஏதேதோ சொல்லிக்கொண்டு
என்று கத்தமாட்டோமா!

முதலாவது நமக்கு வலி குறைய வேண்டும்.
மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம் என்ற மனநிலையில்தான் இருப்போம்.

இன்னும் சிலர் எங்களுக்கும் பார்த்து 
வாங்கதான் ஆசை.
பார்க்க நினைத்தாலும் அவை கண்ணுக்குப்
புலப்படுவதில்லையே....
என்ற புலம்புவதும் என் காதுகளில் விழாமலில்லை.

மக்கள் பார்க்க மாட்டார்கள் என்பதற்காக
காலாவதியான பொருட்களை விற்று
மக்கள் உயிரோடு விளையாடலாமா?
கடைக்காரருக்கும் ஒரு சமூக அக்கறை 
வேண்டுமல்லவா!

அக்கறை இல்லாது பணம் பண்ணுவது மட்டுமே
குறிக்கோள் என்று செயல்பட்டால் கை விலங்கு
காத்திருக்கிறது என்று கடைக்காரர்களுக்கும்
எச்சரிக்கை விடுவதற்கானதான் கடைக்காரரை
கைது செய்த படத்தையும் செய்தியோடு 
கோத்து விட்டிருப்பார்கள்.

கடைக்காரருக்கு மட்டும் பொறுப்புணர்வு
இருந்தால் போதுமா?
அரசுக்கு  மக்கள்மீது அக்கறை இருக்க
வேண்டாமா?

மக்களைப் பாதுகாக்க வேண்டிய 
கடமையும் பொறுப்பும் அரசின் கையில்தானே உள்ளது.
இப்படி இருக்க....இப்படி ஒரு அசம்பாவிதம்
நிகழக் காரணம் என்ன ?

இந்தக் கேள்வியை அரசை நோக்கி
எழுப்புகிறது இந்தச் செய்தி
உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு
ஆணையத்தின் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டு அனுமதி வாங்கிய பின்னர்தான்
பொருட்கள் விற்பனைக்கு வரும்.

அத்தோடு நம்பணி முடிந்தது என்று
அந்த அதிகாரிகள் இருந்துவிடக்கூடாது.
காலாவதியான பொருட்கள் நடமாடும்
இடங்களைக் கண்காணித்துப்
புழக்கத்திற்கு வரும் முன்னரே அழித்துவிட
உத்தரவிட வேண்டும்.

அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்
முறையாக செயல்பட்டால் எந்தக் காலாவதியான
பொருட்களும் கடையில் இருக்காது.
சம்பவம் நடந்தபின்னர் ஓடி ஓடி வந்து
 கடையில் உள்ள பொருட்களை சோதனையிடுவதும் 
 கடைக்குச் சீலிடுவதும் எதற்கு?

இப்படியும் ஒரு கேள்வி நமக்குள் எழுகிறதல்லவா!!

இப்படியாக எல்லாத்தரப்பையும் நோக்கி
கேள்வி எழுப்புகிறது இந்தச் செய்தி.


என்ன கேட்டு என்ன பண்ண...?
இழப்பு இழப்புதான்.
அதனை ஈடுகட்டவே முடியாது.

நாம்தான் காலாவதியான பொருட்களைப்
பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வோடு
இருக்க வேண்டும் .


காலாவதியாகும் நாள் என்றைக்கு என்பதைப்
பார்த்து ....காலாவதியாகாத பொருட்களைப்
பார்த்துப் பார்த்து  வாங்கிப் பயன்படுத்துங்கள்.

அதுதான் நம் உடல் நலத்துக்கு நல்லது.

இதுதான் இன்றைய செய்தி சொல்லும் 
சேதி..!

வரட்டா..


Comments

  1. காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற செய்தி அனைவருக்கும் பயனுள்ளது.மிகஅருமை.

    ReplyDelete
  2. Useful message not only for the people but also for the government and government officials. A message of awareness. People should not use expiry dated things. Careful attention should be towards the date of manufacture and date of expiry.
    Excellent message.

    ReplyDelete

Post a Comment

Popular Posts