வேண்டாம்...வேண்டாம்


       வேண்டாம்....வேண்டாம்வேண்டும்... வேண்டும்
நல்ல எண்ணம் இருக்க வேண்டும்.
செயலில் நேர்மை இருக்க வேண்டும்.
பேச்சில் இனிமை இருக்க வேண்டும்.
பழகுவதில் உண்மை இருக்க வேண்டும்.
இப்படி எல்லாவற்றிலும் வேண்டும்..வேண்டும்
என்று நேர்மறையான சொல்லே இருக்க
வேண்டும். அப்போதுதான் நம்மைச்
சுற்றி நடப்பவை யாவும் நன்மையானதாக
நடக்கும் என்று சொல்லிச் சொல்லி
வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
 ஒரு எதிர்மறை சொல் வாயிலிருந்து 
 வந்துவிடக் கூடாது
என்று பார்த்துப் பார்த்துப் பேசுவோம்.

ஆனால் இலங்கியங்கள் இவை எல்லாவற்றிற்கும்
நேர் மாறானவை.
இனியவை நாற்பது உண்டு என்றால் ஒரு
இன்னா நாற்பதும் உண்டு.
இனியவை நாற்பதைவிட எந்தவிதத்திலும்
குறைபடாத சொல்லாட்சி கருத்தாளுமை
ஆகியவற்றை இன்னா நாற்பதிலும்
காணலாம்.
தீ என்று சொல்வதால் நாக்கு
வெந்துவிடப்போவதில்லை. சர்க்கரை என்று
சொல்வதால்  நாக்கு இனித்துவிடப்
போதில்லை.
எது எப்படியோ சொல்லப்படும் கருத்து
உயர்வானதாக இருந்தால் நாம் வேண்டாம்
வேண்டாம் என்று சொன்னாலும் அவை
வேண்டும் வேண்டும் என்று நம்மோடு
என்றும் நடைபயின்று கொண்டிருக்கும்.

 வேண்டாம் என்ற சொல்லை வைத்தே
நம்மை இன்னும் வேண்டும்... இன்னும்
வேண்டும் என்று கேட்க வைத்தவர் ஒருவர்
இருக்கிறார். யாரவர்...?யாரவர்...?
வேண்டாம்...வேண்டாம் என்று சொல்லி
நம்மை தம்மோடு கட்டி இழுத்து வந்தவர்
யாரவர்?

ஒன்றாம் வகுப்பிலிருந்தே நம்மோடு
வேண்டாம் என்ற சொல்லைத் தூக்கிச்
சுமக்க வைத்தவர்....
யாரவர்?

இன்னும் நான் பேர்
சொல்ல வேண்டுமா?
ஒன்றாம் வகுப்பில் நாம் வேண்டாம்
வேண்டாம் என்று ஒப்பித்து மகிழ்ந்த
வரிகளுக்குச் சொந்தக்காரர் உலகநீதி
வழங்கிய உலகநாதராயிற்றே!

உயிரோடு உணர்வோடு கலந்து உடன்
நடை பயின்ற வரிகளைத் தந்தவர்.
 என்றும் நெஞ்சில் நீங்கா இடம் 
 பிடித்த வரிகள்.

வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே
நம்மை தனது பாட்டோடு 
வேண்டுமட்டும் கட்டி இழுத்துச்
சென்றுகொண்டிருப்பவர்.

அப்படிப்பட்ட உலகநாதரின் 
உலகநீதியிலிருந்து
முத்தாய்ப்பான ஒரு சில வரிகள்
உங்களுக்காக:-

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

தனந்தேடி உண்ணாமற் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்

சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோ டெதிர்மாறுபேச வேண்டாம்


கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

வாழாமல் பெணாணை வைத்துத் திரிய வேண்டாம்

மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்


மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்

பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்

கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்

செய்ந்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்

மண்நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்

மனம் சலித்து சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்

கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்

காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்

புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டும்

திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்

வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.


அருமையான கருத்துள்ள வரிகள்.

எளிமையான வரிகள்.
பொருள் தேவைப்படாமலேயே
புரிந்து கொள்ளும்படியாக எழுதபட்ட வரிகள்.

பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட

வேண்டிய வைர வரிகள்.

இளமையில் மாணவர் மனதில் பசுமரத்தாணிபோல்

பதிய வைக்கப்பட வேண்டிய வரிகள்.


இன்னும் வேண்டும்.....வேண்டும்

என்று உள்ளம் கேட்கும்படியான வரிகள்.

மீதமுள்ள வரிகள் எங்கே ...எங்கே என்ற ஒரு

தேடலை உண்டுபண்ணும் படியான  வரிகள். 

இதுதான் காலத்தை வென்ற வரிகள் .

படைப்பாளியின் படைப்புக்குக் கிடைத்த வெற்றி! 


Comments

Popular Posts