சத்தியவான்
சத்தியவான்
"அப்பா இருக்காரா" வாசலில் நின்று
உரக்கக் கத்தினார் பெரிய
வீட்டுக்கார சிதம்பரம்.
பதில் சொல்லாமலேயே "வாங்க"
என்றார் அம்மா.
"நான் உட்கார வரல...உங்க
வீட்டுக்காரர் வந்துட்டாரான்னு
பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன்"
என்று கறாராகப் பேசினார் .
"அவுங்க வந்ததும் உங்களை வந்து
பார்க்க சொல்லுறேன் "
"இதைத்தான் எத்தனை நாளா
சொல்லுகிட்டு இருப்பீங்க...
எங்க போயி ஒளிஞ்சுகிட்டாரு உங்க
வீட்டுக்காரரு.
ஊருக்காரன் விளைச்சலை எல்லாம்
மூட்டை மூட்டையா அள்ளி லாரியில்
அனுப்பத் தெரியுது...அதுக்குப்
பணம் கொடுக்கணும்ன்னா வலிக்குதோ...."
"என்ன நீங்க பெரிய பெரிய
வார்த்தை எல்லாம் பேசுறீங்க...
நாங்க அப்படிப்பட்ட ஆளுங்க கிடையாது."
"எப்படிப்பட்ட ஆளுன்னுதான் ஊருக்கெல்லாம்
தெரிஞ்சு போச்ச....இன்னும் எத்தனை நாளுக்குதான்
பம்மாத்து காட்டுறாருன்னு பார்க்கத்தானே போறோம்"
"கமிஷன் கடையில் கொடுத்ததும்
கொண்டு வந்து தந்துருவாங்க..."
"கமிஷன் கடையில்தான் ஒண்ணு
இல்லாம வாங்கி கட்சி
காரனுக்குக் கொடுத்துட்டாராமே...
இனி கமிஷன் கடைக்காரர் ஒரு ரூபாய்
கொடுக்க வேண்டியது இல்லை என்று
அடித்துச் சொல்லுகிறார்.
எல்லாம் விசாரிச்சுகிட்டுதான்
வந்துருக்கோம்"
"அப்படி யாருக்கும் வாங்கிக் கொடுக்கலங்க...
கமிஷன் கடைக்காரர் மச்சானை எதுத்து
எங்க சொக்காரர் தேர்தலில் நின்னு தோற்றுப் போனார்.
அந்தக் கோபத்துல எங்களைச் பழிவாங்க
இப்படி சொல்லுறாரு"
"பொய்கணக்கு எழுதி வச்சிருக்காரு
என்று சொல்லுறிய இல்லியா...
அப்படியானால் அவர் சத்தியம் பண்ண
கூப்பிடுகிறாமில்லியா...
போய் சத்தியம் பண்ணி கொடுத்துட்டு
பணத்தை வாங்கிட்டு வர வேண்டியதுதானே!"
"அது எப்புடிங்க முடியும். எங்க வீட்டுக்காரர்
சத்தியவான். அவரு பொய் சொல்ல மாட்டாரு
என்று உங்களுக்கும் தெரியும்.
இப்படியிருக்க கோயிலுல வந்து
சத்தியம் பண்ணு என்றால் அது தப்பு
இல்லியா...."
உங்கள் பக்கம் உண்மை இருந்தால்
பேசாமல் சத்தியம் பண்ணிட்டு
பணத்தை வாங்கி வந்து தரச்
சொல்லுங்க...இல்லை என்றால்
நடக்கிறதே வேற சொல்லிபுட்டேன்"
என்று கறாராகப் பேசிய
பெரிய வீட்டுக்காரர் போற போக்கில்,
"எங்கேயும் போய் தூக்குகீக்குப்
போட்டு செத்துக் கிடக்கப்போறார் அப்பாவி.
போய் தேடுங்க " என்று சொல்லிவிட்டுப்
போனார்.
கடைசியாக அவர் சொல்லிவிட்டுப் போன
வார்த்தையைக் கேட்டதும் அம்மா
அப்படியே பதறிப் போனார்.
எனக்கும் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
என்ன சொல்ல முடியும்.?
.
"தன் காலின் கீழிருக்கும் பூமி
அப்படியே பிளந்து அப்படியே என்னை
வாரிக் கொள்ளாதா ...
கடவுளே உனக்கு கண் இல்லையா?
இப்போ என் புருஷன் சத்தியவான்
என்பதை நான் எப்படி நிருபிப்பேன்.."
கடவுள் போட்டோ மூன் நின்று கண்ணீர்
வடித்தார் அம்மா.
"எவ்வளவு மரியாதையாக
வாழ்ந்த கொண்டிருந்தோம்.
இன்னார் மனைவி ...இன்னார் பிள்ளைகள்
என்றால் ஊருக்குள் அவ்வளவு மரியாதை.
எல்லாம் பொசுக்கென்று கண்முன்னே
கருகிப் போனதுபோல இருந்தது.
இந்த மதிப்பும் மரியாதையும் பணமிருக்கும்
வரைதானா?
இதைத்தான் விதி செய்த சதி
என்பரோ?"
"நான் வாங்கி வந்த வரமா?இல்லை...
பிள்ளைகள் வாங்கி வந்த வரமா?"
ஒன்றும் தெரியலியே..."சொல்லியபடி
மலங்க மலங்க
விழித்துக் கொண்டு நின்றார் அம்மா.
"சும்மா விட்டுடுவேன்னு நினைக்காதீங்க"
கடைசியாக ஒரு எச்சரிக்கையாக சிதம்பரம்
சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளை
எளிதில் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இத்தனைப் பேச்சு பேசியவரை
எதுவுமே பேசாமல் அம்மா கையெடுத்து
கும்பிடுகிறார்.
. என்ன நடக்கிறது இந்த வீட்டில்...
நாலு நாளாக அப்பாவும் வீட்டில்
இல்லை.
கேட்டால் கமிஷன் கடைக்குப்
போயிருக்கிறார்கள் என்கிறார் அம்மா....
கமிஷன் கடைக்குப் போனவரா
நாலு நாளாக வீட்டுக்கு வரவில்லை.?
இந்த ஆள் கத்தியதற்கும் அப்பா
வீட்டுக்கு வரமலிருப்பதையும் பார்த்தால்....
ஏதேதோ நினைவுகளோடு
வீட்டுத்தூணில் சாய்ந்தபடி
நடப்பதை உற்றுக் கவனித்துக்
கொண்டிருந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தேன்
என்பது தெரியவில்லை.
அதற்கு மேலும் அப்படியே நிற்க
முடியவில்லை.
ஓடிச் சென்று
அம்மாவைக் கட்டிப் பிடித்துக்
கொண்டு,
"அம்மா..பயமா இருக்கு.
என்னம்மா சொல்லிட்டுப் போறாங்க
அந்த மாமா."
ஏதோ ஒரு குழப்பமான மனநிலையில்
கேட்டேன்.
"ஒண்ணும் இல்லை...பயப்படாதே...
எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
நீ போ...விளையாடிட்டு வா "
தைரியம் சொல்லி அந்த இடத்திலிருந்து
என்னை வெளியேற்ற
முனைந்தார் அம்மா.
அம்மா சொன்னதும் அப்படியே
வெளியே போக மனமில்லை.
தயங்கித் தயங்கி அங்கேயே
நின்று அம்மாவையே பார்த்தேன்.
ஒருவேளை அந்த மாமா சொல்லியதுபோல
அப்பா செய்துவிட்டால்....நினைத்துப்
பார்க்கவே முடியவில்லை.
தேவையில்லாத நினைவுகள் வந்து
என்னைக் கொல்லாமல் கொன்று
கொண்டிருந்தது.
பள்ளி ஆண்டு விழாவில் கயிறு
இழுத்தல் போட்டிக்கு எப்போதும் அப்பா
வருவார்.அடுத்த வாரம் ஆண்டுவிழா வருகிறது.
அப்பா ஏதாவது செய்துவிட்டால்....
ஐயோ அப்பா...வேண்டாம்... வேண்டாம்.
அப்பா...அப்பா என்று கதற வேண்டும்
போல் இருந்தது.
இது என்ன தேவையில்லாத நினைவுகள்....
சே...என் அப்பாவுக்கு ஒன்றும்
ஆகியிருக்காது.
ஆக விட மாட்டேன்....ஓடிச்சென்று
கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.
நீ சின்ன பிள்ளை. உன்னால்
என்ன செய்ய முடியும்?
மனம் உள்ளுக்குள் வியாகுலப்பட்டது.
இந்தப் பாழும் மனம் இப்படித்தான்.
அங்கேயும் தாண்டவிடாது.
இங்கேயேயும் தாண்டவிடாது.
மனசு வெளியில் போக மறுத்து
வீட்டின் அந்தத் தூணையும் அதைச்
சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் சுற்றிச்
சுற்றியே வந்து என்னைத்
துவசம்பண்ணிக் கொண்டிருந்தது.
நாடிபிடித்து கெஞ்சுவதுபோல கெஞ்சி
அம்மா முகத்தைப் பார்த்தேன்.
"என்ன...."என்று எங்கோ பார்த்தபடி
கேட்டார் அம்மா.
"அந்த மாமா நம்ம அப்பாவைப் பார்த்து
தூக்கு போட்டு
செத்துப் போனாரோன்னு கேட்டாங்களே
அது உண்மையாம்மா?"
கேட்கும்போதே எனக்குக் கண்ணீர் முட்டிக்
கொண்டு வந்தது.
அம்மாவை இன்னும் அதிகமாக
கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை...
அவரு சும்மா சொல்லிட்டுப் போறாரு..
விடு" தலையைக் கோதியபடி அம்மா
ஏதோ ஒப்புக்குச் சமாதானம்
பண்ணினார்.ஆனால் அம்மாவின்
ஸ்பரிசத்தில் என்றுமில்லாதபடி
ஒரு நடுக்கம் தெரிந்தது.நாடி நரம்புகளிலெல்லாம்
மனதின் கலக்கம் பிரதிபலிப்பது
தெரிந்தது.
அப்படியே தலையை உயர்த்தி
அம்மாவைப் பார்த்தேன்.
என்னை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல்
முந்தானையால் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டிருந்தார் அம்மா.
"அழாதேங்கம்மா....அப்பா வந்துருவாங்க"
இப்போது அம்மாவை
நான் தேற்ற ஆரம்பித்தேன்.
இருவரும் ஒருவரை ஒருவர்
கட்டிப்பிடித்தபடி தூணில்
சாய்ந்து உட்கார்ந்திருந்தோம்.
இப்படி எவ்வளவு நேரம் அப்படியே
இருந்தோம் என்று தெரியவில்லை
"எந்தக்குடி மூழ்கி போச்சுன்னு
தாயும் மகளும் இப்படி உட்கார்ந்திருக்கிறீங்க?"
கேட்டுக் கொண்டே வீட்டிற்குள்
வந்தார் எங்கள் மாமா.
"வா தம்பி...உட்கார்."
கட்டிலை நோக்கி கைகாட்டினார் அம்மா.
"என்ன அழுதீங்களா? கண்ணெல்லாம்
சிவந்திருக்கிறது?"
"ஒண்ணுமில்ல...மசாலா அரைச்ச
கையால கண்ணைக் கசக்கிட்டேன்.
கண் எரியுது"
"சும்மா மழுப்பாத...உன்னை எனக்குத்
தெரியாதா?"
மாமா அப்படிக் கேட்டதுதான் தாமதம்.
அம்மா ஓவென்று அழ ஆரம்பித்தார்.
"பாத்தியா...பாத்தியா...
இப்போ எதுக்கு அழுற..
அந்தச் சிதம்பரம் வந்தாரா?"
மாமாவின் குரலில் வெறித்தனமான கோபம்
தெரிந்தது.
"வந்தார்"அதற்கு மேல் எதுவும்
அம்மாவால் பேச முடியவில்லை.
"ஏதும் சத்தம்கித்தம் போட்டாரா?"
"இல்லை தம்பி...அத்தான் எங்க
இருக்காருன்னுதான்
கேட்டார்."
"அதுக்கு நீ என்ன சொன்னாய்?"
"நான் என்ன சொல்லுவேன். எனக்கு
தெரிஞ்சாதானே சொல்ல முடியும்?"
"அத்தான் இன்னைக்கு ஊருக்கு
வருவார் என்று எப்படியோ தெரிஞ்சு
வச்சுகிட்டுத்தான் அவன் அத்தம் பார்க்க
வீட்டுக்கு வந்துருக்கான்."
"அத்தான் வாராவளா? யார்
சொன்னா?"
"நீ ஒருத்தி...உன்கிட்டப் போயி
சொல்றேன் பாரு..."
"ஏய் ....எழும்பி வீட்டுக்குள்ள போ"
அம்மா என்னை அந்த இடத்தைவிட்டு
எழும்பு என்று கட்டளையிடுவதுபோல
இருந்தது.
"அவளை எதுக்குப் போகச் சொல்லுற
அவள் இருந்துட்டுப் போகட்டுமே"
எனக்காகப் பேசினார் மாமா.
நான் அவ்வளவு பெரிய மனுசி
இல்லைதான்.
ஆனால் என்னால் அந்நியப்பட்டு
நிற்க முடியவில்லை.
என்ன... யாது என்று தெரிந்து
கொள்ள வேண்டும் என்ற ஆவல்
முந்தித் தள்ள ...இருவரும் என்ன
சொல்கிறார்கள் என்பதைக்
கவனமாகக் கேட்க ஆரம்பித்தேன்.
"அத்தான் ஊருக்குள்ள வந்தால்
கழுத்தில் துண்டுபோட்டு இழுத்துக்
கடனைக் வச்சிட்டுப் போவும்
என்று கேட்கப் போறானுகளாம்"
இதைக் கேட்டதும் அம்மாவின்
முகத்தில் முன்பைவிடவும்
கூடுதலான கலவரமும் கவலையும்
அப்பிக் கொண்டது.
"அப்படி செய்துபுடுவாவளோ தம்பி?"
"அப்புடிதான் வடக்குத் தெருவுல
பேசிபுட்டானுவளாம். என் சவலப்பாடி
வந்து சொன்னான்"
"அப்புடி பண்ணிப்புட்டானுவன்னா
உங்க அத்தான் உசுரோடேயே
இருக்க மாட்டாவ தம்பி.."
சொல்லிவிட்டு அழுதார் அம்மா.
" எனக்கு அத்தானைப் பற்றித்
தெரியாதா? சரி..சரி....
இப்போ புலம்பி என்ன பிரயோசனம்.?
நான் அப்பவே சொன்னேன்.
இந்த சத்தியவானுக்கெல்லாம் வியாபாரம்
ஒத்துவராது. உள்ள விவசாயத்தைப்
பார்த்துகிட்டாலே செல்லச்சோறு
சாப்பிடலாம்..நீரு வியாபாரத்தை விட்டுரும்
என்று தலையில அடிக்காத
குறையா அடிச்சுகிட்டேன்.
கேட்டாறா....இப்போ குடும்பத்தை
நடுத்தெருவுல கொண்டு
நிறுத்தியிருக்காரு..."
அப்பா மேல்தான் தப்பு
இருப்பதுபோல் பேசினார் மாமா.
"அதைப்பற்றி பேசி இனி என்ன
நடக்கப் போகுது. என்ன செய்யணும்
என்கிறதைத்தான் பார்க்கணும்."
அதைப்பற்றிப் பேசும்போது
அம்மாவின் குரல் கம்மியது.
"இப்போ எதுக்கு கண்ணைக்
கசக்கிட்டு நிற்கிறா...?
நாங்க இல்லையா? எங்களை மீறி
எவன் அத்தான் மேல கையை வச்சிருவான்
என்று
பார்க்கத்தானே போறேன்."
வீறாப்பாகப் பேசினார் மாமா.
"அத்தான் கமிஷன் கடைக்காரர்
சொன்னதுபோல ரூபாய் வாங்கல
இல்லியா?
பிறகு எதுக்குப் பயப்படணும்?
அவன் கேட்டமாதிரி சத்தியம்
பண்ணிக் கொடுத்துட வேண்டியதுதானே...
என்ன ஆனாலும் அப்படி செய்ய மாட்டேன்.
அது பாவம் அது இதுன்னா உலக நீதி
எல்லாம் பேசுனாரு...
இப்போ என்னாச்சு...எந்தப்பயலாவது
அத்தான் பொய் சொல்லமாட்டாரு என்று
நம்புனாங்களா..."
" அவரு சத்தியவான்....
உயிரே போனாலும் சத்தியம்
பண்ணமாட்டார்.இப்படி அத்தானுக்கு
ஒரு பிடிவாதம் உண்டு.
இதை அவரது வீக்னஸ் என்று நினைத்து
அவரை சரியான நேரத்தில்
முதுகில் குத்தியிருக்கான்
அந்த கமிஷன் கடைக்காரன்.
இதுக்கு வேற வழியேஇல்லையா தம்பி?"
அப்பாவியாகக் கேட்டார் அம்மா.
"இனி பணத்தை கொடுத்துதான் ஆவணும்.
வேற என்ன பண்ண முடியும் ?"
"அவ்வளவு பணத்துக்கு எங்க போகமுடியும்
தம்பி.."
"நீ எங்க போயி வாங்குவ...
பயப்படாத..வேறு எங்கேயாவது இருந்து
பணம் புரட்ட முடியுமான்னு
பார்க்கிறேன்..."
"நிலத்தை ஒத்தி வச்சாவது பணம்
புரட்டு தம்பி.."
"அப்படியும் இரண்டு மூணுபேரிடம்
கேட்டுப் பார்த்தேன்.
எல்லோரும் ஒத்திக்கு என்றால்
வேண்டாம். கிரயத்திற்கு தர முடியுமா?"
என்று கேட்கிறார்கள்.
"கிரயத்துக்குக் கொடுத்தா சரிபடாது தம்பி.
முழுசா நிலம் கையை விட்டுப்
போயிடுமே? அப்புறம் பிழைப்புக்கு நாம்
எங்க போவோம்"
அம்மாவிற்கு நிலத்தை விற்பதில்
உடன்பாடு இல்லை
என்பதை இப்படி சொல்லிப் பார்த்தார்.
"என்னம்மா மாமா சொல்றாங்க?"
முதல் முறையாக அம்மாவிடம் கேட்டேன்.
"ம்...உனக்கு வேண்டாம்....நீ போ.."
"மாமா துண்டு போடுவாங்க என்கிறாங்க...."
உனக்கு வேண்டாம் என்று சொன்னேன்
இல்லியா...என்னை எதுவும் கேட்காதே
போ...எங்கேயாவது போய்
தொலை..."அம்மா வெறி வந்தவர்
போல் கத்தினார்.
"உனக்கு கிறுக்குகிறுக்குப் பிடிக்கலியே...
சின்னப்பிள்ளையிடம் போய் என்ன
பேசணும் என்று தெரியாது? "
அம்மாவை மிரட்டினார் மாமா.
"சத்தியவானுக்கு சோதனை வரத்தான்
செய்யும்....என் அத்தான் சத்தியவான்
என்று எனக்குத் தெரியும்....உனக்கு தெரியும்.
இந்த ஊருக்கும் ஒருநாள் தெரியத்தான்
போகுது.பிறகு எதுக்குக்
கண் கலங்குற....."
"எனக்கும் தெரியும் மாமா...."
"பாரு...இந்த சின்ன பிள்ளைக்கு
அவள் அப்பா மேல் உள்ள நம்பிக்கைகூட
உன்னிடம் இல்லையே!..."
"என் அப்பா சத்தியவான்.....என் அப்பா
சத்தியவான் ...."ஆவேசத்தில் உரக்கக்
கத்தியபடி. அம்மாவை
கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
சிறுகதை மிக அருமை.
ReplyDelete