வினைமுற்று
வினைமுற்று
ஒரு பொருளின் செயலை அல்லது
தொழில் நிகழ்ச்சியை உணர்த்தி நிற்பது
வினைச்சொல் எனப்படும்.
படித்தல், தொழுதல்
உழுதல் போன்றவை வினையை
உணர்த்துகின்றன.
செயல் அல்லது
தொழிலைக் குறித்து வந்த
முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று
எனப்படும்.
எடுத்துக்காட்டாக' பாடினார்' என்ற
சொல்லை எடுத்துக் கொள்வோமானால்
இது வினையின் முடிவைக் குறிக்கிறது.
கதிர் ஓடினான்
செல்வி பாடினாள்.
தலைவர் பேசினார்.
மயில் ஆடியது.
பறவைகள் பறந்தன.
இந்தச் சொற்றொடர்களில் ஓடினான்,
பாடினாள், பேசினார், ஆடியது,
பறந்தன ஆகிய சொற்கள் பெயர்ச்சொல்லுக்குத்
துணையாக நின்று தொடரின் பொருளை முடித்துக்
காட்டியுள்ளதால் இவை வினைமுற்று எனப்படும்.
வினைமுற்றானது தெரிநிலை வினைமுற்று,
குறிப்பு வினைமுற்று என இரண்டு வகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று :
திணை, பால் ,எண், காலம் ஆகியவற்றை
வெளிப்படையாக உணர்த்தி நிற்கும் வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
மாணவன் பாடம் படித்தான்.
இதில் படித்தான் என்றசொல் வினைமுற்று ஆகும்.
திணை - உயர்திணை
பால் - ஆண்பால்
எண் - ஒருமை
காலம் - இறந்த காலம்
தெரிநிலை வினைமுற்று உடன்பாட்டு
வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று
என இரண்டு நிலைகளில் வரும்.
உடன்பாட்டு வினைமுற்று:.
செல்வி புத்தகம் படித்தாள்.
படித்தாள் என்பது உடன்பாட்டு வினைமுற்று.
எதிர்மறை வினைமுற்று :
செல்வி புத்தகம் படித்திலள்.
படித்திலள் என்பது எதிர்மறை வினைமுற்று.
எழுதினான், எழுதுகிறான்,
எழுதுவான்- உடன்பாட்டு வினை முற்று
எழுதவில்லை, எழுதமாட்டான்,
எழுதாதே- எதிர்மறை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று :
திணை, பால் ஆகிய இரண்டை
மட்டுமே வெளிப்படையாகக் காட்டுவது
குறிப்பு வினைமுற்று எனப்படும்.
சாந்தினி இனியள்.
இதில் இனியள் என்பது குறிப்பு வினைச்சொல்.
இது தொழிலையோ காலத்தையோ
வெளிப்படையாகக் காட்டவில்லை.
எனினும் இனியவளாக இருந்தாள்.
இனியவளாக இருப்பாள்.
இனியவளாக இருக்கிறாள்.
என்று குறிப்பால் காலத்தை உணர்த்துகிறது.
செய்பவனை மட்டும் வெளிப்படையாக
உணர்த்தி பிறவற்றைக் குறிப்பாக
உணர்த்தும் வினைமுற்று குறிப்பு
வினைமுற்று எனப்படும்.
ஏவல் வினைமுற்று :
முன்னிலையில் நிற்பவரை ஏவுதல்
பொருட்டு வரும் வினைமுற்று
ஏவல் வினைமுற்று எனப்படும்.
1. கட்டளைப் பொருளில் மட்டுமே வரும்.
2. முன்னிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
3. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
ராணி நீ ஆடுவாய்.
நீவீர் பாடுவீர்.
நீவீர் செல்வீர்.
நீ செய்வாய்.
இவற்றில் ஆடுவாய், பாடுவீர்,
செல்வீர், செய்வாய் என்பன
ஏவல் வினை முற்று எனப்படும்.
ஆடுவாய் , செய்வாய் ஆகிய சொற்கள்
முன் நிற்கும் ஒருவனுக்குக்
கட்டளையிடுவதாக வந்துள்ளன.
பாடுவீர் ,செல்வீர் ஆகிய சொற்கள்
முன் நிற்கும் பலருக்குக்
கட்டளையிடுவதாகவும் வந்துள்ளன.
இவ்வாறு முன்னிலையிடத்தில் உள்ளாரை
ஒரு செயலைச் செய்ய கட்டளையிடும்
வினைமுற்று ஏவல் வினைமுற்று
எனப்படும்.
ஏவல் வினைமுற்றானது நட, போ, வா என்று
விகுதி பெறாமலும் வரலாம்.
வாரீர் , படியுங்கள்,உண்ணாய் என்பன போன்று
விகுதி பெற்றும் வரலாம்.
வியங்கோள் வினைமுற்று :
1. வாழ்த்துதல்,வைதல் ,வேண்டுதல்,
விதித்தல் என்னும் நான்கு பொருள்களில்
வரும்.
2. இருதிணை ,ஐம்பால்,
மூவிடத்தும் வரும்.
3. ஒருமை பன்மை பாகுபாடில்லை.
வாழ்க, வளர்க. - வாழ்த்தல் பொருளில்
வந்துள்ள வியங்கோள் வினைமுற்று.
ஒழிக, அழிக - வைதல் பொருளில்
வந்துள்ள வியங்கோள் வினைமுற்று.
அமர்க, உண்க , - விதித்தல்
பொருளில் வந்துள்ள வியங்கோள்
வினைமுற்று.
தருக, ஆட்கொள்க ,
அருள் புரிக - வேண்டல் பொருளில் வந்துள்ள
வியங்கோள் வினைமுற்று.
வாழிய, வாழியர்
இவையும் வியங்கோள் வினைமுற்றுகளாக
வரும்.
வியங்கோள் வினைமுற்று விகுதிகளாவன:
க , ய, என்ற இரு உயிர் எழுத்துகளும்
இய, இயர் என்பன போன்ற விகுதிகள்
வியங்கோள் வினைமுற்றில்
மிகுதியாக வருவதுண்டு.
வாழ்க
வாழிய
வாழியர்
எதிர்மறை வியங்கோள் வினைமுற்று :
கூறற்க - கூறாதே
செல்லற்க - செல்லாதே
வாரற்க - வராதே
என்று எதிர்மறைப் பொருளில்
வியங்கோள் வினைமுற்று வருதல் உண்டு.
ஏவல் வினைமுற்று , வியங்கோள் வினைமுற்று
இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்க.
Comments
Post a Comment