வேளாண் பழமொழி
வேளாண் பழமொழி
வேளாண்மை இல்லா உலகும் இல்லை.
வெள்ளாமை எதிர்பாரா உழவனுமில்லை"
இது என்ன புதுமொழி என்பீர்கள்.
புதுமொழி இல்லைங்க...
இந்த விவசாயி உள்ளத்தில் உதித்த
முதல் பழமொழிங்க...
எல்லாம் ஒரு சிறிய
முயற்சிதான்....
இப்போது பழமொழிக்கு வாங்க...
1. "களை பிடுங்காத பயிர் காற் பயிர் "
பயிரோடு சேர்த்து களையையும் வளரவிட்டால்
களை தாங்க வளரும்.
களை பயிரை வளரவிடாது .
களை மளமளவென்று வளர்ந்து
பயிரை வளர விடாது கீழே
அமுக்கி விடும்.
களை பயிரை வளரவிடாவிட்டால்
பயிர் எப்படி சூரிய வெளிச்சத்திலிருந்து
உணவு தயாரிக்கும்?
அப்படியே கரண்டு போகுமே....
இதைத்தாங்க களை பிடுங்காத பயிர்
காற்பயிர் என்பாங்க.
2. "அகல உழுகிறதைவிட ஆழ உழு"
எப்போதும் கலப்பையைப் பிடுச்சி
உழு ...பிடிச்சி உழு என்பாங்க.
அதாவது கலப்பையை அழுத்திப் பிடித்து
உழுதால்தான் ஆழ உழ முடியும்.
இதைத்தான் கலப்பையைப் பிடுச்சி
உழு... பிடிச்சி உழு என்று சொல்லியிருப்பார்களோ!
என்றோ கேட்ட ஒலி இன்றும்
என் காதுகளில் ஒலிக்கிறது.
ஆழ உழுதால்தான் பயிரின் வேர் பூமிக்கு
அடியில்
வெகு தூரம் வரை சென்று நீரை உறிஞ்சி
வைத்துக் கொள்ளும். அதனால்
பயிர் நல்லமுறையில் வளருமாங்க.
அதனால்தான்
"அகல உழுகிறதைவிட ஆழ உழு "
என்று சொல்றாங்க.
3 "புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு "
புஞ்சைப் பயிருக்கு நாலு உழவு
உழுதால் போதுமாங்க.
புஞ்சைப்பயிர் மானாவாரி பயிராதலால்
குறைந்த அளவு உழவு போதும்.
ஆனால் நஞ்சை பயிருக்கு
முதலாவது இரண்டு மூன்றுமுறை உழணும்
அதன்பிறகு தண்ணீர் பெருக்கி
தொழி உழவு உழணும் என்பார்கள்.
அதன் பின்னர் தழை உரம்
போடணும்.அதன் பின்னர் மறுபடி
மரம் அடிக்க வேண்டும்
இப்படியாக ஏழு உழவு வரை உழணுமாங்க.
அதாவது புஞ்சைப் பயிர்களை விட நஞ்சைப்
பயிருக்கு அதிகப்படியான உழவும்
பராமரிப்பும் தேவை என்பதைத்தாங்க
இப்படி சொல்லியிருக்காங்க.
4. "ஆடிப்பட்டம் தேடி விதை "
ஆடி மாதம் முதல் மழை விழுந்ததும்
தாமதிக்காமல் பயிரிட வேண்டும்.
அப்போதுதான் புரட்டாசி, ஐப்பசி
மாதம் மழை விழுவதற்கு முன்னர்
அறுவடை செய்து விளைச்சலைப்
சிந்தாமல் சிதறாமல் வீடு கொண்டு வந்து
சேர்க்க முடியும்.
அதனால்தான் ஆடிப்பட்டத்தைத்
தவறவிட்டு விடாதீர் என்கிறாங்க.
5. "ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் காட்டும் "
ஆட்டு பிழுக்கை உரமாக
இட்டால் பயிர்கள் நன்கு வளரும்.
மாட்டுச் சாண உரத்தை விட
ஆட்டுப் பிழுக்கையில் தாதுச்சத்துகள்
அதிகமாக உள்ளதாம்.
இதற்காகவே மழைக்காலத்திற்கு
முன்பாகவே வயல்களிலும்
தோட்டத்திலும் மாதக்கணக்காக
ஆட்டுக்கிடை போடுவார்கள்.
கிடையில் அடைக்கப்படும் ஆடுகள், பிழுக்கை
மற்றும் மூத்திரம் எல்லாம் ஒரே இடத்தில்
விழுவதால் நல்ல முறையில் செடிகள்
வளரும். மகசூலும் கிடைக்கும்.
இதைப் பார்த்திருக்கிறேன்.
அதுபோல ஆவாரை இலைகளிலும்
அதிக சத்து உள்ளதால்
பயிர்கள் சற்று வளர்ந்த பின்னர்
ஊடுஉரமாக ஆவாரம்செடிகளில்
உள்ள கிளைகளை நறுக்கிப்
போடுவது நல்ல விளைச்சலுக்கு
வழிவகுக்குமாம்.
அதனால்தான்
பயிர் வளர ஆட்டு உரமும்
அதிக சாகுபடி கிடைக்க
ஆவாரையையும்
ஊடு உரமாகப் போடுங்கள் என்று
சொல்லியிருக்கிறார்கள்.
6."தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம் "
தண்ணீர் செடிகளின் வேர்களுக்கடியில்
வெகுநாட்கள் தேங்கி இருந்தால்
செடிகள் அழுகிவிடும்.
நெல்லுக்கு நீர் தேங்கி இருக்கலாம்.
மற்ற பயிர்களுக்கு மூன்று நாட்களுக்கு
ஒருமுறை அல்லது ஆறுநாட்களுக்கு
ஒருமுறை என்று முறை வைத்துத்
தண்ணீர் பாய்ச்சுவது நீர் தேங்காமல்
பார்த்துக் கொள்வதற்குத் தான்.
ஒருவாரம் தொடர்ந்து மழை பெய்தால் போதும்
பாதிப்பயிர்கள் அழுகிவிடுகிறது.
இது எதனால் நிகழ்கிறது?
வேருக்கடியில் தொடர்ந்து நீர் தேங்கி
இருப்பதால்தான் வேர்கள் அழுகி விடுகின்றன.
ஆனால் குளம் அப்படி இல்லை.
குளத்தில் எப்போதும் நீர்
தேங்கி இருக்க வேண்டும்.
அப்போதுதான் குளத்தைச் சுற்றி உள்ள
இடங்கள் தணுப்பாக இருக்கும்.
மரங்கள் வளரும்.
தண்ணீர் இல்லாக் குளம்
மானாவாரி காடு போல கருவேல
மரங்கள் வளர்ந்து தன் பொலிவை இழந்து
விடும்.
அதனால்தான், தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம் என்று
சொல்வார்கள்.
7."நண்டு ஓட நெல் நடு
நரி ஓட கரும்பு நடு
வண்டி ஓட வாழை நடு
தேர் ஓட தென்னை நடு "
நண்டு சுற்றி வரும் அளவுக்கு
இடைவெளிவிட்டு நெல் நட வேண்டுமாம்.
நரி ஓடுகிற அளவுக்கு இடைவெளி இட்டு
கரும்பு நட வேண்டுமாம்.
வாழைக் கன்று நடும்போது
இரண்டு வாழைக் கன்றுகளுக்கு
இடையில் ஒரு மாட்டு வண்டி
போகிற அளவு இடைவெளி விட வேண்டுமாம்.
மாட்டு வண்டி போகிற அளவுக்கு
என்றால் வண்டிச் சக்கரங்களுக்கு
இடையிலான தூரம் இருக்கும்படி
வாழைக் கன்று நடும்போது
பார்த்துக் கொள்ள வேண்டும்.
தென்னை நடும்போது ஒரு
ஒரு தேர் ஓடுகிற அளவுக்கு இடைவெளி
விட்டு விட வேண்டுமாம்.
இதனால்தான் இவ்வளவு இடைவெளிவிட்டு
நட்டிருந்தாங்களா?
ஓ....எவ்வளவு பெரிய அறிவாளிகள் பாருங்க.
இந்த உண்மை
இவ்வளவு நாளும் தெரியாமல் போயிற்றே!
அருமையான தகவல் இல்லையா!
8."உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கேனும் மிஞ்சாது "
உழத் தொடங்கிய நாள் முதலாக
விதை, கூலி, மாட்டுத் தீவனம்,
ஏர் உழுவுக்கு ஆனச் செலவு,
தண்ணீர் பாய்ச்ச ஆனச் செலவு,
களை பறிக்க கொடுத்தக் கூலி,
உரம் வாங்க செலவிட்டப் பணம்
பூச்சி மருந்து அடிப்பதற்கான செலவு ,
அறுவடைச் செலவு என்று ஒவ்வொன்றையும்
அறுவடை வரை எழுதி வைத்துக் கணக்குப்
பார்த்தால்...
உ...கூம்....ஒன்றும் மிச்சம் இருக்காது.
எல்லாம் செலவிலேயே கழிந்து
போயிருக்கும்.
இதைத்தான் உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கேனும் மிஞ்சாது என்பார்கள்.
ஆமாங்க....தாலி தடயத்தை எல்லாம்
அடகு வைத்து விவசாயம் பார்ப்போம்.
கடைசியில் அடகு வைத்த நகைகளைத்
திரும்ப முடியாமல் ஆண்டுக்கணக்காக
வட்டியும் கட்ட முடியாமல் முதலையும்
திருப்பிச் செலுத்த முடியாமல் கடைசியில்
கூட்டுறவு வங்கியில் இருந்து
ஏலம் போடப் போகிறோம் என்று
பெயரோடு நாளிதழில் விளம்பரப்படுத்தி
நோட்டீசும் வீட்டுக்கு வர
மொத்த குடும்பமும் அவமானப்பட்டு
அல்லோலப்பட்டு தற்கொலை செய்துவிடலாமா
என்று சொல்லி கண்ணீர் வடித்து
நிற்பதுதாங்க எங்களைப் போன்ற
பெரும்பாலான விவசாயிங்க நிலைமை.
எங்களை எப்படித் தெரிந்து
வைத்திருக்கிறார்கள் பாருங்கள்....!
wow
ReplyDelete