ஆழ அமுக்கி முகக்கினும்...

ஆழ அமுக்கி முகக்கினும்....


ஆழ அமுக்கி முகக்கினும்  ஆழ்கடல்நீர்
நாழி முகவாது .... ...."
இது ஔவையின்  மூதுரையில் உள்ள
ஓர் அருமையான பாடல்.


 கருத்துள்ள பாடல்.
வயிற்றுக்கு உணவில்லாத போதெல்லாம் நினைத்துப்பார்க்க
வைக்கும் பாடல்.

 வெறுமனே உணவுக்கான
பாடல் மட்டுமல்ல.
அறிவியல் கருத்துள்ள பாடல்
 என்றே சொல்ல வேண்டும்.
 
பாடல் பாடிய களம் எப்போதும்போல
போகிற போக்கில் ஔவை பாடியதாக
இருந்தாலும்  பாடலின் கருத்து நம்மை நின்று 
கேட்க வைக்கிறது.
நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.

உலக நடைமுறையும் இதுதானே என்று
உணர வைக்கிறது.

எதுவும் கொடுத்து வைக்க வேண்டும்
என்று சொல்வார்கள்.
அந்தக் கொடுப்பினை எல்லோருக்கும்
அமைந்துவிட்டது.
கண்முன்னே உணவிருக்கும் உண்ண
முடியாது.
சில நேரங்களில் கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலேயே போய்விடும்.

சட்டி நிறைய உணவு இருந்தாலும்
கடைசி நேரத்தில் சாப்பிடமுடியாமல்
போய்விடும்.சூழ்நிலை அப்படி
அமைந்துவிடும். ரயில் பயணங்களில் போது
அனைவரும் ருசித்து வாங்கிச் சாப்பிடும்
ஒருபொருளை வாங்கிச் சாப்பிட
ஆசைப்பட்டு நாமும் வாங்க செல்வோம்.
ஆனால் நாம் போன நேரம் பார்த்து
அந்தப் பண்டம் தீர்ந்து போயிருக்கும்.
அல்லது நாம் இறங்கிப் போகும் முன்னர்
ரயில் புறப்பட்டு விடும்.
அதனால் கைக்கு எட்டிய தூரத்தில்
பொருள் இருந்தும் வாங்கி சாப்பிட முடியாமல்
போயிருக்கும்.

மாட்டு மடியில் சொம்பு நிறைய
பால் கறந்திருப்போம்.
கடைசியில் ஒரே உதையில் 
மொத்த பாலும் கீழே கவிழ்ந்து
யாருக்கும் பயனில்லாது போய்விடும்.
நன்றாக இதுவரை பால் கறந்த
மாட்டுக்கு இன்று என்ன ஆயிற்று? 
மொத்த பாலும் வீணாகிவிட்டதே?

இதற்கு எல்லாம் காரணம் என்ன?
இன்று நமக்கு அளிக்கப்பட்ட படி இவ்வளவுதான் எப்போதாவது
எப்போதாவது சிந்தித்தோமா ? 

சாப்பாடு இல்லையா ஏன் சமைக்கவில்லை சம்பந்தப்பட்டவர்மீது கோபத்தைக்
காட்டுவதைத் தவிர வேறு ஒன்றும்
தெரிந்திருக்காது.

இதுதான் நாம்.
இப்போது இந்தப் பாடல் பிறந்த
கதைக்கு வருவோம்.

ஓர் ஊரில் ஏகன் என்று ஒரு விவசாயி 
இருந்திருக்கிறான். அவனுடைய மனைவி வள்ளி.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து
வந்திருக்கின்றனர்.

ஏகன்  நாள்தோறும் வயலுக்குச் சென்று 
வேலை செய்துவிட்டு மாலை வருவது வழக்கம்.

வரும்போது அவன் மனைவி வள்ளி
நன்றாக சமைத்து வைத்து பறிமாறுவாள்.
இன்று வயலுக்குச் செல்லும் போது 
வரகு சோறு ஆக்கி வைக்க சொல்லிவிட்டு
சென்றுவிட்டான் ஏகன்.
வள்ளியும் அவன் சொன்னதுபோலவே
வரகு சோறும் கறியும் சமைத்து
வைத்திருந்தாள். 

சமையல் முடிந்ததுமே கொஞ்சம்
சாப்பிட்டுப்  பார்ப்போமே என்று ருசி 
பார்த்தாள்.
வரகு சோறுக்கும் கறிக்கும்
பொருத்தம் பிரமாதம்.

முதலாவது சிறிது ருசி பார்த்தவளுக்கு
அந்த ருசி இன்னும் கொஞ்சம் தின்னச்
சொல்லி இழுத்தது.
மீண்டும் மீண்டும் சாப்பிட்டாள்.
இப்போது சட்டியில் இருந்த மொத்த
சோறும் தீர்ந்து போயிற்று.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா?
வள்ளியை விட்டு வைக்குமா என்ன?அப்படியே படுத்துக் தூங்கிவிட்டாள்.

ஏகன் வயிற்றுப் பசியோடு
வீட்டிற்கு வருகிறான்.
அங்கே மனைவி நிம்மதியாகத் தூங்கிக்
கொண்டிருக்கிறாள்.
சரி...அப்படியே தூங்கட்டும் 
வேலை செய்த களைப்பில்
தூங்குகிறாள் என்று 
நினைத்துக்கொண்டு விட்டுவிட்டான்.

சமையலறைக்குள் சென்று
பார்க்கிறான்.
உணவு உண்ண பானையைத் 
திறந்தால்
பானையில் ஒன்றுமில்லை..
தின்றது தான் தின்றாள் .
தின்ற பாத்திரத்தைக்  கூடவா
கழுவி வைக்கக்கூடாது.
என்ன பெண் இவள் ?
இப்போது ஏகனுக்கு 
வள்ளி மீது எரிச்சல் வந்தது.

ஆத்திரம் என்றால்
ஆத்திரம் .தின்னதுமல்லாமல் தான் வந்ததுகூட
தெரியாமல் எப்படி
கிடந்து தூங்குகிறாள் என்று ஆத்திரத்தில்
கையில் கிடைத்த கம்பை எடுத்து
அடித்து விட்டான்.

அடிபட்ட வலியில் அம்மா என்று
அலறியபடி துள்ளி எழும்பினாள் வள்ளி.

"சோறு கூட பொங்கி வைக்காமல் அப்படி என்ன தூக்கம்? சாடினான்.
அத்தோடு
விட்டுவிடவில்லை.
"போ...என் கண் முன்னாலேயே நிற்காதே இப்போதே உன் பெற்றோர் வீட்டுக்குப் போய்விட்டு"என்று
அவளுடைய பெற்றோர் வீட்டுக்குத் துரத்திவிட்டான்.

இப்போது வள்ளிக்கு பெற்றோர் வீட்டுக்குச்
செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அரை மனதோடு வீட்டைவிட்டு வெளியேறி 
பெற்றோர் இருக்கும் ஊரை நோக்கிச் செல்கிறாள்.
கால்கள் முன்னே செல்ல மறுத்தன.

வழியில் உள்ள ஒரு
மாமர  நிழலில் அமர்ந்து பெற்றோர்
வீட்டிற்குச் போவதா?
 வேண்டாமா ?என யோசித்தபடி
 அமர்ந்திருக்கிறாள்.
" பெற்றோர் வீட்டு வாசலில் போய் நின்றால்....
கணவனுக்கு சோறு வைக்காமல்
மொத்தத்தையும் தின்றுவிட்டு அடிவாங்கி வந்து
நிற்கிறாள் என்று ஊரே அவமானமாகப் பேசுமே..."
ஏதேதோ நினைவுகள் வர ஒரு கலக்கத்தோடு
 நெடுநேரம் அங்கேயே
உட்கார்ந்திருந்தாள்.

வீட்டிலிருந்த கணவனுக்கும் வள்ளியை
விட்டுவிட்டு வீட்டில் இருப்பு
கொள்ளவில்லை. "சோறு சாப்பிட்டதற்காக
யாராவது மனைவியை அடிப்பார்களா? 
இப்படி மனைவியைத் துரத்திவிட்டால்
மனைவிக்கு சோறு போடாதவன் என்ற 
அவப்பெயர் அல்லவா  வந்து சேரும்.
எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி
கூட்டி வர வேண்டும் "என்று ஏகனும்
 அங்கே வருகிறான்.

வள்ளியைப் பார்த்ததும் "வா... வீட்டுக்குப்
போகலாம் "என்று அழைத்தான்.
கெஞ்சினால் மிஞ்சுகிறவள் வள்ளி.
"வரமாட்டேன் ....வரமாட்டேன்"
என்று முரண்டு பிடித்தாள்.
ஏகன் கையைப் பிடித்து இழுக்க.
அவள் விலகி ஓட..
ஏதோ சண்டை நடப்பது போல இருந்தது.

அந்த நேரம் பார்த்து ஔவையும்
அந்தப் பக்கமாக வர...
என்ன... யாது  உங்கள் பிரச்சினை?என்று விசாரிக்கிறார் ஔவை.

இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபடி யார் முதலில் சொல்வது என்று
தயங்கி நிற்கின்றனர்.

"யாராவது ஒருத்தர் பேசினால் தானே உங்கள் பிரச்சினை என்ன என்று
அறிந்து கொள்ள முடியும்"
என்றார் ஔவை.

இருவரும் நடந்ததைச் கூறி தங்கள்
தரப்பு ஞாயத்தை ஔவையின்முன்
வைக்கின்றனர்.

அவர்கள் வழக்கைத் தீர்த்து வைப்பதற்காக
ஔவை பாடிய பாடல்தான் இது.

அவர்களுக்காக ஔவை பாடிய பாடல்
இதோ உங்களுக்காக...


"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி - ,தோழி
நிதியுங்   கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்."

            மூதுரை - 19 


"ஆழமான கடலில் நிறைய நீர்
நிறைந்திருக்கிறது. அதில்ஸ் 
ஒரு படி அளவு கொள்ளும் அளவையை
 வைத்துக் கொண்டு 
நாலு படி அளவு நீரை மொண்டுவிட
முடியுமா?
முடியாதல்லவா?
தோழியே கேள்...
 பெண்களுக்கு எவ்வளவுதான் பொருளும்
 நல்ல கணவனும் கிடைத்திருந்தாலும்
 அவரவர்க்கென்று விதித்த அளவின்படியே
 அவற்றை அனுபவிக்க முடியும்.
 அளவுக்கு அதிகமாக நுகர்ந்துவிடலாம்
என்று நினைத்தால்  அது கூடாத காரியம்"
இதுதான்  பாடலின் பொருள்.

"இன்றைக்கு உனக்கு நேர்ந்த படி 
இவ்வளவுதான்.
இப்படி நினைத்து மனதை தேற்றிக் கொள்.
அதற்காக ஒருவருக்கு ஒருவர் சண்டை
போட்டுக் கொள்வதில் எந்த பயனும்
கிடைக்கப் போவதில்லை.
இதுதான் விதி.இந்த உண்மையைப்
புரிந்துகொண்டு சண்டையில்லாமல் மகிழ்ச்சியாக
வாழுங்கள்" என்று சமாதானப்படுத்தி
அனுப்பி வைக்கிறார் ஔவை.

எல்லாம் கடவுள் விட்ட விதிப்படிதான்
நடக்கும் என்று விரக்தி வந்த பின்னர்
கடைசியாக  நமக்கு நாமே ஏதேதோ பேசி
சமாதானம் செய்து கொள்வோம்.
ஆனால் சாப்பாட்டு விசயத்திலும்
விதிப்படிதான் நடக்கும் என்பது 
இப்போதுதான் புரிகிறது.


இப்போது நமக்கு ஒன்று நினைவுக்கு வரலாம்.
ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் கடவுள்
பெயர் எழுதி வைத்திருப்பாராம்.
நமக்கானது  மட்டுமே நமக்கு கிடைக்குமாம்.

அதைத்தான் ஔவை வேறுவிதமாக
சொல்லி இருக்கிறார்.
எது எப்படி சொல்லியிருந்தாலும் உண்மையும்
அதுதானே!

நாம் அனைவரும் கடைசியாக ஒத்துக்
கொள்ளும் கருத்தும் இதுதானே!
 

Comments

  1. ஔவையின் பாடலை கதையோடு விளக்கி நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் விருப்பப்படி தான் நடக்கும் என்று கூறியிருப்பது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts