அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
இழப்பு என்பது
இதுவும் கடந்து போகும்
என்று எளிதாக சொல்லிவிட்டு
கடந்து போகக்கூடியதல்ல.
ஆறா ரணத்தைக் கொடுக்கக்
கூடியது.
நினைவுகள் நம்மைவிட்டு அகலாது.
எங்கோ ஒரு மூலையில் நம்மோடு
பயணித்துக் கொண்டே இருக்கும்.
மறந்தது போல இருக்கும்.
ஆனால் மறக்காது.
அவர்கள் இருந்த இடத்தைப் பார்க்கும்போது
அப்படியே கலங்கிப் போவோம்.
அவர்கள் பயன்படுத்திய
பொருட்கள் வீட்டில் இருந்து அவர்களை
நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
அவர்களோடு பழகிய
நாட்களில் பேசிய பேச்சு நினைவில் வந்து
தூங்கவிடாமல் செய்யும்.
இவை யாவும் மறுபடியும் மறுபடியும்
நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கும்.
இப்படித்தான் ஒரு புலவருக்கு
ஒரு மன்னன் இறந்துபோன பின்னர்
மன்னனின் நினைவு வந்து
மிகவும் கலக்கத்தைத்
தந்து கொண்டே இருக்கிறதாம்.
அந்த நினைவை கவிதையில்
சொல்லியிருக்கிறார்.
அந்த நினைவை நம் கண்முன்
கொண்டு வருவதற்காக அவர்
உயிரோட்டமுள்ள இன்னொரு
கதையைச் சொல்லியிருக்கும் விதம்
நம்மையும் கண் கலங்க வைக்கிறது.
அது என்னவென்று பார்ப்போம்.
வாருங்கள்.
"பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதல் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில்பா ழாகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
கலங்கினேன் அல்லனோ யானே!
பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே"
- பொத்தியார்
பாகன் ஒருவன் கவளங்கவளமாக
உணவூட்டி நாளும் பொழுதும் கூடவே
இருந்து யானை ஒன்றினைக் கவனமாகப்
பராமரித்து வருகிறான் .
அதனால் யானைக்கும் பாகனுக்கும் இடையில்
ஒரு பிரிக்க முடியாத பந்தம்
ஏற்பட்டு விடுகிறது.
இப்படி இருக்கையில் ஒருநாள்
அந்த யானை இறந்து போய்விடுகிறது.
பாகனுக்கோ அந்த யானையின்
இழப்பு தாங்க முடியவில்லை.
நாளும் யானைக் கட்டியிருந்த
இடத்திற்குச் செல்கிறான்.
அங்கு இப்போது யானை இல்லை.
யானையைக் கட்டிய கயிறு மட்டும்
கிடக்கிறது.
அந்த இடம் பாழாகக் கிடக்கிறது.
பார்த்துப் பார்த்து ஏங்குகிறான்.
அந்த வெறுமை அவனை கண்ணீர்
சிந்த வைக்கிறது.
யானை கம்பீரமாக நின்ற இடம்.
இன்று வெறுமையாக கிடக்கிறதே
என உள்ளம் வெதும்புகிறான்.
யானை கட்டியிருந்த இடம் களையிழந்து
காணப்படுகிறது.
அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம்
யானையின் நினைப்பு வந்து
அவனை நோகடிக்கிறது.
யானை நின்ற இடம் மட்டுமல்ல.
பாகனின் மனதிலும் ஒரு
வெறுமை வந்து குடிகொண்டுவிட்டது.
அது போன்று தான் இந்தப் புலவரின்
நிலையும் இப்போது ஆகிவிட்டதாம்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
பொன்மாலை
தவழும் மார்பன் என் மன்னன்
வள்ளன்மை மிக்கவன்.
இப்படிப்பட்ட எம்
கிள்ளி மன்னன்
பெரும்புகழ் மூதூர் மன்றத்தில்
கம்பீரமாக அமர்ந்திருந்திருந்து
ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
புலவர்களுக்குப் பரிசளித்து
பாராட்டி மகிழ்ந்த இடம் இம்மன்றம்.
குடிமக்களுக்கு நல்ல நீதி வழங்கி
கம்பீரமாக வீற்றிருந்த இடம்.
அப்படிப்பட்டதான இந்த மன்றம்
இப்போது மன்னனை இழந்து
வெறுமையாய்க் காணப்படுகிறது.
மன்னன் மீளாத் துயில் கொண்டான்.
என்னை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டான்.
அவன் இருந்து அணி செய்த
இடமும் அந்தக் காட்சியும்
என் நினைவில் வந்து என்னைக்
கலங்க வைக்கிறது.
கண்ணீர் சிந்த வைக்கிறது.
இவ்வுலகைவிட்டு என்
நண்பன் சென்றுவிட்டான் என்பது
எனக்குத் தாங்கொண்ணா துக்கத்தைத்
தந்து என்னைப் புலம்ப
வைக்கிறது என்கிறார் புலவர்.
யானை கட்டிய தறியின் வழியாக
தனது துக்கத்தை எவ்வளவு அழகாக
வெளிப்படுத்தியிருக்கிறார்
பொத்தியார் என்னும் புலவர்.
பொத்திப் பொத்தி வைத்தாலும்
பொத்தியாரால் துக்கத்தைப்
பொத்தி வைக்க முடியவில்லை பாருங்கள்!
வார்த்தைகளாய் நம்முன் வந்து
நிற்கின்றன.
இதுதான் நல்ல ஆட்சியாளர்கள் மீது
குடிமக்கள் கொண்ட அன்பு!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
The poet Pothiar's lost was unforgettable for him was illustrated by another elephant's story was excellent. Talented teacher.
ReplyDeleteநம் வாழ்க்கையோடு நெருங்கிய சில மனிதர்களை பிரிந்து தவிக்கும் தருணத்தை அழகாக அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்று கூறி இருப்பது மிகச் சிறப்பு.
ReplyDelete