உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?



"வெற்றி வேண்டுமா 
போட்டுப் பாரடா
எதிர்நீச்சல் 
அட சரிதான் போடா
தலைவிதி என்பது
வெறுங்கூச்சல்....."

பாடலைக் கேட்கும்போது
நன்றாகத்தான் இருக்கிறது.

எதிர்நீச்சல் போடும்போதல்லவா
தெரியும் எத்தனை குட்டிக்கரணம் 
போட வேண்டும் என்பது....
முள்ளில் விழுந்து
முடங்கில் நொடிந்து
கல்லில் முட்டி
சுழியில் உருண்டு பிரண்டு
ஒருவழியாக கரையேறும்முன்
மூச்சு ஆயிரம் முறை அடங்கிப்
போயிருக்கும்.

அதனால்தான் நமக்கு எதற்கு இந்த
வம்பு. இப்படியே ஒதுங்கிப் போய்விடுவோம்.
என்று ஒரு முடிவெடுத்துவிடுவோம்.

இப்படி ஒதுங்கி ஒதுங்கி பதங்கிபதுங்கி
பம்மிப் பம்மியே பாதி நாட்களைத் 
தொலைத்திருப்போம்.

உழைக்க மறந்திருப்போம்.
சீச்சீ...இந்தப் பழம் புளிக்கும் என்று
வெற்றிப் பக்கமே தலைவைத்துப்
படுக்காதிருப்போம்.

இதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் பாட்டுக்கு மூலையில் 
முடங்கிக் கிடந்திருப்போம்

தொலைந்தவர்களை தொலையட்டும்
என்று இந்த உலகம் விட்டுவிடுமா என்ன ?

தொலைந்தவர்களைத் தேடிப் பிடித்து
தொல்லை தருவதில் வல்லவர்களாயிற்றே!

நம்மைச் சும்மா விட்டுவிடுவார்களா?
வேண்டுமென்றே ஓடும் நீருக்குள் தள்ளி
கூடவே ஒப்பாரி வைப்பார்கள்.

நீருக்குள் கிடக்கும் நாமும் ஒப்பாரி
வைத்தால்....
கரையேற வேண்டுமே!
என்ன செய்வது? 
எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும்.

அப்படி ஒரு வெறி உள்ளுக்குள் வரும்.
கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு வெளியில்
வந்துவிட வேண்டும் என்ற முனைப்பு இருக்கும்.
கால் கை எல்லாம் நம்மையும் அறியாமலே
செயல்படும். 

இறுதியில் கரையேறி விட்டு அப்பாடா
என்று ஒரு
பெருமூச்சு விடுவோம் பாருங்க...
அதில் அத்தனை துன்பங்களும்
மறந்து போகும்.

இதுதாங்க ....இவ்வளவு துன்பங்களையும்
கடந்து வந்ததற்கு கிடைத்த பரிசு.
மகிழ்ச்சிதான் எல்லா துன்பங்களையும்
கடந்துவந்த பின்னர் கிடைக்கும் பரிசு.


உலகம் நம்மை சரியான பாதையில்
செல்லவிடாது முட்டுக்கட்டையிடலாம்.
அதற்காக முயற்சியைக் கைவிட்டுவிட்டால்.....
பாதிக் கிணறு தாண்டியவன்
கதையாகி விடும்.

முழு கிணற்றையும் தாண்ட
ஓயா உழைப்பும் பயிற்சியும் வேண்டும்.


வெற்றி பெற்ற மனிதர்களை இந்த
உலகம் கொண்டாடும். வாழ்க்கையில்
தோல்வியடைந்துவிட்டால் தொய்த்து
எடுத்துவிடும். இதுதான் உலகம்.

எல்லோருக்குமே வெற்றிபெறவேண்டும்
என்ற ஆசை இருக்கும். 
அந்த ஆசை எல்லோருக்கும்
நிறைவேறுவதில்லை . நிறைவேறுவதில்லையா?
நிறைவேற்றவேண்டும் என்ற முனைப்பு
நம்மிடம் இல்லையா?

காரணம் என்னவாக இருக்கும் ? வெற்றி
என்பது ஒரே நாள் இரவோடு இரவாக
வந்து வாசல் கதவைத் தட்டிக்கொண்டு 
நிற்பதில்லை.

பலநாள் கனவு ஒருநாள் நனவாகும்.
அப்படியானால் பலநாள் கனவு கண்டுக்
கொண்டே இருந்தால் அது நனவாகிவிடுமா? என்று
கேட்கத் தோன்றும். எல்லாவற்றுக்கும் ஒரே
விடை உழைப்பு என்பது 
மட்டும்தான்.

உழைப்பு !உழைப்பு !உழைப்பு!
உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ?

உழைப்பு மட்டுமே வெற்றியைக் கொடுக்கும்.
ஆனால் நான் தொடர் உழைப்பைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறேனே!

வெற்றி என் பக்கம் எட்டிகூட
பார்க்க மாட்டேன் என்கிறதே என்ற
அங்கலாய்ப்பு உங்களுக்குள் இருக்கலாம்.
தாமதமாக கிடைப்பதால்
வெற்றி இல்லை என்று ஆகிவிடுமா?

அதற்காக உழைப்பை மட்டும்
ஒருபோதும்  கைவிட்டு விடாதீர்கள்.

எல்லோரும் கைவிட்டாலும் உங்கள்
உழைப்பு மட்டும் உங்களை ஒருபோதும்
கைவிட்டுவிடப் போவதில்லை.

உழைப்போடு சூழலும் உகந்ததாக 
அமைந்துவிட்டால்....
வெற்றி எளிதாக வந்துவிடும்.
சூழல் சாதகமில்லாமல் இருந்தாலும்
தொடர் உழைப்பு இருந்து கொண்டே இருந்தால்
வெற்றி நிச்சயம்.

வெற்றியாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்
பார்த்தால் இந்த உண்மை நமக்கு
எளிதாக விளங்கும்.
"உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ"
என்றார் பட்டினத்தடிகள்.

துன்பப்பட்டு முயல்வதால் கிடைக்காத
உறுதிப்பாடுகளும் இருக்கின்றனவா?
சோம்பலால் கிடைக்காத துன்பங்களும்
இருக்கின்றனவா?என்பதுதான் இதன் பொருள்.

துன்பம் தருவதுதான் உழைப்பு.
மறுப்பதற்கில்லை.
அது துன்பம் தருகிறதே என்று
உழைப்பைக் கைவிட்டுவிடலாமா? 
அது சோம்பேறிகளுக்கு மட்டுமே
இயலக்கூடிய ஒன்று.

துன்பப்பட்டு துயரப்பட்டு ஓடி ஓடி 
உழைக்கும் ஒருவனால் அதன் 
பலனை அறுவடை
செய்யாமல் இருக்கமுடியாது.
அதன் பலன்  இறுதியில் 
இன்பத்தைத் தரும்.
தொடர் துன்பத்தை அனுபவிக்க
 வேண்டுமா? என்று
சோம்பி இருந்து கொண்டால் இறுதியில்
துன்பம் நிரந்தரமாக குடியுரிமை வாங்கி
நம்மோடு தங்கிவிடும்.

மூலதனமில்லாமல் தொழில் செய்ய முடியாது.
உழைப்பு என்னும் மூலதனமில்லாமல்
வெற்றிக்கனியை நுகர்ந்திட முடியாது.

சோம்பலைக் கைவிட்டுவிட்டு
உழைப்பில் மட்டுமே கவனம்
செலுத்துங்கள்.

உழைப்பின்  வாரா உறுதிகள் உளவோ! 

Comments

  1. உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை என்னும் கட்டுரை மிகச் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts