தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
"ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்"
"ஒருவர் தனக்கு இயலும் செயலையும்
அதைப்பற்றிய அறிவையும் பெற்று
தன்னம்பிக்கையோடு உறுதியாக
செயல்படும்போது அவரால் முடியாதது
என்று எதுவும் இருக்க முடியாது"
என்கிறார் வள்ளுவர்.
" தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால்
வெற்றி உன்னை நெருங்குகிறது"
என்பார் மாவீரன் நெப்போலியன்.
எவ்வளவு தன்னம்பிக்கை தரும் வரிகள் பாருங்கள்.
தோல்வி வந்து துவண்டு நிற்கும்போது கூட
கண்ணுக்கு எட்டும் தூரத்தில்தான்
வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையை
வளர்த்துக்கொள்ளுங்கள்.
வெற்றி உங்கள் கைவசம் என்பதைத்தான்
அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
முதலாவது நம்மீது நமக்கு நம்பிக்கை
இருக்க வேண்டும்.
நம்மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே
எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன்
செய்து வெற்றி காண முடியும்.
ஒரு நேர்முகத் தேர்வுக்கு ஐந்துபேர்
அழைக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு நடத்தியவர்
ஒவ்வொருவரிடமும் தன்னம்பிக்கைக்கு
எடுத்துக்காட்டு யார் என்று ஒரு ஆளை
அடையாளம் காட்டவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
அதற்கான காரணத்தையும் சரியாகச்
சொல்ல வேண்டும் என்றார்.
முதலாமவர்,
என்னைக் கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன் தான்
தன்னம்பிக்கை நாயகன் என்று கூறுவேன்.
ஆயிரம் முறை தோற்றாலும்
தொடர்ந்து போராடி வெற்றி கண்டவர்
தாமஸ் ஆல்வா எடிசன்.
தனது ஆராய்ச்சிக்கூடமே எரிந்து
சாம்பலானபோதும்கூட
தன்னம்பிக்கையோடு போராடி
வெற்றி கண்டவர் அவர்.
நாம் இன்று நுகரும்
மின்சாரமும் அதைச் சார்ந்த நூற்றுக் கணக்கான
உபகரணங்களும் அவருடைய உழைப்பால்
நமக்குக் கிடைத்த கொடை என்றுதான்
சொல்லுவேன்.அவர் இல்லை என்றால
இவ்வுலகம் இருட்டில் உழன்று
கொண்டிருந்திருக்கும் .
ஆதலால் தாமஸ் ஆல்வா எடிசன்தான்
தன்னம்பிக்கை நாயகன் என்ற எனது
தேர்வு சரியாக இருக்கும் என்று
நினைக்கிறேன் என்று சொல்லி
முடித்துக் கொண்டார்.
அடுத்தவர் இங்கிலாந்தில் உள்ள நாடக
அரங்குகளில் திரைச்சீலையை ஏற்றி
இறக்கும் சாதாரண மனிதனாக இருந்து
உலக புகழ் பெற்ற நாடகங்களை
எழுதி நாடக உலகில் தனக்கென தனி
முத்திரை பதித்த ஷேக்ஸ்பியர்தான்
தன்னம்பிக்கை நாயகன் என்பேன்.
பெரிய படிப்பாளியாக இல்லாவிட்டாலும்
தன்னாலும் படைப்புலகில் சாதனை படைக்க
முடியும் என்று தன்மீது அவர் வைத்திருந்த
தன்னம்பிக்கையால்தான் அவரால்
இந்த அளவுக்கு உயரத்தை
எட்டிப்பிடிக்க முடிந்தது என்று நினைக்கிறேன்.
அதனால் ஷேக்ஸ்பியர் தான் என் தன்னம்பிக்கை
நாயகன் என்றார்.
வாழ்வது ஒருமுறைதான். அதில் சாதாரண
எழுத்தராக இருந்து ஏன் சாக வேண்டும்?
என்று தான் வேலை பார்த்த எழுத்தர்
வேலையை விட்டுவிட்டு முழு நேர
எழுத்தாளர் ஆனார் பெர்னாட்ஷா.
ஆரம்பத்தில் எத்தனையோ பத்திரிகை
அலுவலக கதவுகளைத் தட்டியும்
அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை.
தொடர் முயற்சியும் தன்னம்பிக்கையும்
கொண்டு போராடி தனக்கென எழுத்துலகில்
தனியிடம் பெற்ற பெர்னாட்ஷா தான்
தன்னம்பிக்கை நாயகன் என்றார்
மூன்றாமவர்.
உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ
ஊனமோ ஒருவருடைய வாழ்க்கைப்
பாதையை மாற்றி அமைத்து முடங்கிப்
போட்டுவிட முடியாது என்பதற்கு
உதாரணயாக இருந்து அறிவியல் ஆய்வுகளை
சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே
செய்து அண்டவெளியை அண்ணாந்து
பார்த்து வியக்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
அண்டவெளி ஆய்வினை மேற்கொண்டு
கருந்துளை கோட்பாட்டை
எளிதில் புரிய வைக்க கடும் ஆய்வுகளை
தொடர்ந்து மேற்கொண்டு
வெற்றி கண்ட ஸ்டீபன் ஹாக்கிங் தான்
உலகின் தலை சிறந்த தன்னம்பிக்கை நாயகன்
என்று சொல்வேன் என்றார் நான்காமவர்.
சாதாரண தொழிலாளியாய் வாழ்க்கையைத்
தொடங்கி இன்று உலகத்தின் முதல் பணக்காரர்கள்
வரிசையில் நிற்கும் பில்கேட்ஸ்தான்
தன்னம்பிக்கை நாயகன் என்றார்
ஐந்தாவது நபர்.
ஆனால் யாருமே நான்தான்
தன்னம்பிக்கை நாயகன் என்று
சொல்லவே இல்லை.
ஷேக்ஸ்பியருக்கு இருந்த தன்னம்பிக்கை,
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருந்த தன்னம்பிக்கை
பில்கேட்ஸ்சுக்கு இருந்த தன்னம்பிக்கை
ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இருந்த தன்னம்பிக்கை.
பெர்னாட் ஷாவிற்கு இருந்த தன்னம்பிக்கை
தம்மிடம் இல்லாமல் போயிற்று.
உங்களிடம் அந்தத் தன்னம்பிக்கை
இல்லையா என்று திருப்பிக் கேட்டார்
நேர்காணல் நடத்தியவர்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு
தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.
முதலாவது உங்களுக்குள் தன்னம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை இருப்பவனால் மட்டுமே
எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும்
என்று ஐவரையும் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனால் சொல்ல வந்த செய்தி யாதெனில்
அங்கே இருக்கிறது தன்னம்பிக்கை.
இங்கே இருக்கிறது தன்னம்பிக்கை என்று
அங்கேயும் இங்கேயும் சுட்டிக்காட்டிவிட்டு
நம்மிடம் இருக்கும் நம்பிக்கையைக்
கண்டு கொள்ளாமலேயே விட்டு விடுகிறோம்.
உன்னையே நீ அறிந்துகொள்..
எல்லாம் இருந்தாலும் இல்லை ..இல்லை என்று
சொல்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
ஒன்றுமே இல்லை என்றாலும் என்னிடம்
தன்னம்பிக்கை இருக்கிறது என்ற வைராக்கியமும்
விடாமுயற்சியும் இருப்பவனிடம் இல்லை என்ற சொல்
இல்லாமல் போய்விடும்.
வசதி வாய்ப்புகள் இல்லாதிருக்கலாம்.
பரவாயில்லை...தொடர்ந்து வாய்ப்பைப்
பெற்றுவிட வேண்டும் என்ற போராட்டம்...
முந்திச் செல்ல நாம் எடுக்கும் முயற்சி
எதுவும் நம்மை பிந்தித் தள்ளி விடாது.
உந்தி முன்னே தள்ள உங்களுக்குள்
இருக்கும் தன்னம்பிக்கை ஒன்று
மட்டுமே போதும்.
எத்தனைமுறை விழுந்தாலும் எழுவேன்
என்ற தன்னம்பிக்கை வேண்டும்.
யாராவது தூக்கிவிடுவார்களா...என்று
அங்கேயும் இங்கேயும் பார்த்துக்
கொண்டிருந்தால் விழுந்த இடத்தில் அப்படியே
கிடக்க வேண்டியதுதான்.
எதிர்பார்ப்பு இருக்கலாம்... ...ஒருவேளை ஒருவருமே
கைதூக்கி விட வரவில்லை என்றால் .....
அப்படி அங்கேயே கிடக்கப் போகிறீர்களா?
முடக்குவதற்கு ஆயிரம் காரணங்கள்
முன்னே வந்து நிற்கும்.
என்னை முடக்குவதற்கு நீ யார்
என்று எழும்பி வந்து நிற்க
உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை
ஒன்று மட்டுமே போதும்.
உன்னை நம்பி எழும்பு. அப்போதுதான்
எப்போதும் நிமிர்ந்து நிற்க முடியும்.
ஊன்றுகோல் துணையோடு எழும்பி நின்றால்
ஊன்றுகோல் ஒருநாள் காணாமல் போய்விட்டால்....!
தட்டுத் தடுமாற வேண்டி இருக்கும்.
எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும்
உன்னிடம் கடைசியாக கையில் இருக்கும்
ஆயுதம் ஒன்று உண்டு.
அதுதான் தன்னம்பிக்கை.
தன்நம்பிக்கையை இழந்துவிடாதே.
இழந்ததை மீட்பேன் என்ற தன்னம்பிக்கையோடு
இருந்தால் இழப்பு என்ற வார்த்தை
இருந்த இடம் தெரியாமல்
போய்விடும்.
தன்மீது தன்னம்பிக்கை வைத்து உழைத்தவர்
தோற்றதாக வரலாறு இல்லை.
செய்து முடிக்கப்படும் வரை எந்தப்
செயலும் பெரிதாகத் தெரிவதில்லை.
செய்து முடித்துவிட்டு திரும்பிப்
பார்த்தால் ஆ....நானா இவ்வளவு பெரிய
வேலையை செய்தேன் என்று அசந்து
போவீர்கள்.
இவை எல்லாம் எதனால் சாத்தியமாயிற்று.
உங்களுக்குள் இருந்த தன்னம்பிக்கையால்
மட்டுமே!
.
உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையோடுகூடிய
உழைப்புதான் நீங்கள் யார் என்பதை
உலகிற்கு அடையாளம்
காட்டும்.
உங்கள் அடையாளத்தை உலகம் தெரிந்து
கொள்ளட்டும்.
விதிப்பதற்கு ஒன்றுமில்லை என்று
விதியை புறங்கையால் தள்ளி
மதியை வைத்து மாற்றுவிதி எழுதும் வல்லமை
தன்னம்பிக்கைக்கு உண்டு.
நம்பிக்கையோடு முதலடியை
எடுத்து வையுங்கள்.
அடுத்த அடி முன்னோக்கி தான் இருக்கும்.
இன்றே முன்னோக்கிய உங்கள்
பயணம் தொடங்கட்டும்!!!
தொடரட்டும் தன்னம்பிக்கை .
ReplyDeleteநம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம். நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்.தன்னம்பிக்கைக்கு கொடுக்கப்பட்ட சித்திரம் மிகவும் பொருத்தமானது.வாழ்த்துகள்.
ReplyDelete