சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா
"சோழியன் குடுமி சும்மா ஆடுமா? "
இந்தப் பழமொழியைக் கேட்டதும்
குடுமி வைத்த ஆட்கள் கண்முன்
வந்து குடுமியை
ஆட்டிக்கொண்டு
நிற்பர் என்றுதானே நினைக்கிறீர்கள்.
அதுதான் இல்லை.
நாம் இன்று பயன்படுத்தும்
பழமொழிக்கும் குடுமிக்கும்
சம்பந்தமே இல்லை.
சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை
எடுத்து வந்து எப்படி பழமொழியாகப்
பயன்படுத்த முடியும்?
ஏதாவது ஒரு பயன் கருதி
நம்மோடு நெருங்கிப் பழகுபவர்களைப் பார்த்து சொல்லும் பழமொழி இது.
அதாவது பலனை எதிர்பார்த்து
பம்முகிறவரைப் பார்த்து
சொல்லும்
பழமொழியாகிப் போனது
இந்தச் சோழியன் குடுமி.
ஜால்ரா போடும் நபர்களைப்
பார்த்துப் சொல்லப்படும் பழமொழி .
அடிக்கடி ஜால்ரா போட்டுத்
தலையை ஆட்டினால் குடுமி
ஆடத்தானே செய்யும் என்கிறீர்களா?
இருக்கும் ...இருக்கும்...
அதனால்கூட இருக்குமோ?
பழமொழியாயினும் பாடலாயினும்
படிப்பவரின் கருத்துதான்
முந்தி வந்து பந்தியைப் பிடிக்கும்.
என்ன நோக்கத்திற்காகச் சொல்லப்பட்டது
சொல்ல வந்த கருத்துதான் என்ன
என்பது எழுதியவருக்கு மட்டுமே தெரியும்.
பல பழமொழிகளின் பொருள்
காலப்போக்கில்
சொல்லப்பட்ட கருத்து மறைந்து ,
மறைக்கப்பட்டு
வேறொரு பொருளில் பயிலப்பட்டு
வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
"கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை"
இதுதான் பழமொழி.
ஆனால் நாம் அப்படியா சொல்கிறோம்?
"கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை"
என்றல்லவா சொல்லி வருகிறோம்.
உண்மையில் அதன் பொருள் என்ன
தெரியுமா?
கழு எனப்படும் கோரைப்புல்லைப் பயன்படுத்தித்
தைய்க்கப்படும் பாயில் கற்பூர வாசனை
வரும் என்பதாகும்.
எப்படி மாறிப் போயிருக்கிறது பாருங்கள்.?
இப்படித்தான்
"வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை"
என்றும் சொல்லிக்கொண்டு
திரிகிறோம்.
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை
போக்கு அறிந்தவனுக்கு போலீஸ் வேலை"
என்பதுதான் அதன் உண்மையான பொருள்.
இவை மட்டும் தானா?
இப்படி மாற்றிமாற்றி
பேசப்பட்டுவரும் பழமொழிகள் பல
உள்ளன.
இப்போது சோழியன் குடுமிக்கு
வருவோம்.
இந்த பழமொழியும் காலக்கில்
மாற்றமடைந்து நாம் இன்று நாம் பேசும்
பொருளுக்கு வந்து நிற்கிறது என்பதுதான்
உண்மை.
இந்தச் சோழியன் குடுமிக்கு
உண்மையான பொருள் என்ன தெரியுமா?
சோழிய இனத்தைச் சேர்ந்தவர்கள்
அந்தக் காலத்தில் பின்னந்தலையில்
குடுமி வைத்திருப்பது வழக்கமாம்.
குடுமி எதற்காக வைத்திருப்பார்கள்.
ஆட்டி ஆட்டிப் பேசவா?
அதுதான் இல்லை.
சுமை சுமக்கும் போது பாரம்
மண்டையில் அழுத்தாமல் இருப்பதற்காக
சும்மாடு வைப்பது வழக்கம்.
ஆனால் சோழியன் வைத்திருக்கும்
குடுமியைச் சும்மாடாகப்
பயன்படுத்த முடியாதாம்.
காரணம் பின்னந்தலையில் குடுமி
வைத்திருப்பார்கள்.
அது சும்மாடாகப் சுற்றி வைக்கும்
அளவுக்கு நீளமாக இருக்காது.
அதனால்தான் "சோழியன் குடுமி
சும்மாடு ஆகுமா ?"
என்ற பழமொழி வந்திருக்கிறது.
அது பலர் வாயினுள் நுழைந்து
நுழைந்து ,திரிந்துதிரிந்து
"சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?"
என்று இன்றைய வடிவத்தைப் பெற்றுவிட்டது.
அதற்கும் பொருத்தமான வேறொரு பொருளும்
கற்பித்துக் கொண்டோம்.
தமிழ்ச் சொற்களைப் பிரித்தும் சேர்த்தும்
பரட்டியும் போட்டு புதுப்புது
பொருள் பொதிந்த
சொற்றொடராக மாற்றி விடலாம்.
சொல்லாததைச் சொன்னார் என்றும்
சொல்லியதை இல்லை என்றும்
பேசி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப
சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.
அதற்குச் சோழியன் குடுமி மட்டும்
விதிவிலக்கா என்ன?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?
தமிழ் எப்படி எல்லாம் விளையாடுகிறது பாருங்கள்!
Comments
Post a Comment