என்ன பிழைப்பு இது?
அதென்ன பிழைப்பு
மழைக்கால முன்காலைப் பொழுது
உழைக்காமல் ஓய்ந்திருந்த வேளை
சளைக்காமல் பாடலொன்று
செவிமடல் துளைக்க
சிந்தை எங்கெங்கோ அலைய
கண்கள் அசைந்தாடும்
நெல் வயலைத் தேட
மயிர்க்கால்கள் சிலிர்க்க
பயிர்க்கால்கள் நோக்க
வளையோரம்
கண் மினுமினுக்க
நண்டொன்று வரப்போரம்
மெல்ல நடை போட
எட்டி நின்ற
தவளையாரும்
தாவிப் பாய்ந்தோட
எட்டு கால் எடுத்து வைத்து
நண்டும் பின்னாலே
இடம் பெயர
நெல்மணிமேல் அமர்ந்ருந்த
கிளியொன்று நக்கலாய்
மெல்லச் சிரிக்க
அசைத்துப் பார்க்க வந்த
பெருங்காற்று
நெல்தாள் மடிய
விளையாட்டுக் காட்ட
தடுமாறிய கிளி
வெலவெலத்து
விருட்டென்று பறந்து
தென்னை மட்டையில்
போயமர
வரப்போரம் பதுங்கல்
குழியில் பதுங்கியிருந்த
தவளையாரும்
சலசலப்புக் கேட்டு
சலனமில்லாமல்
ஓரக்கண்ணால்
அசைந்தாடும் ஓலையைப் பார்க்க
வெட்கத்தால் முகம் சிவந்த கிளி
ஈதென்ன பிழைப்பென்று
கீச்சிட்டு பதிலுரைக்க
பயந்த வாழ்க்கை தந்த
பரமனை இருவரும்
ஒருசேர பழித்திருக்க
அப்பாடா...என்றபடி
தென்னை மரத்தின்கீழ்
உழவன் ஒருவன் வந்தமர
ஒய்யாரக் காற்று
உடலோடு உறவாட
உள்ளம் மகிழ்ந்தாட
களைப்பு பறந்தோட
உலகம் தனதாக
உவகை தாலாட்ட
மனம் களிப்பூட்ட
தென்னையோலை
மெத்தையாக
தத்தை பார்த்திருக்க
உறக்கம் கண்களைத் தழுவ
உடல் சரிய
உழவன் கிடந்த நிலை கண்டு
வளை நண்டு
எட்டிப் பார்த்து
பிழைப்பென்றால் இதுவன்றோ
நற்பிழைப்பு என்று
நற்சான்று தந்து
சாட்சி கையெழுத்திட
இருவர் தேட
ஆமென்று ஆமோதித்து
தவளையாரும்
கிளியாரோடு சேர்ந்து
கத்தி ஒப்புதல்
வாக்குமூலம் தந்துவிட
நல்லதொரு நாடகம்
பார்த்த களிப்பில்
குயிலொன்று
இக்கரைக்கு அக்கரை பச்சை
என்று பாடியபடி
பறந்து போக
உள்ளுக்குள் ஊமையாய்ச்
சிரித்தபடி
மனம் புலம்பியது
ஈதென்ன பிழைப்பு!
கருத்துகள்
கருத்துரையிடுக