கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
இதயம் கனக்கிறது
வெறுமை தெரிகிறது
எங்கிருந்தோ வந்தாய்
எழுதா எழிலோவியமாய்
இதயத்தில் எழுத வைத்தாய்
என்னோடு எழும்பி
என் முகம் பார்த்து என் பின்னே
வாலை யாட்டி நின்றிருப்பாய்
நீ நின்ற இடத்தில்
நிற்பாய் என்ற நினைப்போடு
திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது
இதயம் கனக்கிறது
வெளியில் சென்றுவிட்டு நான்
திரும்பும் வரை மணிக்கணக்காய்க்
கதவருகில் காத்திருப்பாய்
காலன் அழைத்ததுமே
காத்திருக்க மனமில்லாது காலனோடு
கால்போட்டுச் சென்றனையோ?
பான்டு என்ற பெயரிருந்தும்
பந்தத்தை அறுத்து விட்டு
பாதியிலே என்னைப் பரிதவிக்க விட்டுச் சென்றதெங்கோ?
இதயம் கனக்கிறது
வெறுமை தெரிகிறது
பார்வையாலே பல்லாயிரம் முறை
பேசி நெகிழ வைத்த என் பான்டு
பாசம் காட்டிப் பறந்ததெங்கோ?
நா தொட்டு அன்பைப் பகிர்ந்தவனே
நாவசைப்பாய் என நான் காத்திருக்க
நாவாடாது நீ கிடப்பதேனோ?
இதயத்தில் வரைந்து வைத்த ஓவியமே
ஓவியத்தைக் கலைத்துவிட்டு
ஓரமாய் மறைந்ததேனோ?
இதயம் கனக்கிறது
வெறுமை தெரிகிறது
நெஞ்சு பொறுக்குதில்லையே தம்பி
நீயில்லா இடம் இன்று
நீரில்லாத இடம் போலானதேனோ?
என்ன சொல்லி தேற்றுவேன்
யாரிடம் என் அன்பைப் பகிர்வேன்
யாருமில்லாதவளாய் நிற்கின்றேன்
கதை பேசும் கண்களால் என்னைக்கட்டி
தவிடு பொடியாக்கித்
தலைகீழாய் விழ வைத்தாய்
இதயம் கனக்கிறது
வெறுமை தெரிகிறது
வால வயது வருமுன்னே
உலகம் காண மறுத்து
மறைந்தெங்குப் போனாய்?
பண்டங்களில் பங்கு கேட்டாய்
பாகப்பிரிவினை வைக்கும்வரை
பொறுமை இல்லாமல் போயினையோ?
வீட்டிற்கு வரும்போது
முன்னங்கால்கள் நீட்டி வரவேற்கும்
வரவேற்பாளரை இழந்தின்று தவிக்கிறேன்
இதயம் கனக்கிறது
வெறுமை தெரிகிறது
Comments
Post a Comment