தந்தையர் தினம்

தந்தையர் தினம் 


முந்நூறு நாள் சுமந்து

  முட்டி நிற்கும் சொல்லுக்கு

  முழு வடிவம் கற்பித்து

  எட்ட நிற்கும் நிலவினை

  கட்டி இழுத்து வந்து

  கட்டில் அருகில் வைத்து

  கதைகள் பல பேசி

  காதோடு உறவுகூறி

  கன்னம் உரசி

  கன்னல் மொழி அறிமுகம் செய்து

  கலையாத கவினோடு

  கரைந்த உணர்வோடு

  கலந்திருப்பவர்  அம்மா .


அம்மாவின் முதல் அறிமுகம் 

அப்பா

தோளைக் குறுக்கி

தோள்மீது சுமந்து  

தோழனாய் உடன் நடந்து

தொடர் பயிற்சி தந்து

 நன்மை தீமை அறிய வைத்து 

காலமெல்லாம் கை கோத்துக்

தலையெழுத்தைக்  கொடுத்து

தலைநிமிர வைக்க 

தன்னால் இயன்றவரை

உழைப்பவர் அப்பா.

  

அப்பாவின் உயிர்துடிப்பில்

இயங்குவது குடும்பம்

அப்பாவின் சமபாதி அம்மா

அன்பில் சமபாதி கிடைக்காத 

ஆதரவற்ற குழந்தை அப்பா

அம்மாவிற்கு கிடைக்கும் அன்பு

அதற்கு அப்பாவுக்கு மறுப்பு

அப்பா என்பவர் கண்டிப்பு.

அதனால் அப்பாவுக்கு

எப்போதும் எதிர்ப்பு


அப்பா ஓர் அபூர்வ ராகம்

விலகியே நிற்பார்

விழிகளால் பேசுவார்

தொடர்பு எல்லைக்கு அப்பால் 

தொலைவில் இருக்கும்

தொலைத்தொடர்பு சாதனம் அப்பா. !


கையில் கிடைத்ததைக்

கை நனைக்க விரும்பாமல்

கையோடு கொண்டு வந்து தந்து

கடைசிவரை உண்பதைக்

கண்குளிர பார்த்திருப்பார்.


விரல்கள் காய்த்துப் புடைத்து

வியர்வை குளியல் நடத்தி

வீதியில் வாழ்க்கை நடத்தும்

அப்பாக்கள் எத்தனை

எத்தனை பேர்?

இந்த அப்பாவைக் கொண்டாட

வேண்டாமா?

அம்மாவுக்கு ஒரு தினம்

இருக்கும்போது அப்பாவுக்கு

ஒரு தினம் கொடுக்க வேண்டாமா?


 அப்பாவுக்கு ஒரு தினம்

வேண்டாமா?

இந்தச் சிந்தனை உதயமானதே ஓர்

அன்னையர் தினத்தில்தான் என்பது

சுவாரசியமான வரலாறு.


அமெரிக்காவின் வாசிங்டன் நகருக்கு

 அருகிலுள்ள ஸ்போகன் என்ற இடம்.

 நாள் ஞாயிற்றுக்கிழமை.

 தேவாலயத்தில் அன்னையர்தின

 சிறப்பு பிராத்தனைக் கூட்டம்

 நடைபெற்றது.

 அனைவரும் தங்கள் அன்னையர்

 கைகளைப் பற்றிக் கொண்டு

 உற்சாகமாகக் காணப்பட்டனர்.

   

தேவாலயத்திற்கு சோனோரா என்ற

 பெண்ணும்  வந்திருந்தார்.

போதகர் அன்னையின் பெருமைகளைப்பற்றி

அழகாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அன்னை என்றால் அன்பு.

அன்னை என்றால் தியாகம்.

அன்னை என்றால் கனிவு.

அன்னை என்றால் பாசம்.

இப்படி அன்னைக்கான பண்புகளை

அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே

போனார்.

கேட்ட சோனோரா அசந்து போனார்.

இத்தனைக்கும் பொருத்தமான

ஆள் யார் என்ற கேள்வி மனதிற்குள்

எழுந்தது.

தன் அப்பாவைத் தவிர வேறு

யாராக இருக்க முடியும்? 

பதினாறு வயதில் அன்னையை 

இழந்து அரவணைக்க ஆளின்றி

நின்றபோது தோளோடு தோளாக

தோளனாய்த்

 தாயாய்

நின்றிருந்தவர் அப்பா.

எனக்கும் என் தம்பி தங்கைகளுக்கும்

அப்பாவும் அம்மாவும் ஆசானும்

ஆண்டவனுமாய் இருந்து

காத்து வழி நடத்தியவர் என் அப்பா.

ஊரெல்லாம் மனைவி இருக்கும்போதே

மறுமணம் செய்யும் ஆண்கள்

இருக்கும் நாட்டில் தன் இளமையை

எங்களுக்காக தியாகம் செய்தவர்

என் அப்பா.


நினைத்து நினைத்து நெஞ்சம்

நெகிழ்ந்து போனார் சோனோரா.


அம்மாவின் அத்தனை தகுதிகளும் கொண்ட

என் அப்பாவிற்கும் அம்மாவுக்குக்

கிடைக்கும் இத்தனை 

பெருமைகளும் கிடைத்திட வேண்டுமே...

ஆனால் இவை எல்லாம் கிடைத்ததா?

இல்லையா...?


இல்லை ...இல்லை இல்லவே இல்லை.

இதற்கு நான் ஏதாவது 

செய்தே ஆக வேண்டும்.

என் அம்மாவைப் பெருமைப்படுத்த

நான் ஏதாவது  செய்தாக வேண்டும்.


இந்த எண்ணம் அனலாக 

உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.


ஆறு உடன்பிறப்புகளையும் வளர்க்க

அப்பா பட்ட கஷ்டங்கள்

நெஞ்சில் நினைவலைகளாக

வந்து முட்டி மோதி முன்னே தள்ளியது.


என்  அப்பா வில்லியம் சாக்சனை 

கௌரவிக்க  ஒரு மகளாக நான் ஏதாவது 

செய்ய வேண்டுமே

என்று சதா அப்பாவின் நினைவில் 

இருந்தார்.


அதனால் 1910 ஆம் ஆண்டு 

ஜூன் மாதம் 

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நாளில்

அப்பாவின் நினைவாக வீட்டில் 

ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு 

செய்திருந்தார்.


அன்றைய நிகழ்ச்சியின்போது

தனது அப்பாவைப் பற்றி நிறைய

பேசினார்.பேசினார்.பேசிக் கொண்டே இருந்தார்.


அப்போது இந்தநாள் என் அப்பாவுக்கான

நாளாக ஏன் இருக்கக் கூடாது?

இப்படி ஒரு கேள்வி மனதிற்குள்

மாறிமாறி வந்து விடை கேட்டு நின்றது.


அதைப்பற்றி அறிந்தவர்கள்

தெரிந்தவர்களிடம் எல்லாம் கருத்து

கேட்க ஆரம்பித்தார்.


பலரும் சோனோராவின் இந்த

எண்ணம் சரியானதுதான் என்று

ஆதரவு தெரிவித்தனர்.

இன்னும் சிலர் அருமையான உன் எண்ணத்திற்கு எங்கள் பாராட்டு

என்று தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தினர்.


இந்த ஊக்கம் அவரை அடுத்த

கட்டத்தை நோக்கி நகர்த்தியது.

அதனால் இதையே இன்னொரு நிகழ்ச்சியின்போது

அனைவர் மத்தியிலும் முன்மொழிந்து

வைத்தார்.

இப்படி சோனாராவால் 

தொடங்கப்பட்டதுதான் தந்தையர்தினம்.     

     

 ஆனால் இது அதிகாரப் பூர்வமாக

 அறிவிக்கப்பட பல ஆண்டுகள் 

 காத்திருக்க வேண்டியதாய் இருந்தது.

 

 ஆரம்ப காலத்தில்  தந்தையர் தினம்

 என்றதும் வேடிக்கையாகப்

 பேசியவர்கள் உண்டு.

விமர்சையாகக் கொண்டாட

எவரும் முன் வரவில்லை.

 சில பத்திரிகைகள்கூட

 தந்தையர் தினத்தை விமர்சித்ததோடு

 கிண்டலும் நையாண்டியும் செய்து 

 செய்திகள் வெளியிட்டன.

 

ஆனால் 1913 ஆம் ஆண்டு இதற்கான 

மசோதாஅமெரிக்க நாடாளுமன்றத்தில்

 தாக்கல் செய்யப்பட்டது.

 

 முதன்முதலாக  அமெரிக்க ஜனாதிபதி 

 கால்வின் கூலிட்ஜ் என்பர் 1924 ஆம் ஆண்டு

தந்தையர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்துப்

பேசினார்.


இதனைச் சட்டமாக கொண்டுவர 

1930 ஆம் ஆண்டு ஒரு தேசிய குழு  

ஒன்று அமைக்கப்பட்டது.

ஆனால் அதுவும் சில காரணங்களால்

நடைமுறைப்படுத்த

முடியாமல் போயிற்று.

சட்டப்படி நடைமுறைக்கு வர 

1966 ஆம் ஆண்டு வரை காத்திருக்க 

வேண்டியதாய் இருந்தது.


 ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 

 தந்தையர் தினத்திற்கு பெடரல் விடுமுறை 

 என அறிவித்தார்.

 

 1972ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த 

  ரிச்சர்டு நிக்சன் ஜூன் மாதம் மூன்றாவது

  ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக 

  கொண்டாடப்படுவதை உறுதி செய்தார்.

  

  அந்தநாள் முதல்   இன்றுவரை தந்தையர்தினம் 

  ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில்

  கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆனால்  அன்னையர்தினம் போன்று தந்தையர் தினத்தை விமர்சையாகக்

 கொண்டாடுகிறோமா என்றால் ....

 இல்லை என்றுதான் சொல்லுவேன். 


அம்மாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  

 பல வீடுகளில் அப்பாவுக்கு கொடுப்பதில்லை.

அதனால் தந்தையர் தினம் தனிக்கவனம் 

பெறுவதில்லை.


வேராக இருந்து நாம் விழுந்து

விடாமல் காத்தவரைப் பெருமைப்படுத்த

ஏன் இந்தத் தயக்கம் ?


சுணக்கம் இல்லாது

 இணக்கமாய் அப்பாவின்

 கரம் பிடித்து

 அப்பா உங்களை நேசிக்கிறேன்

 ஒற்றை வரியை 

 உள்ளன்போடு உரைத்துப்

பாருங்கள் 

அப்பாவின் ஒற்றை விரல் பிடித்து

இன்று அரை மணி நேரம்

 நடந்து பாருங்கள்.

அதுவே நீங்கள் 

அவருக்குச் செய்யும்

 முதல் மரியாதையாய் இருக்கட்டும்.

 


" மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

  என்நோற்றான் கொல்எனும் சொல் "

  

  என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க 

  ஒரு மகனாக மகளாக

தந்தைக்குப் பெருமை சேர்க்கும்படி

நடந்து கொள்வது நமது கடமை.  

 


 "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை "

 என்பதை நினைவில் வைப்போம்.

    

தாயோடு ஆறுசுவைபோம்

தந்தையோடு கல்விபோம்....

 கல்வி அறிவைத் தந்த தந்தையை காலமெல்லாம் மனதில் வைப்போம்.

 உள்ளத்தில் வைத்து

தொழுதிருப்போம்.

பழுதில்லா அன்புடன் பக்கம் வைத்து பார்த்திருப்போம்.

    



இனிய தந்தையர் நாள்

 நல்வாழ்த்துகள்.

         

    

    

    

Comments