யார் நல்ல நண்பர்

யார் நல்ல நண்பர் 


நட்பைப் பற்றி பேசாதவர் எவருமிலர்.

நான்கு வயது ஆகும்போதே நண்பர்கள்

வைத்துக் கொள்ளும் காலம் இது.

பார்த்ததுமே நட்பு.

மழலையர் பள்ளியில் படிக்கும் தொடங்கும் நட்பு.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது நட்பு.

உயர்நிலைப் பள்ளி நட்பு. மேல்நிலைப் பள்ளி நட்பு.

கல்லூரி நட்பு. அலுவலக நட்பு.

அக்கம்பக்கத்து நட்பு  என்று நட்பு

காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்.


தண்ணீர் இல்லாமலும் இருக்கலாம்.

நட்பில்லாமல் இருக்க முடியாது.

காரணம் நமது உள்ளக்கிடக்கைகளை

பரிமாறிக்கொள்ள துக்கங்களை

சொல்லி மன ஆறுதல்பட மகிழ்ச்சியை

கொண்டாடி மகிழ என்று எப்போதும் நமக்குத் துணை தேவையாக இருக்கிறது.


ஆனால்  எந்தவொரு காரணமும் இல்லாமல் 

ஏதோ ஒரு நட்பு நம்மோடு தொடர்ந்து

கூடவே வருவதைக் காணலாம்.

அதுதான் உண்மையான நட்பு என்று

உள்ளம் சொல்லும்.


நம் உள்ளம் சொல்வது இருக்கட்டும்.

பெரியவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் கேட்போம் வாருங்கள்.


நட்பைப் பற்றி எத்தனையோ பாடல்களில்

படித்திருக்கின்றோம்.


நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்.

அப்படி இருக்க வேண்டும் என்று

ஆயிரம் கட்டுரைகள் வாசித்துத் தெரிந்து

வைத்திருப்போம்.

பார்த்துப் பார்த்து சேர்த்துக் கொள்வதல்ல நட்பு.

ஒருவரை ஒருவர் பார்க்காமலும் நட்பு

உருவாதல் உண்டு .

அதற்கு கோப்பெருஞ் சோழன்

பிசிராந்தையார் நட்பை எடுத்துக்காட்டாக

சொல்வர்.


அதியமான் - ஔவையார் நட்பு

ஓர் ஆழமான நட்பு.

கண்ணன் - குசேலன் நட்பு,

துரியோதனன் - கர்ணன் நட்பு என்று

வரலாற்றுப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட

உண்மையான நட்புகள் ஏராளம் உண்டு.


நகுதல் பொருட்டல்ல நட்பு.

விழிநீர் துடைக்க விரல் நீழும் நட்பாக

நட்பு இருக்க வேண்டும்.


"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 

இடுக்கண் களைவதாம் நட்பு "

என்று சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.


அதாவது ஆடை கழறும் போது எந்தவித

கட்டளையும் பிறப்பிக்கப்படாமல் கை தானாக

முன் வந்து ஆடையை நழுவவிடாதபடி

பிடித்துக் கொள்ளும் .அதுபோல எந்தவித

எதிர்பார்ப்பும் இல்லாதபடி நம் துன்பத்தைத் துடைக்க

முன் வந்து நிற்பதுதான் நட்பு என்பது 

வள்ளுவர் கருத்து. இதைவிட நட்புக்கு

நல்ல உவமையை யாராலும் 

கூறியிருக்க  முடியுமா?


ஏன் முடியாது? என்று நட்பை வேறு

ஒரு கோணத்தில் பார்த்துப் பாடல்

எழுதியிருக்கிறார் நாலடியார் .


 நட்புக்கு  நாலடியாரில் சொல்லப்பட்ட

 உவமை நம்மை சிந்திக்க 

 வைக்கிறது.படித்து முடித்ததும்

இதுவும் நன்றாக இருக்கிறதே என்று

 வியந்து பாராட்ட வைக்கிறது.


நாம் பாராட்டும்படியாக அப்படி யாரை நட்புக்கு

உவமையாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்?

என்றுதானே கேட்கிறீர்கள்.


இதோ பாடல் உங்களுக்காக...



"யானை யனையர் நண்பொரீஇ நாயனையார்

கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய் "


                                       -   நாலடியார்


யானையை ஒத்த இயல்புடையவர் நட்பை விலக்கி

நாயை ஒத்த இயல்புடையவரோடு நட்பு

கொள்ளுதல் வேண்டும்.


ஏனெனில் யானை  பலநாள் பழகியிருந்தாலும்

தன்னை வளர்த்தப் பாகனையே கொல்லும்

இயல்பு கொண்டது. 

ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன்

சினம் கொண்டு எய்த வேல் உடலில்

குத்தி நின்ற வேளையிலும்கூட  உண்மையான

அன்போடு தன் எஜமானையே சுற்றிச்

சுற்றி வரும் பண்பு கொண்டது.


ஆதலால் எப்போதும் நாயைப் போன்று

நம் பிழை பாராட்டாது இருக்கும் 

நம்மை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காது நம்மோடு இருக்கும்

நபர்களோடு நட்பு கொள்ளுதல் வேண்டும்

என்கிறது நாலடியார்.


யானை எவ்வளவுதான் சீராட்டி பாராட்டி

சோறூட்டி வளர்தாலும் எப்போதாவது

ஒரு முறை குற்றம் கண்டவிடத்து 

இதுதான் சரியான சந்தர்ப்பம் எனப் போட்டுத்

தாக்கிவிட்டு ஒன்று மறியாது போய்க்

கொண்டே இருக்கும். 

யானை மாதிரியான பண்பு கொண்ட

நண்பர்களும் அப்படித்தான் இருப்பர்.

எவ்வளவுநாள் பழகி இருந்தாலும்

ஒரு குற்றம் கண்டுபிடித்துவிட்டால்

போதும் . நண்பன் என்றும் பாராது

நாலுபேர் மத்தியில் நம்மை அவமானப்

படுத்திவிடுவார்கள்.

இந்த யானை குணம் கொண்டவரின்

நட்பு வேண்டவே வேண்டாம்.

அவர்களைவிட்டு விலகி இருத்தல் நலம்.


நாய் எவ்வளவுதான் துரத்தி துரத்தி

அடித்தாலும் காலைகாலைச் சுற்றிக் கொண்டு

நம்மிடையே இருக்கும். நமது குற்றம்

குறைகள் நம்மீது கொண்ட அன்பின்

காரணமாக பெரிதாகத் தெரிவதில்லை.

இதுதான் நாயின் பண்பு.

நாலுநாள் கஞ்சி ஊற்றி இருந்தால் போதும்.

இனி நீ வேண்டாம் என்று எவ்வளவு

தொலைதூரத்தில் விட்டு வந்தாலும்

மறுநாளே நம் வீட்டில் வந்து வாலை வாலை

ஆட்டி நிற்கும். 

இத்தகைய   நற்பண்பு

கொண்டவரோடு நட்பு கொள்ள வேண்டுமாம்.


இதுவரை நாயை என்னவோ என்று

நினைத்திருப்போம்.

ஒரே நாளில் நம் இதயத்தில் சிம்மாசனம் போட்டு ஏறி உட்கார்ந்து கொண்டது நாய்.


நன்றிக்கு நாய் என்றுதானே

நினைத்தீர்கள்.

நட்புக்கும் நான்தான் முதன்மைத்தேர்வு

என்கிறது நாய்.


அருமையான தேர்வு இல்லையா?


இப்போது நாயைப் போன்ற நண்பரை எங்கே 

தேடுவது  என்று யோசனையாக இருக்கிறதல்லவா!

அப்படி ஒரு நல்ல நட்பு கிடைக்காமலா

போய்விடும்.

கிடைக்கும்... கிடைக்கும்.

நல்ல நட்பு கிடைக்க வாழ்த்துகள் 👌 



Comments