பாதிரிப்பூ

பாதிரிப்பூ 

கல்வி கற்பவர்க்கு மட்டும் பயன்படுவதல்ல.

ஒரு சமுதாயத்தையே மாற்றும்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

என்று படித்திருக்கிறோம்.

பாதிரிப் பூவோடு சேர்ந்தால் பானையும் மணம் பெறும்.

பானை மணம் பெற்றால்

பாதிரிப் பூ வைத்த பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீர் மணம் பெறாமல் இருக்குமா என்ன?


எதற்காக இந்தப் பாதிரிப்பூ ?

எதற்காக இந்தப் பானை?

பாதிரிப் பூவையும் பார்வையையும் தூக்கி வந்து நம் முன்னர் நிறுத்தியவர் யார்?


வேறு யாரும்  அல்லர். பாதிரிப் பூவையும் பானையையும்

உவமையாக கொண்டு வந்து நிறுத்தியவர் நாலடியார்.



பாடல் உங்களுக்காக...


கல்லாரே ஆயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகில்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின் 

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு/

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு’

நாலடியார் (139)



நறுமணப் பூவின் தொடர்பால் பானை நறுமணம் பெற்றதுபோல் கல்வியில் சிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் கல்லாதவர்க்கும் அறிவு கிடைக்கும் . 


நாம் யாரோடு தொடர்பு வைத்துக் கொள்கிறோமோ அவர்களின் குணம் நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.

இதுதான் உண்மை.


இந்தப் பாடலில்  புதுமையான செய்தி ஒன்று 

உள்ளதை அறிய முடிகிறது.

புதுப் பானைகளில் பாதிரிப் பூவை நிரப்பி வைத்து விடுவார்களாம். அது மலர்ந்ததும், பூக்களை அப்புறப்படுத்திவிட்டாலும் அந்தப் பானையில் அதன் நறுமணம் நிறைந்திருக்குமாம். அதில் ஊற்றி வைக்கிற நீரும் அந்த மணத்தை ஏற்றுக்கொண்டு நல்ல மணமுடையதாக

மாறிவிடுமாம்..

அருமையான செய்தியாக இருக்கிறதல்லவா!

 

 புத்தோடு என்பது புதிய பானை எனறு பொருள்படுகிறது.ஆனால் இன்னும் சில உரையாசிரியர்கள் புத்தோடு என்பதற்கு புதிய இதழ் எனப் பொருள் கொண்டு பாதிரிப் பூவின் புதிய இதழ்கள் சேர்தலால் தண்ணீர்க்கு வாசம் வருவது போல்

கற்றவரோடு சேர்வதால் கல்லாதவரும் பெருமை பெறுகின்றனர். கற்றவரின் தன்மை ,அறிவு கல்லாதவர்களோடும் வந்து ஒட்டிக்கொள்ளும் . இதுதான் நாலடியார் சொல்ல வந்த கருத்து .


எது எப்படியோ பாதிரிப் பூவுக்கு வாசனை உண்டு. அது வைக்கப்பட்டிருந்த பானையில் ஊற்றி வைக்கப்படும் நீரோடு கலந்து அதுவும் மணம் மிக்கதாக இருக்கும்  என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை.


இந்தப் பாடலில் 

பாதிரிப் பூ  அதிக கவனம் பெறுகிறது.

இதுவரை நாம் பாதிரிப் பூவைப் பார்த்திருக்காவிட்டாலும்  பாதிரிப் பூவைப் பார்க்க வேண்டும். அதன் வாசனையை நுகர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறதல்லவா!

Comments