மூன்றுமுகம்

மூன்று முகம் 


"மூன்று பெண்களா "


"ஏன்... பயமாக இருக்கா? "


"பிறகு இப்படி சொன்னா பயப்படாம எப்படி

இருக்க முடியும்? "


" நீ  இப்படி பயப்படுவாய் என்று தெரிந்தால்

 சொல்லியிருக்க மாட்டேன்."

 

"சரி பயப்பட மாட்டேன்.

சொல்லுங்க....அந்த மூன்று

பெண்களும் கிட்ட வந்தாங்களா? "


"வந்தாங்களாவா...எங்க கூடவே கொஞ்ச 

தூரம் நடந்தாங்க..."


"அப்புறம்...."


"அப்புறம்....அப்புறம் அவர்கள்

மூவரும் அரிசி பெட்டியை

இடுப்பில் வைத்திருப்பதைப் பார்த்ததும்

நாங்கதான் எங்க ஊர்காரங்க முன்னால்

போறாங்களா என்று

வலிய பேச்சு கொடுத்தோம்" 


"அதற்கு அவங்க என்ன சொன்னாங்க....?"


"முன்னால் உங்க ஊர் காரங்க

போறாங்க...வேகமா

போங்க...பிடிச்சிடலாம் என்னாங்க..."


"புடிச்சீங்களா....."


"புடிச்சமா...அதற்குள்ள பக்கத்துல வந்த

மூவரையும் காணோமே".


"அதெப்படி..?..காணோமா...?

பயமாக இருக்கே...!

மூவரும் மாயமாகிட்டாங்களா?"


"நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் "


"அப்புறம் அவங்க மறுபடியும்

கண்ணுலேயே படலியா? "


"கண்ணில் பட்டாங்க ....

பொம்பளைங்களா இல்லை..

மூன்று ஆண்களாக...."


" ஆண்களாகவா?

ரொம்ம திரில்லா இருக்கே...

பொம்பளைகள் எப்படி ஆண்களாக

மாறினாங்க....? "


"அதுதான் எங்களுக்கும் தெரியல....

கிணற்று சரலுக்கு மேல மூன்று ஆண்களாக

நின்னுகிட்டு இருந்தாங்க...."


"தெரிஞ்ச ஆட்கள் மாதிரி

இருந்தாங்களா ?"


"இல்லை...

முன்பின் தெரியாதவங்க

மாதிரிதான் இருந்தாங்க"


"இப்பவும் அவங்க கிட்ட பேசுனீங்களா?"


"பேசுவதற்கு எங்களுக்கு கிறுக்கா? 

ஒரே ஓட்டம் பிடிச்சோம்.

குளத்துக்குள்ள போயிதான்

மூச்சே விட்டோம்."


"எப்பா...கேட்பதற்கே ரொம்ப பயமா

இருக்கே.... அதற்கு அப்புறம்

என்ன நடந்தது?....."


"அங்கே குளத்துக்குள்ள பார்த்தால்...."


"அங்கேயும் மூன்று பேரா?"


"மூன்றுபேர் இல்லை...மூன்று சின்ன

குழந்தைகளாட்டம்  அழுது

 கொண்டு இருந்தனர்."


" அந்த மூன்று பேரும்தான் 

 சின்ன குழந்தைகளாக

மாறிட்டாங்களா?"


" என்கிட்ட கேட்டா... அப்படித்தான்

நினைக்கிறேன்"


"கிட்ட போனியளா...."


"எட்டியே பார்க்காமல் தலை பிழைச்சா

தம்பிரான் புண்ணியம்  

என்று ஓடி வந்து பனங்காட்டுக்குள்ள

வந்து நின்னோம்"


"கேட்கவே திக்திக்கென்று இருக்கு...

ம்உம்...

அப்புறம்..."


"பனைமரத்திலிருந்து மூன்று பனம்பழம்

பொத்துபொத்துன்னு முன்னே 

வந்து விழுந்தது .."


"பனம்பழமா? 

எடுத்து தின்னியளா...? "


"இவ ஒருத்தி நான் என்ன சொல்லிகிட்டு

இருக்கேன் இவ எடுத்துத் தின்னியளா,? 

வாங்குனியளா என்று கேட்டுகிட்டு..."


"நீங்க பனம்பழத்தை பச்சையாகவே

எடுத்து சூப்பி தின்னுவியள...அதுதான்

கேட்டேன்...கோபப்படாதுங்க

 மேல...மேல...சொல்லுங்க...."


"பனம்பழம் விழுந்ததுதான் தெரியும்.

அதுக்குள்ள பனம்பழமும் 

மறைஞ்சு போச்சு...."


"பனம்பழமும் மறைஞ்சு போச்சா...

அப்போ....பேயாக இருக்குமோ...."


"நாங்களும் அப்படித்தான் நெனைச்சு

ஓடியே வந்துட்டோம்."


"நெனைச்சுப் பார்த்தாலே நெஞ்சுக்குழி

எல்லாம் நடுங்குதுப்பா..."


" நல்லகாலம் சொன்னீங்க...

 இனி நான் தனியாகவே வர மாட்டேம்பா..."


"தனியா வராத என்று சொல்லுறதுக்குத்தான்

சொன்னேன். உன்னைப் பயப்படுத்துதற்காக

சொல்லல...."


"நன்றி அக்கா...."சொல்லிவிட்டு 

வீட்டை நோக்கி நடந்தேன்.


வீட்டிற்கு வந்த பிறகும்  யார் அந்த 

மூன்று பேராக இருக்கும்? 


எப்படி மூன்று உருவமும் மாறி மாறி வந்து....

என்று அந்த மூன்று உருவங்களைச் சுற்றிச்

சுற்றியே என் நினைவு ஓடிக்

கொண்டிருந்தது.


அந்த நினைவு வரக்கூடாது என்று

கொஞ்சம் கட்டுப்படுத்திப் பார்த்தேன்.


இந்தப் பாழாய்ப் போன மனம்

அதற்கெல்லாம் கட்டுப்படுவதாகத்

தெரியவில்லை.


நினைவு வந்தாலே முகம் எல்லாம்

குப்பென்று வியர்க்கத் தொடங்கிவிடும்.


இன்று .....

தனியாக அந்த வழியாக

வர வேண்டியதாயிற்று.


அந்தக் கதையைக் கேட்பதற்கு

முன்னால் எத்தனை நாள் தனியாக 

இந்த வழியாக வந்திருக்கிறேன்.


அப்போதெல்லாம் வராத பயம்....


இன்று எனக்கு என்ன ஆயிற்று.?


அக்கா சொன்ன கதை மனசுக்குள்

ஒரு திகிலை உண்டுபண்ணி

வைத்திருந்தது.


அவள் எதற்கு என்னிடம் அந்தக்

கதையைச் சொன்னாள்?


கதையில் உண்மை இருக்குமா?

சும்மா பயங்காட்ட வேண்டும் என்று

சொல்லியிருப்பாளா?


சரோஜா அக்கா மீது சற்று வருத்தமாகக் கூட 

இருந்தது.


நேற்றுவரை இல்லாத பயம்....


கால்கள் வேகமெடுத்தன.

ஓட்டமும் நடையுமாக சீக்கிரமாக

வீட்டில் போய் சேர வேண்டும்.


நான் ஓட....யாரோ பின்னாலிருந்து

ஓடி வருவது போன்று காலடி ஓசை.


ஒரு வேளை ....ஒருவேளை...அந்த மூன்று 

உருவங்களாக  இருக்குமோ....?


கண்டிப்பாக அவைகளாகத்தான் இருக்கும்.


அக்கா சொன்ன அதே இடம்....

அதே ஒலி....


திரும்பிப் பார்க்கலாமா...


ஐயோ...வேண்டாம்.....ஓடிவிடுவோம்.


 என்ன இது ?

மிகவும் அருகில் பின்னாலேயே ஓடி

வருவதுபோல இருக்கிறதே...


தோளில் அடித்துவிடுமோ?


திரும்பிப் பார்த்தேன்.


யாரையும் காணோம்....

காலடி ஒலியும் அப்படியே 

நின்று போயிருந்தது.


மறுபடியும் கால்கள் வேகம் எடுத்தன.

முகமெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொண்டு வந்தது.

நிமிடத்துக்கு ஒரு முறை பின்னால்

திரும்புவதும் முன்னால் பார்ப்பதும்....

ஐயோ...அந்த கணம் என்னை கொஞ்சம்

கொஞ்சமாக தின்று கொண்டிருக்க.... 


எங்கிருந்தோ மணியோசை...

யார் இந்த நேரத்தில்?

விட்டு விட்டு மணி 

ஒலித்துக் கொண்டிருக்கிறது.


சலங்கை ஓசையோ....

அது வரும்போது சலங்கை ஓசை

கேட்கும் என்பார்களே ...


அது...அதுவேதான்....கருக்கலில் வேறு 

என்ன ஓசையாக இருக்கப்போகிறது?


கால்கள் தள்ளாடின.


அப்போது வேலி அருகில் ஒரு கிடாரி

மேய்ந்து கொண்டிருந்தது கண்களில்

தெரிந்தது.


அந்தக் கிடாரியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த

மணியிலிருந்து வந்ததுதான்

இந்த மணியோசை.


இருப்பினும் நெஞ்சு சமாதானம்

அடையவில்லை.


எந்த நேரத்தில் கீழே விழுவேனோ...


அம்மாடியோவ்...இன்னும் எவ்வளவு

தூரம்  ?

நான் எப்படி வீட்டிற்குப் போய்ச் 

சேரப் போகிறேன்? 


அதோ சரோஜா அக்கா சொன்ன 

கிணற்று சரல் மேடு தெரிகிறது.


சரலுக்கு மேல் யாருமில்லை...தப்பித்தேன்.

பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.


இன்னும் ஒரு இடுவையைத் தாண்டி

குளத்தினுள் சென்று விட்டால் போதும்.


அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் 

வீடு திரும்பும் நேரம். 

அவர்களோடு சேர்ந்து வீடு சென்றுவிடலாம்.

ஏதோ ஒரு நம்பிக்கையில்

நெஞ்சைக் கையில் பிடித்தபடி குளத்திற்குள்

கால் வைத்தேன்.



இப்போது கண்கள் தானாக

ஓடைப்பக்கம் திரும்பி

அந்த மூன்று குழந்தைகளைத் தேட

ஆரம்பித்தன.

யாரும் இல்லை என்பதை கண்கள் உறுதி செய்தன.


 குளத்தில் அவ்வளவாக நீர் இல்லை. 

 அங்கங்கு சேறும்

சகதியுமான பள்ளங்களில் கொஞ்சமாக

தண்ணீர் தேங்கிக் கிடந்தது. 

அதில் ஒன்றிரண்டு மீன்கள் துள்ளிக்

கொண்டிருக்க....

அவற்றைக் குறி வைத்து கொக்குகள்

ஒற்றைக் காலில் தவமிருந்து கொண்டிருந்தன.


தண்ணீரைப் பார்த்ததும் தாகம்

எடுத்தது.


டிபன் பாக்ஸ் மூடியை எடுத்து

அந்த சகதியில் கிடந்த தண்ணீரை

கலங்காமல்  கொஞ்சம்போல் 

வடித்து எடுத்துக் குடித்தேன்.


இப்போது மூச்சை சீராக விட

முடிந்தது.


காலுக்கும் சற்று தெம்பாக

இருந்தது.


முன்பு இருந்ததைவிட இப்போது 

மனம் கொஞ்சம் லேசாக இருப்பது

போல் உணர முடிந்தது.


ஆனால் அந்த பனங்காடும்

மூன்று பனம்பழங்களும் முன்னே வந்து

வழி மறைத்து நின்றன.


ஒருவேளை இன்றும் அதுபோல

மூன்று பனம்பழங்கள் வடிவில் ஏதாவது....


கண்கள் பனைமரத்தை

எட்டி எட்டிப் பார்த்தன.


இப்பவோ இன்னும் கொஞ்சம் நேரத்திலோ

கீழே விழுவதற்கு தயாரான பனையோலைகள்

பனைமரத்தைத் தொட்டும் உரசியும்

ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தன.


ஒவ்வொரு மரத்திலும் இப்படி ஒன்றிரண்டு

காய்ந்த ஓலை கிடந்து 

அல்லாடி எழுப்பும் ஒலி 

என்னைக் கிலி பிடிக்க வைத்தது.


ஒரு வேளை அன்று பனம்பழம்.

இன்று காய்ந்த ஓலைகளாக இருக்குமோ....


இப்படி ஒரு நினைப்பு வர.... காற்றோடு

மோதிய ஓலையில் ஒன்று

மரத்தோடு கொண்ட தொடர்பை 

அத்துக் கொண்டு என் முன்னே வந்து

விழ.....கால் இடறி நானும் 

கீழே விழ....


விழுந்த வேகத்தைவிட மனசு 

வேகமாக அடிக்கத் தொடங்கியது.


அப்படியே கண்களை மூடிக்கொண்டேன்.


மூன்று ஓலைகள்  முன்னே வந்து

கையறுநிலை பாடலிசைத்துக்

கொண்டிருப்பதுபோல் இருந்தது.


மெதுவாக விழி திறந்து பார்த்தேன்.

ஒற்றைப் பனையோலை மட்டும்

வெட்டவெளியில்

எட்டக்கிடந்து என்னை

எட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.


அப்படியானால் ....

இன்னும் அந்த இரண்டு

ஓலைகளும் விழுமா? 

ஒருவேளை அவை என் தலையில்

விழுந்து ஒரே அமுக்கு அமுக்கிவிட்டால்..

.மூச்சு விட முடியாதபடி திணறினேன்.


அந்த உருவம்

இன்று ஒற்றை ஓலை

வடிவில்  வந்திருக்கிறதா....?


எதுவும் ஆராய நேரமில்லை....

இன்னும் ஒரு நாலு எட்டு எடுத்துவைத்தால்...

பனங்காட்டைக் கடந்துவிடலாம்.

அதற்குப் பிறகு எந்த மூன்றுமுகமும் வராது.


ஆள் நடமாட்டம் இருக்குமிடத்துக்கு

இவர்கள் வரமாட்டார்களாம். 

ஒரு துணிச்சலோடு பனங்காட்டைக்

கடந்துவிட்டேன்.

ஒரு நிமிடம் நின்று நிதானமாக திரும்பிப்

பார்த்தேன்.


அங்கே... நான் பார்த்த காட்சி...

அப்படியே தூக்கி வாரிப் போட்டது.


குளத்து வரப்பின்மீது ஒரு ஒற்றை உருவம்...


மறுபடியும் ஒற்றை உருவமா?

முடிவு பண்ணிவிட்டேன்.

இன்று ஒற்றை முகமேதான்.


 நான் திரும்பிப் பார்ப்பதைப் பார்த்ததும்

 அந்த உருவம்....


வரப்பிலிருந்து கீழ்நோக்கி ஓடிவர....

பின்னங்கால் பிடரியில் அடிக்க

மறுபடியும் ஓட்டம் பிடித்தேன்.


அதோ சற்று தொலைவில் ஏர்

மாட்டைப் பிடித்துக்கொண்டு ஒரு தாத்தா

சென்று கொண்டிருந்தார்.


வேகமாக ஓடி ...அவருக்குப்

பக்கத்தில் போனதும் ஓட்டத்தைக்

குறைத்துக் கொண்டு நடக்க

ஆரம்பித்தேன்.


அப்பாடா...பிழைத்துக் கொண்டேன்.

ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

ஆனாலும் அந்தப் படபடப்பு மட்டும்

அடங்கவே இல்லை.


இப்போது திரும்பிப் பார்க்கலாமா,? 


ஏதோ ஒரு நம்பிக்கையில் திரும்பிப்

பார்க்க....இப்போது அந்த உருவம் மறைந்து

போகவில்லை. வேகமாக  என்னை நோக்கி

வருவதுபோல இருந்தது.


மாட்டுக்கு முன்னால் ஓடவும் பயம்.

மெதுவாக தயங்கித் தயங்கி அந்தத்

தாத்தாவோடு நடந்தேன்.


"பள்ளிக்கூடத்தில் இருந்து தனியா

வாறீயா...?".கேட்டார் தாத்தா.


"ஆமாம்..".தலையை ஆட்டினேன்.


"கருக்கலுல ஒத்தைக்கு வரலாமா..."


இப்போது தாத்தா கேட்ட கேள்விக்கு

என்னால் பதில் சொல்ல முடியவில்லை.


நெஞ்சுக்குழி மேலும் கீழும் ஏறி

இறங்கி என்னைப் பேசவிடாமல்

தடுத்தது.


"ஏய் நில்லு..."குரல் என்னைக் குறிவைத்து 

வந்து விழுந்தது.


நான் இந்தமுறை திரும்ப மாட்டேன்...

திரும்ப மாட்டேன்....

திரும்பவே மாட்டேன்......


மனசை இருக்கிப் பிடித்துக் 

கொண்டேன்.


அதற்குள் பின்னாலிருந்து 

தோள்பட்டையில் ஒற்றை அடி.


அப்படியே நிலை குலைந்துப் போனேன்.


இப்போது அந்த உருவம் எனக்குச்

சரிக்குச் சமமாக வந்து நின்றது.


என்னால் நிமிர்ந்து பார்க்கத்

திராணியில்லை...


"இன்னும் பயமா? "

பரிச்சயப்பட்ட குரல்.


நிமிர்ந்து பார்த்தேன்....அது...அது...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

உதடுகள் துடித்தன.


ஒப்பாரி வைக்க வேண்டும்போல்

இருந்தது.


"பயப்படாத...உன் கூட வந்து

சேர்ந்து கொள்ளணும் என்றுதான்

ஓடி வந்தேன்.

அதுக்குமுன்ன நீ ஓடுன ஓட்டம்..".

சொல்லி கலகலவென்று

சிரித்தது அந்த உருவம்.


இது நிஜமா....? 


இல்லை முன்னால் மறைந்து போகுமே

அது போன்றதுதானா.....

குழப்பம் தீருமுன்னே வீடு வந்துவிட....


கட்டிலில் தொப்பென்று விழுந்தேன்.

அவ்வளவுதான்...


" என்ன நடந்தது? 

டாக்டர் எதற்கு வந்திருக்கிறார்?"


கேட்க நா எழவில்லை.......

.ஒன்றுமே புரியாமல் மலங்க மலங்க 

விழித்துக் கொண்டிருந்தேன்.


"நேற்று நன்றாகதான் பள்ளிக்கூடம்

போயிட்டு வந்தாள்...காலையில் நெத்தியில்

கை வச்சுப் பார்த்தா தீயா கனன்று

கொண்டு இருந்தது...."என்று டாக்டரிடம்

சொல்லிக் கொண்டிருந்தார் அம்மா.


ஆமா....நேற்று என்ன நடந்தது?













 

Comments