கேடுகெட்ட மனிதரே கேளுங்கள்
கேடுகெட்ட மனிதரே கேளுங்கள்
பணம் !பணம்! பணம்.!
இந்த வெற்றுத்தாளுக்குத்தான்
எத்தனை மதிப்பு!
"பணம் பத்தும் செய்யும் "
" பணம் பந்தியிலே குணம் குப்பையிலே"
இப்படி பணமொழிகள் ஏராளம் உண்டு.
பணம் இல்லாதவன் பரியாசத்துக்கு
உரியவனாகி விடுகிறான்.
பணம் உள்ளவனுக்கு
எங்கு சென்றாலும் சிவப்புக் கம்பள வரவேற்பு
கொடுக்கப்படுகிறது.
இதையே வள்ளுவர்,
"இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரைச்
எல்லாரும் செய்வர் சிறப்பு "
என்கிறார்.
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
இல்லாதவனுக்கு ஏது மரியாதை?
இதைவிட ஒருபடி மேலே போய் எப்படி
அருளில்லாருக்கு அவ்வுலகம் இல்லையோ
அதுபோல பொருளில்லார்க்கு இவ்வுலகம்
இல்லை என்று உச்சந்தலையில் ஓங்கியடித்துவிட்டார் வள்ளுவர்.
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு "
பணம் இல்லை என்றால் எவ்வுலகிலும்
இடமில்லையா?
அப்படியானால் என்ன செய்வது?
இப்படி பணம் படுத்தும்பாட்டை
அறிந்ததால்தான் அனைவரும் பணத்தின்
பின்னால் ஓடுகின்றனர்.
"செய்க பொருளை" என்று பொருள் தேட கட்டளையிட்டார் வள்ளுவர்.
அதுபோல ஔவையும்,
"திரைகடல் ஓடியும் திரவியம்
தேடு "என்று கடல் கடந்து சென்றாகிலும்
பொருள் தேடு...ஓடு...ஓடு என்று
சொல்லித் தந்திருக்கிறார்.
இப்படி ஆளாளுக்குப் பணம் பண்ணுங்கள் என்று சொல்லித் தந்தார்கள்.
ஆனால் இப்போது பணம் பண்ணியவர்களைப் பார்த்து ஔவை ஒரு கேள்வி கேட்கிறார்.
என்ன கேள்வியாக இருக்கும்.
வாருங்கள் பார்த்துவிடலாம்.
"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்"
நல்வழி: பாடல் 22
பல துன்பங்களை அனுபவித்து,ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள்.
உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது.
அதை யார் யாரோ அனுபவிப்பார்கள்.
ஆதலால் நீங்கள் சேர்த்து வைத்த அந்தப் பணத்தால் உங்களுக்கு என்ன பயன்?
கேட்கிறார் ஔவை.
சரியாகத்தானே கேட்டிருக்கிறார்.
உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.
ஏழை எளியோருக்கு கொடுத்து உதவுங்கள்.
இதுதான் ஔவை சொல்ல வந்த கருத்து.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் .
சற்று கோபமான கேள்வி.
Comments
Post a Comment