தத்துவஞானி சாக்ரடீஸ்
தத்துவஞானி சாக்ரடீஸ்
தத்துவம் என்றால் என்ன?
தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர் என்பர்.
லத்தீன் மொழியில் ஃபிலாஸ் என்றால் அறிவு.
ஸோஃபியா என்றால் நேசிப்பது . அப்படியானால் தத்துவம் என்பதற்கு அறிவை நேசிப்பது என்று பொருள் கொள்ளலாம்.
அறிவார்ந்த சிந்தனைகளை விதைத்தவர்கள் தத்துவஞானிகளாக வரலாற்றில் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.
மிக உயர்ந்த தத்துவங்களை விதைத்த உயர்ந்த சிந்தனையாளர்களை உலகிற்குத் தந்த பெருமை கிரேக்க நாட்டையே சாரும். பழம்பெரும் நாகரிகச் சிறப்பும், கலையும், இலக்கியமும், வீரமும் நிறைந்த இந்த மண்ணில் பிறந்தவர்தான் தத்துவஞானிகளின் தந்தை என்று அழைக்கப்படும் சாக்ரட்டீஸ் ஆவார்.
சாக்ரடீஸ் பற்றி அறியாமல்
உலக அறிவுச் சிந்தனைத் தளத்திற்குள்
பயணிக்க முடியாது.
உலக வரலாற்றில் இவரின் சிந்தனை மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. வரலாற்று நாயகர்கள் வரிசையில் என்றும் நிலையான இடம் பிடித்தவர்களில் முதன்மையானவர் சாக்ரடீஸ்
பண்டைய கிரீஸ் நாட்டின் ஒரு பகுதி ஏதென்ஸ்.. இதுவே சாக்ரட்டீஸ் பிறப்பிடம்.
சாக்ரட்டீஸ் ஏழ்மையில் பிறந்தார். வறுமையில் வளர்ந்தார். வறுமையிலேயே வாழ்ந்தார். வறுமை அறிவை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பதற்கு சாக்ரட்டீஸ் மிகப்பெரிய சாட்சி.
காலில் செருப்பு இல்லை. குடும்பத்திலோ வறுமை. அப்படி இருந்தபோதும் தன்னை நினைக்காது, தன் பிள்ளை தன்பெண்டு எனச் சுயநலம் காட்டாது, சுயநலமில்லாது, தான் வாழ்ந்த சமகால சமுதாயத்தைப் பற்றியும் சமூகத்தில் இளைஞர்களின் அறிவார்ந்த பங்கு என்ன என்பதைப் பற்றியும் சிந்தித்த ஒரு மனிதராகவே வரலாறு இவரை நமக்கு அறிமுகம் செய்கிறது. '
பசி வந்திட பத்தும் பறந்து போகிற உலகில் ஊன் , உறக்கம் தொலைத்து, இறுதிவரை ஓர் லட்சியவாதியாக வாழ்ந்த இவர் கொண்டாடப்பட வேண்டியவர்.ஆனால் அவர் தான் வாழும் காலத்தில் கொண்டாடப்பட்டாரா என்பது கேள்விக்குறி.
சாக்ரட்டீஸின் வாக்கு மட்டுமல்ல வாழ்வும் ஒரு தத்துவமாகவே இருந்தது.
உலகின் முதல் அறிவுஜீவி இவர்
என்றே சொல்ல வேண்டும்.
வாழ்வியல் கருத்துக்களை, நீதிகளை, வாழும் முறையினை உலகுக்கு எடுத்துரைத்து தன்னைச் சுற்றி ஒரு அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்கிய சாக்ரட்டீஸ் பிளேட்டோவின் ஆசிரியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
"உன்னையே நீ அறிவாய்' என்பது இவரின் சிந்திக்க வைத்த பேச்சாக இருந்தது.
இந்தக் கருத்தியல் அடிப்படையிலேயே எப்போதும் இவரது எழுச்சிமிக்க பேச்சு இருக்கும்.
பகுத்தறிவு என்பதுதான் இவர் போதனையின் அடிப்படை தத்துவம். இருபதாம் நூற்றாண்டில் இன்னும் பல சீர்திருத்தவாதிகள் உருவாக காரணமாக இருந்தவர் சாக்ரடீஸ்.
'எதையும் அப்படியே நம்பிடாதே!
ஏன்? எதற்கு எனக் கேள்வி கேள்" என்ற புதிய சிந்தனை முறையை கற்பித்தவர்.வளர்த்தவர். வலியுறுத்தியவர்.
மூடநம்பிக்கையைத் தகர்த்து மக்களை அறிவார்ந்த வழியில் நடக்க பாதை அமைத்துத் தந்தவர் சாக்ரட்டீஸ் என்றால்
மிகையாகாது.
காலையிலும் மாலையிலும் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் ஏதென்ஸ் நகரின் கடைத்தெரு, சாலைகள் என மக்கள் கூடும் இடத்திற்கு செல்வார். அவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களிடம் தன்பேச்சு மூலம் தன் கருத்தை வெளிப்படுத்துவார். கிரேக்க நாட்டு இளைஞர்களிடையே இவர் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்..
சாக்ரட்டீஸ் எப்படிக் கூட்டம் கூட்டுவார் தெரியுமா?
மக்களைத் திரட்ட ஒரு மாறுபட்ட உத்தியைக் கையாண்டார்.
பகல் பொழுதில் கையில் விளக்கோடு பொது இடங்களுக்குச் செல்வார். கூட்டம் உள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவது போல கையில் விளக்குடன்
தேடிக் கொண்டிருப்பார்.
இதென்ன பகல் வேளையில் கையில் விளக்கோடு ஒரு மனிதர் எதையோ தேடுகிறாரே என வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடும்.
அப்போது என்ன தேடுகிறீர்கள் என்று
யாராவது கேட்டால் "மனிதர்களைத் தேடுகிறேன்" என்பார் சாக்ரட்டீஸ்.
மக்களுக்கு சாக்ரடீஸ் பேசுவது புரியாது.
இதென்ன இந்த மனிதர் விளக்கை வைத்து தரையில் மனிதரைத் தேடுகிறார் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வர்.
அப்படி மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பி
மக்களிடம் பேசத் தொடங்குவார்.
கொஞ்சம் கொஞ்சமாக தன் கருத்தை அவர்கள் மனதில் விதைப்பார் . இது இவர் மக்களைத் தன் வசப்படுத்த பயன்படுத்திய உத்திகளுள் ஒன்று.
இவரது நூல்கள் என ஏதுவும்
கிடைக்கவில்லை. படிக்காத மேதையாகவே வரலாறு இவரை நமக்கு அறிமுகம் செய்கிறது.
இவருக்குப் பிற்காலத்தவர் மற்றும் சமகாலத்தவர்களின் நூல்கள் வழியாகவே நாம் இவரைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறது .
பிளேட்டோ மற்றும் ஸெலோபோன் போன்ற தத்துவ ஞானிகள் எழுதிய நூல்களிலிருந்துதான் நாம் இவரைப்பற்றி அதிகமாக அறிய முடிகிறது.
சாக்ரட்டீஸ்சின் அறிவுபூர்வமான பேச்சையும் பெருவாரியான இளைஞர்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கியதையும் கண்ட ஆட்சியாளருக்கு இவரால்
ஒரு புரட்சி வெடிக்கலாம்
என்றதொரு அச்சம் ஏற்படத் தொடங்கியது .
அதனால் அவர்மீது கிரேக்க இளைஞர்களைக் கெடுக்கிறார் என்ற ஒரு மாபெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதனால் அவர் கைது செய்யப் பட்டார். விசாரணை நடத்தப்பட்டது.
தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டினை ஆணித்தரமாக சாக்ரட்டீஸ் மறுத்தார்.
மக்களுக்கு நல்லது செய்யவே விரும்பினேன் என்றார். தான் செய்தது தவறு என கடைசிவரை ஒத்துக்கொள்ளவில்லை. தண்டனை
பெற்றுவிடுவோமோ என்ற அச்சம் துளியும் இல்லாமல் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.
மன்னிப்பு கேட்க மறுத்தார் .தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
தத்துவஞானிகளின் தந்தையான சாக்ரட்டீஸ்க்குகொடுக்கப்பட்ட
தண்டனை என்ன தெரியுமா?
மரணதண்டனை.
அதுவும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட வேண்டும் என்பது தீர்ப்பு.
தீர்ப்பைக் கேட்டதும் சாக்ரடீஸ் அதிர்ந்து விடவில்லை.
மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். மரணத்திற்கு அஞ்சாத மாமேதை .
மரணம் பற்றி சாக்ரடீஸ் சொன்ன தத்துவம் என்ன தெரியுமா ?.
"மரணம்பற்றி கவலைப்படாதே! நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை. அது என்னவென்று உனக்குத்தெரியாது. அது வந்தபோது நீயே இருக்கப் போவதில்லை. பிறகு ஏன் கவலைப்படுகிறாய்?" என்று கேட்டவர்.
ஆனால் சாக்ரடீஸ் மாணவர்களால் இந்தத் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சாக்ரட்டீஸை சிறையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்று அவருடைய மாணவர்கள் நினைத்தனர்.
அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஆனால் சாக்ரட்டீஸ் அதனை ஏற்க மறுத்துவிட்டார் .
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று
சொல்லி அமைதியாக இருந்தார்.
சட்டம் வரலாற்றுப் பிழையான ஒரு தீர்ப்பை உறுதி செய்தது.
சாக்ரடீஸ்சுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய
அந்த நாளும் வந்தது.
ஒரு மாலைநேரம், சூரிய அஸ்தமனமாகும் வேளை. கொடிய விஷம் நிரப்பிய கோப்பை
சாக்ரட்டீஸ் கைகளில் தரப்பட்டது.
இறுதிவரை மகிழ்வோடு தன் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாக்ரட்டீஸ் விஷக் கோப்பையை வாங்கி
அப்படியே அருந்தினார் .
ஒரு தத்துவ ஞானியின் உயிர் ஒரு கோப்பை விஷத்தால் முடித்து வைக்கப்பட்டது.
இயேசுவுக்கு சிலுவையைத் தந்ததுபோல, நபிகளுக்கு கல்லடி தந்தது போல சாக்ரட்டீசுக்கு விஷம் தரப்பட்டது.
'நல்ல குணங்களை நான் ஞானம் என்பேன்" என்று அறிவுக்கு புதுவிளக்கம் தந்தவர் அநியாயமாக கொல்லப்பட்டார்.
"நாம் எதை இழந்தாலும் தன்மானத்தை இழக்க இடம் தரக்கூடாது" என்று சொல்லித் தந்தவர் தன்மானம் இழக்காமல் தன் இறுதி மூச்சினை நிறுத்திக்கொண்டார்.
"நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைபெற்ற பின்பு அதைக் காப்பாற்றுவதில் உறுதியாயிரு"
என்று நட்புக்கு நல்ல நீதியைச் சொல்லித் தந்தவருக்கு நல்லது செய்ய நாட்கள் கொடுக்கப் படாமல் காலக்கணக்கு விஷக்கோப்பையால் முடித்து வைக்கப்பட்டது என்பது வரலாறு.
Comments
Post a Comment