ஓய்வறியா ஆசிரியர்கள் கூடுகை

ஓய்வறியா ஆசிரியர்கள் கூடுகை


ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் 
ஞானம் செல்லப்பா வீட்டில்
ஓய்வறியா ஆசிரியர்கள் கூடுகை
உவகையால் ஒலித்ததோர் பேரிகை
மாறியது சட்டென்று வானிலை
துளைத்தது நாசியை நறும்புகையலை
நடந்த கால்களுக்குத் தடையிடுவாரில்லை
கண்கள் கண்டன வாயிலை
அழைத்தது ஞானப் பண்ணலை
கூடிக் கொண்டாடிய அன்பலை
கூடத்தில் நடந்ததோ நேரலை
உள்ளம் உறவாடிய பேச்சலை
கள்ளமில்லா இளமை துள்ளலை
கவின்செய  வந்த மகிழ்வலை
நுவல முடியா சிரிப்பலை
நேற்றைய நிகழ்வு நினைவலை
கற்றவை பெற்றவை உரைத்தவை
மெல்லத் தொட்டுச் சென்ற உணர்வலை
உள்ளி உள்ளி உவத்தலை
தொடர்ந்து வந்தது விளம்பர இடைவேளை

விரிந்தன பசுமைமிகு வாழையிலை
காட்சிகளாயின கவின்மிகு கறிவகை 
கண்கள் இமைக்க மறந்தன நிகழ்தலை
தடையிட மறுத்தன நாநீர்ச் சுரத்தலை
அழைத்தது நறுமணம் பசித்தலை
மறுத்து வயிறு எழுப்பியது ஒலியலை
வாய்க்கும் கைக்கும் நடந்த மோதலை
வெற்றியில் முடித்து வைத்தது
பாயசக் குவளை
உள்ளம் நிறுத்தவில்லை பூரித்தலை
கலந்துரையாடலாகிய தொடரலை
நாழிகைக் கடந்ததை உணர்த்தலை
எழ மறுத்து இருத்தலை
புரிந்த ஆசிரியர் ஸ்டீபன் அவர்கள்
அன்பால் பொழிந்தார்  பரிசு மழை
தொடர் அன்பளிப்பால் நனைய வைத்து  பூரிக்க வைத்தது ஆசிரியர்
ஞானம் அவர்களின்  அன்பின் பேரலை
விடைபெற மறுத்து நிற்கையில்
பெட்டிச் சோறு கட்டித் தந்து
வழியனுப்பி வைத்தது 
என்றென்றும் நெஞ்சில் நிற்கும் நினைவலை!

அக்கா உம்மோடு
ஓரிரு வார்த்தை
உளமார உரையாட விழைகிறேன் 
உம் வீடு 
அடையா அறச்சாலையோ
ஆதிரை இட்ட அட்சய பாத்திரம் 
நின்னிடம் வந்ததுவோ
அன்னமிட்டு எம்மைக்
கன்னமிட்ட கள்வர் ஆனீரோ
ஒற்றை ஆளாய் நின்றிருந்த எம்மைக்
கற்றையாய் அள்ளி
பெற்றப் பிள்ளையாய் அரவணைக்கும்
பெரும்பேறு பெற்றது எதனாலோ
அண்ணனின் வளர்ப்பும்
அண்ணியின் பராமரிப்பும்
கற்றுத் தந்தது இதுதானோ
போதலை போதலை
என்ற உள்ளம் ஏங்கலை
இன்றுவரை  நிறுத்தவில்லை
ஞானம்மாக்கா உங்கள்  வீட்டு
கொண்டாட்ட அலை!

Comments