நமக்கு நாம் அழாதது என்னோ

நமக்கு நாம் அழாதது ஏனோ

ஒவ்வொரு நாள் விடியும்போதும் வாழ்வில் 

ஒருநாள் குறைந்து கொண்டே இருக்கிறது.


உடல்ரீதியான மாற்றங்கள் நிகழ்கின்றன.

நேற்று இருந்தது போல இன்று இல்லை.

மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் மாறுகிறது.

அதற்காக நாம் யாரும் வருந்துவதில்லை.

பிறந்தநாள் வந்ததென்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ஒரு வயது கூடிவிட்டதே என்று

வருந்துவதில்லை.


இளமையை கொண்டாடுகிறோம்.

இன்பத்தில் மெய்மறக்கிறோம்.

இதுதான் வாழ்க்கை என்று இன்பமாகப் பொழுதைக் கழிக்கிறோம்.

களிப்படைகிறோம்.


நேற்றைய நினைவு இல்லை.

நாளை மாறப்போகும் காட்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

கொண்டாட்டமும் கும்மாளமுமாக

வாழ்க்கை நகர்கிறது.


எல்லோரும் மகிழ்ச்சியாக 

வாழ்கின்றனரா?

வாழ்க்கைப் போராட்டங்கள் வாசலைத்

தட்டுகின்றன.

விடியும் பொழுது நல்லதாக விடிய வேண்டுமே என்ற கவலையோடு

பலருடைய வாழ்க்கை விடிகிறது.அதற்காக  அழுகை வரவில்லை.

இதுவும் கடந்து போகும் என்று

கடந்து வந்துவிட்டோம்.


இப்படி  இளமை போயே போயிற்று.

இப்போது மூப்பு வந்து நிற்கிறது.

வருந்தினோமா?

இல்லை.சாதாரணமாக கடந்து போகிறோம்.

அதையும் கொண்டாடிக் கொண்டுதான்

இருக்கிறோம்.


ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். அதற்கெல்லாம் அழுதகிறோமா என்றால் இல்லை .வாழ்க்கை அதுபாட்டு போய்க்கொண்டே இருக்கிறது. நாம் நமது வழியில் போய்க்கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒருவர் இறந்துவிட்டார் என்றதும் அழுகை,கூப்பாடு,புலம்பல்.

ஏன்....ஏன் இப்படி?

இப்படிக் கேட்கிறார் ஒருவர்.

உண்மையில் அவர் கேட்பதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.


இதோ அவர் கேட்ட பாடல் உங்களுக்காக...

 

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ


     -குண்டலகேசி


எடுத்து மகிழும் இளங்குழந்தையாக இருந்தீர்கள்.

அந்தக் இளங்குழந்தைப் பருவம் செத்துப் போயிற்று. 

 பாலரொடு ஓடி நடந்து, அஞ்சு வயதுவரை விளையாடினீர்கள் .அந்தப் பாலப்பருவமும் செத்துப்போயிற்று. 

 உருண்டு, மருண்டு, திரண்ட காளைப்பருவம் வந்தது.

துள்ளித் திரிந்த காளைப்பருவமும் செத்துப் போயிற்று.

இப்படி வாழ்வில் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறோம்.

அடுத்தவர் சாவுகளுக்கெல்லாம் ஓவென்று ஒப்பாரிவைத்து அழும் நாம், ஒவ்வொரு நாளும் நாம் சாகின்ற நிலையில், நம் சாவுக்கு ஏன் அழுவதில்லை?

என்று கேட்கிறார் குண்டலகேசி ஆசிரியர் நாதகுத்தனார்.


ஒவ்வொரு பருவமும் கடந்து போவது போலத்தான் மூப்பும் வந்து கடந்து போகிறது. மற்றபருவங்களால் ஏற்படும் இழப்புக்கு அழாத நாம் முதுமைப் பருவம் வந்து கடந்து போகும்போது மட்டும் ஏன் அழுகிறோம்? அதுவும் அடுத்தவர் இறப்புக்கு ஏன் அழுகிறோம் என்பதுதான் 

நாதகுத்தனாரின் கேள்வி.

சரியாகத்தானே கேட்டிருக்கிறார்.


நமக்கு நாம் அழாதது என்னோ?


Comments