வழக்கிழந்தவர் அழுத கண்ணீர்
வழக்கிழந்தவர் அழுத கண்ணீர்
ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை என்று நம்பி விடுகிறோம்.
மாறுபட்ட மனிதர்கள்.
பொய்யும் புரட்டும் பேசும்
மனிதர்கள் உள்ள உலகம்.
நாவன்மை இருந்தால் போதும்.
பொய்யையும் உண்மை என்று நம்ப வைத்துவிடலாம்.
வழக்காளுநர்களுக்கு சொல்வன்மை
வேண்டும். அவர் எந்தச் பொய்யையும் உண்மை என்று நம்ப வைத்துவிடுவார்.
எந்த உண்மையையும் பொய்யாக்கி விடுவார்.
இந்த உலகம் பொய்யை உண்மை என்றும்
உண்மையைப் பொய்யென்றும் புரட்டிப்
பேசுகிறவர்களுக்குக் கொடுக்கிற மரியாதை அலாதியானது.
இவற்றை எல்லாம் ஒரு புலவர் பாடலாகப் பாடியிருக்கிறார்.
பாடல் இதோ உங்களுக்காக....
"பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே"
அதாவது சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும்.
பேசத் தெரிந்தவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என்று அடித்துப் பேசுவார்கள் .
ஆணித்தரமான உண்மை இருப்பது போல நம்ப வைப்பார்கள்.
அதுதான் உண்மை என்று நம்பும்படியாகவே அவருடைய பேச்சு இருக்கும்.
ஆமாம் பொய்யை மெய்யென்று நம்ப வைத்துவிட்டான்.
அப்படியானால் உண்மையின் நிலைமை எப்படி இருக்கும் ? என்ன ஆகும்?
என்ன ஆகப்போகிறது? இதோ இப்படித்தான் ஆகப்போகிறது.
என்று அதற்கும் அவரே பதில் தந்துவிட்டார்.
" மெய்யுடை ஒருவன் சொல்ல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே"
ஒருவனிடம் உண்மை இருக்கிறது.
அதை எப்படி மெய்ப்பது?
எப்படிப் பேசிப் புரிய வைப்பது?
தெரியாமல் விழிக்கிறான்.
பேசமுடியாமல் திணறுகிறான்.
பேச்சுத் திறமையில்லாத காரணத்தால் அவன் சொல்லும் உண்மையை யாரும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால் அவன் சொல்லும் மெய்யும் பொய் என்றே கொள்ளப்படுகிறது .
என்னைக் கொடுமை இது?
பொய் உண்மையாவதும்
உண்மை பொய்யாவதும்
பேசும் பேச்சில்தான் இருக்கிறதா?
ஐயோ... பரிதாபமாக இருக்கிறதே!
சரி இப்போது பொய்யனை
உண்மையானவன் என்றும் தீர்ப்பு எழுதியாகிவிட்டது.
உண்மையானவரைப் பொய்யர் என்று தீர்ப்பு வழங்கி தண்டனை கொடுத்தாயிற்று.
பொய்யனுக்கு மகிழ்ச்சி .
உண்மையானவன் பாடு...???
உண்மை பொய்யாகிப் போனதால்
அவனால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவனால் பேச முடியவில்லை.
அழத்தான் முடியும் .
வேறென்ன செய்ய முடியும்?
அழுகிறான் . அழுகிறான். அழுதுகொண்டே இருக்கிறான்.
தீர்ப்பு வழங்கியவர் அவர் பாட்டுக்குப் போய்விட்டார்.
இதைப் பார்த்த புலவர்க்குச் சும்மா இருக்க முடியவில்லை.
ஆராயாது வழங்கிய தீர்ப்பு ஒரு அப்பாவி யைக் குற்றப்படுத்திவிட்டதே என மனம் நொந்து போகிறார். இது என்ன தீர்ப்பு?
இப்போது புலவரின் கோபம் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மூன்றாவது ஆள்பக்கம் திரும்புகிறது.
ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ஆத்திரம் பாடலாக வெளிவருகிறது.
இதோ பாடல் உங்களுக்காக...
"இருவர் தம் சொல்லையும் ஏழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும்மே"
இருதரப்பினர் கூறுவதையும் பலமுறைக் கேட்டும், இருவரும் ஒப்ப
உண்மையின் வழிநின்று நீதி கூறாவிடில், வழக்கில் தோல்வியுற்றவர்
அதாவது உண்மையானவர் மனம்
கசந்து அழும் கண்ணீர்
தீர்ப்பு வழங்கியவர் தலைமுறைகளுக்கு எதிராகத் திரும்பும்.
காக்கும் கடவுள் முறையாக
நின்று
காத்தாலும் முறைதவறி தீர்ப்பளித்தமையால் அவர் பரம்பரை அழிவதென்னவோ உறுதி
என்கிறார்.
எவ்வளவு பெரிய சாபம் விட்டுவிட்டார்
பாருங்கள்.
ஆராய்ந்து நீதி வழங்குங்கள்.
வெறும் வாதங்களை வைத்துத் தீர்ப்பு வழங்காதீர்கள்
பின்புலத்தை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது உங்கள் கடமை.
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது.
அப்படி தண்டனை பெற்றுவிட்டால்
அதற்கு முழுப் பொறுப்பையும் நீதிபதிதான்
ஏற்க வேண்டும்.
அதற்கான பழி பாவத்தை நீங்களும் உங்கள் குடும்பமும்தான்
சுமக்க வேண்டும்.
குற்றம் செய்தவனை விட குற்றம் செய்தவனை தப்பிக்க விடுதல் பெரும் பாவம்.
குற்றமே செய்யாதவனைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தல் பாவத்தில் பெரும் பாவம்.
இப்படித் துணிச்சலாகப் பாடியவர் யார் தெரியுமா?
அதிவீரராம பாண்டியர்.
அவர் தனது வெற்றி வேற்கையில்தான்
இப்படிப் பாடி வைத்துள்ளார்.
நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்கள்
கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய
நல்ல சிந்தனைக்குரிய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக