காக்கைக்கு ஆகா கூகை
காக்கைக்கு ஆகா கூகை
எண்ணற்ற புலவர்கள் தமிழுக்குப்
பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுள் தனிப்பிறவி எடுத்து வந்தவர் கவி காளமேகம் என்றால் மிகை ஆகாது. நொடிப்பொழுதில் பாடல் எழுதும்
ஆற்றல் மிக்கவர். இதனால் இவரை ஆசு கவி என்று கூறுவர்.
எப்போதுமே இரட்டை அர்த்தப் பாடல்கள்பாடவேண்டும் என்றால் காளமேகத்திற்குக் கொண்டாட்டம்.இவருடைய பாடல்களில் விவேகமும் இருக்கும்.கூடவே குறும்புக்கும் பஞ்சம் இருக்காது.
எந்த சொல்லைச் சொன்னாலும் பாடிவிடுவார். சொல் இருந்தால் பாடல் பாடி விடலாம்.இது புலவர்களுக்கு எளிதானது.
வெறும் எழுத்து மட்டும் இருந்தால் எப்படிப் பாடல் பாட முடியும்?
இது அனைவராலும் கூடுமா?
ஒருமுறை ஒரு மனிதருக்கு காளமேகத்தைக் குழப்பி விட வேண்டும் என்று ஆசை.
ஒரு வேடிக்கை காட்ட வேண்டும் என்ற விபரீத ஆசையில் ஒரு எழுத்தைக் கொடுத்துப் பாடல் பாடச் சொன்னார்.
அதுவும் ககர வரிசை எழுத்துகள்மட்டுமே வரும்படி பாடுங்கள் என்றுநிபந்தனையோடு பாடல் பாட வேண்டும் என்றார்.
க, கா, கி, கீ ,கு கூ.... வரிசைதானே ...
இதோ ...இப்பொழுதே என்று பாடத்
தொடங்கிவிட்டார் காளமேகம் .
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க _ கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா "
என மறுநிமிடம் கடகடவென்று கானமழை பொழிய பாடல் கேட்டவர் வாயடைத்துப் போய்விட்டார்.ஆனாலும் இந்தக் காள மேகத்தைச் சும்மா விடக்கூடாது என்று எண்ணினார் அந்த மனிதர்.
சும்மா ககா கிகீ குக்கூ என்று கூவி விட்டால் பாடலாகிவிடுமா?பொருள் வேண்டும் ஐயா பொருள் என்றார்.
பொருள்தானே வேண்டும் இதோ கேளுங்கள்.
காக்கைக்கு ஆகா கூகை _ காகத்திற்கு இரவில்
கூகையை வெல்ல முடியாது
கூகைக்கு ஆகா காக்கை _ கூகைக்கு பகலில் காகத்தை வெல்ல முடியாது
கோக்கு கூ காக்கைக்கு _ அரசன் தன் நாட்டை பகைவரிடமிருந்து
காப்பதற்கு
கொக்கொக்க _ கொக்கைப் போல
கைக்கைக்கு காக்கைக்கு _ பகையை எதிர்த்து நாட்டைக்
காப்பதற்கு
கைக்கு ஐக்கு ஆகா _ சிறந்த அரசனாலும் முடியாமல்
போய்விடும் .
இதுதான் பொருள்.
இது போதுமா இல்லை இன்னும் விளக்கம் வேண்டுமா?
விளக்குகிறேன் கேளும்.
கேட்டு விளங்கிக் கொள்ளும்.
காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும்.
கூகையானது இரவில் காக்கையை வெல்ல முடியும்.
கோ என்று சொல்லப்படுகிற அரசனானவன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும் பகலில் காக்கையைப்போலவும்
நாட்டைக் காக்க வேண்டும்.
எதிரியின் பலவீனமறிந்து கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும்வரைக் காத்திருந்து எதிரிகளைத் தாக்கி வெற்றி பெற வேண்டும்.
ஏற்ற காலம் இல்லை எனில் திறமையான மன்னனாக இருந்தால்கூட வெற்றி பெற முடியாமல் போகலாம்என்பதுதான் நான் பாடிய பாடலின் விளக்கம்.
இது போதுமா இன்னும் வேண்டுமா?
இன்னுமா பாடல் பாடச் சொன்னவர் பக்கத்தில் நிற்பார்?
காளமேகத்தின் கண்முன்னர் நிற்க நாணி காணாமல் போய்விட்டார் அந்த மனிதர்.
அப்பப்பா என்னவொரு அசாத்திய புலமை !
காக்கைக்கையோடு கூகையையும் அழைத்து வந்தார்.
கூடவே கொக்கையும் அல்லவா கூட்டி வந்து மன்னன் முன் நிறுத்தி பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
இவ்வளவு உயர்வான கருத்தைச் சொல்ல வெறும் ககர வரிசை எழுத்துகளா...?
இவர் புலமைக்கு முன்னர்
யார் நிற்றல் கூடும்?
கருத்துகள்
கருத்துரையிடுக