இல்லாதவை
இல்லாதவை
யார் யாரிடம் எது எது இல்லை என்று சொல்லிச் அறிந்துகொள்ள ஆவலா?
இல்லை என்ற சொல்லை வைத்தே அது இல்லாதவர்கள் யார் யார் என்று தேடியிருக்கிறார் நறுந்தொகை (வெற்றிவேற்கை)ஆசிரியர்.
வாருங்கள்...அந்த
இல்லை என்ற சொல்லைத் தூக்கிச் சுமந்துகொண்டு
அலைபவர்கள் யார் யார் என்று பார்த்துவிடுவோம்.
1. யானைக் கில்லை தானமுந் தருமமும்.
யானையின் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை.
2.. பூனைக் கில்லை தவமுந் தயையும்.
பூனை கண்களை மூடி இருப்பதாகவும்
தவம் செய்வதாகவும் இரக்க குணத்தோடு இருப்பதாகவும் கருதப்படுவதில்லை.
3. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும்.
ஞானிகள் வாழ்க்கையில் இன்பம் துன்பம்
என்று எதற்கும் இடமில்லை.
4.. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.
கரையானானது இவர் செல்வந்தர் இவர் புகழ்மிக்கவர்
என்று பார்த்துப்பார்த்து தன் வேலையை நிகழ்த்துவதில்லை.
5. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.
முதலையானது
நீந்தும் நிலையிலுள்ள நீர்
நிலை கொள்ளும் அளவுள்ளநீர் என்று பார்த்துப் பார்த்து
நீரில் இறங்குவதில்லை.
6. அச்சமு நாணமும் அறிவிலோர் கில்லை.
அஞ்சத்தக்க தீய தொழிலுக்கு அஞ்சுதலும் பழிக்கு நாணுதலும் அறிவில்லாதவரிடத்தில்
ஒருபோதும் இருப்பதில்லை.
7..நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
நல்ல நாள்,கெட்ட நாள் பார்த்து இதைஇதைச் செய்ய வேண்டும்
என்ற நியதி எளியவர்களிடம் இருப்பதில்லை.
8 கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.
வறுமையுற்றவர்களோடு நண்பர்களும் உறவிவினர்களும்
சேர்ந்திருப்பதில்லை .
யானையிடம் தான தர்ம சிந்தனை இருப்பதில்லை.
பூனையிடம் தவம் என்ற ஒன்று இல்லை.
ஞானிகளுக்கு இன்பம் துன்பம் பற்றிய கவலை இல்லை.
கரையான் இருப்பவர் இல்லாதவர் என்று
பாரபட்சம் பார்ப்பதில்லை.
முதலை நீரைப் பற்றி யோசிப்பதில்லை
அறிவில்லாதவர்களிடம் அச்சம் நாணம் எதுவுமில்லை.
வறியவர்களிடம் நாள் கிழமை பார்க்கும் பழக்கம் இல்லை.
கெட்டுப்போனவர்களோடு சுற்றமும் நட்பும்
உறவாடுவதில்லை.
எவ்வளவு அழகாக உண்மையை
நச்சென்று சொல்லியிருக்கிறார் வெற்றிவேற்கை ஆசிரியர் அதிவீரராம பாண்டியர்.
கருத்துகள்
கருத்துரையிடுக