குன்றென நிமிர்ந்து நில்

குன்றென நிமிர்ந்து நில் 


மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் மிக முக்கியமான வரி  "குன்றென நிமிர்ந்து நில்" என்பதாகும். 


அதென்ன குன்றென நிமிர்ந்து நில்

 மலையென கம்பீரமாக நிமிர்ந்து நில் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.

குன்று மலையை விட சிறியதுதானே 

அது எப்படி நிமிர்ந்து நிற்கிறது என்று கொள்ள முடியும்? இப்படி பல கேள்விகள் குறுக்கும் நெடுக்கும் ஓட 

குன்று ஒன்றை மனக்கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தேன்.


மலையடிவாரத்தில் இருக்கும் சிறிய குன்று.

ஆண்டுகள் பல ஆகியும் அசரவில்லை.

பக்கத்தில் இவ்வளவு பெரிய மலை இருக்கிறது அல்லவா என்று குன்றிப் போகவில்லை.

நான் நானாக இருக்கிறேன்.

எந்த நிலையிலும் என் உறுதி குறையவில்லை.

எத்தனை முறையோ மழை வெள்ளம் வந்து முட்டி மோதிப் பார்த்திருக்கிறது.

நான் ஏன் அசைந்து கொடுக்க வேண்டும்?

இது எனக்கான இடம்.

புயல் வந்தது

புரட்டிப் போடப் பார்த்தது.

சின்னச்சின்ன கற்கள் வந்து முட்டி மோதிச் பார்த்தது. 


நான் அசரவில்லை. அசைந்து கொடுக்கவில்லை.

நழுவவில்லை.

நகர்ந்து கொடுக்கவில்லை.

நான் நானாக இருந்தேன்.

எந்த இடத்திலும் என்னை நான் விட்டுக் கொடுக்கவில்லை.

இதுதான் என் சிறப்பு என்று என்னைப்பார்த்து குன்று சிரித்து நின்றது.


இப்போது நானும் எனக்குள் ஒரு மனக்கணக்குப் போட்டுவைத்தேன்.

இந்த சிறிய குன்றுக்கான இயல்பு நமக்குள் இருக்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் அசந்து போய்விடக்கூடாது. விட்டுக்கொடுத்து விலகிப் போய்விடக்கூடாது.

எத்தனையோ இடர்கள் வரலாம்.

நம்மை வீழ்த்தி விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எதிரிகள்

கற்களாக சொற்களை வீசலாம். சற்று தடுமாறிவிட்டால் 

அப்படியே குப்புற தள்ளி விட முயற்சி செய்யலாம்.

கூடாது ...கூடாது...


உன் மன உறுதி தான் நமக்கான பலம்.

எனக்கானது மட்டுமல்ல. உங்களுக்கான பலம்.

எந்தச் சூழலிலும் யாருக்காகவும் 

மனவுறுதியை விட்டுவிட்டுவிடாது நாம்  நாமாக  இருக்க வேண்டும்.

அச்சமின்றி நேர்மையுடன் நிமிர்க்க பழகிக் கொள்வோம்.

.

நம் பார்வை பார்வை எப்போதும் மேல் நோக்கியதாக இருக்கட்டும்.

உயர்வானதாக இருக்கட்டும்.


இந்தப் பண்பு உங்களுக்குள்ளும் 

எனக்குள்ளும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

"குன்றென நிமிர்ந்து நில்" என்கிறார்

பாரதி 


நிமிர்ந்து நில்.

யாருக்கும் அஞ்சாது நில்.

அசராது நில்..

அசைந்து கொடுக்காது நில்.

உறுதியோடு நில்.

உயர்வை நோக்கி நில்.

குன்றென நிமிர்ந்து நில்.






 




கருத்துகள்

Popular Posts