தலம்-தளம் எது சரி

தளம்- தலம்  எது சரி


நாம் பயன்படுத்தும் எளிய சொற்களின் பொருளைத் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளாததால் பல நேரங்களில் பிழைபட எழுதி விடுகிறோம். பேசிவிடுகிறோம்.

வலைத் தளங்களில்  வரும் சொற்களைப் படித்துப் படித்து அதுதான் சரியான சொல் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம்.

வலைத்தளங்களில் பெரும்பாலான சொற்கள் பிழைபட எழுதப்படுகின்றன என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

எடுத்துக்காட்டாக தளம் தலம் இந்த இரண்டு சொற்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி எழுதினால் என்ன? இரண்டுமே இடம் என்ற ஒரே பொருள்தான்  கொடுக்கிறது என்று நினைத்து  எழுதுகிறோம்.

இவை இரண்டு சொற்களுக்கும் இடையில் சிறிய பொருள் வேறுபாடு உண்டு.

 தளம் என்பது தரைப் பரப்பு அல்லது அடுக்கு என்ற பொருளில் சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டாக கட்டிடத்தின்  அடுக்கு முதல் தளம் ,அடித்தளம்,

தரைத்தளம் போன்றவற்றை

சொல்லலாம்.

பரப்பு எல்லை இவற்றைக் குறிப்பிடும்போதும்  தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

 தலம் என்பது குறிப்பிட்ட புனிதமான இடங்களையோ அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க  இடங்களையோ குறிப்பிடும் போது எழுதப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக புண்ணியத் தலம், வழிபாட்டுத் தலம் என்று எழுதப்பட வேண்டும்.

புண்ணியத் தளம் வழிபாட்டுத்தளம் என்று எழுதக்கூடாது

கட்டிடம் மற்றும் இணையம் சார்ந்த இடங்களுக்கு தளம் என்றும், ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு தலம் என்றும் எழுத வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டால் தவறு நிகழாது.

தளம்:

1.குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டுத் தளம் அமைக்கப்பட்டது.

2.நாம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இணையதளம் பயன்படுத்துகிறோம்.

3.இந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் நூலகம் உள்ளது.

4.விவாதம் நடத்துவதற்கு இது ஒரு சிறந்த தளமாக இந்த மேடை அமைந்துள்ளது.

தலம்:

 1.திருவண்ணாமலை ஒரு புகழ்பெற்ற சிவத்தலம்.

2.இராமேசுவரம் ஒரு முக்கியமான புனித தலம்.

3.வேளாங்கண்ணி கிறிஸ்தவர்களின் புனித தலம்.

பொருள் வேறுபாடு அறிந்து கொண்டீர்களல்லவா?

இனி  பிழைபட  எழுத வாய்ப்பு ஏற்படாது

கருத்துகள்

Popular Posts