குடிகாரன் பேச்சு

     குடிகாரன் பேச்சு
மாலை ஆறு மணியில் இருந்தே  
தெருவில் நின்று
காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்தான் மணி.
தெருவில் வருவோர் போவோரைப்
பார்த்தால் குரல் உற்சாக மிகுதியில்
சற்று உயர்ந்து நின்றது.

யாரும் பெரியவர்கள் வந்துவிட்டால்...
பம்முவது போல பாசாங்கு காட்டுவான்.
இது கடந்த ஒருவாரமாகத்தான்
அரங்கேறியிருக்கிறது.

மணி ஒன்றும் குடிகாரன் இல்லை.
அப்பப்போ வேலை அலுப்புக்காக
குடிப்பான். ஆனால் வெளியில் 
தலை காட்டமாட்டான். 
அப்படியே வீட்டில் படுத்து தூங்கிவிடுவான்.
அதனால் வெளியில் யாருக்குமே மணி
குடிப்பது தெரியாது.

இப்போது இந்த மணிக்கு என்னாயிற்று...?

முதல் இரண்டு நாட்கள் மனைவி
இழுத்துக் கொண்டு சென்று...வீட்டிற்குள்
பூட்டி வைத்துப் பார்த்தாள்.

சிறிது நேரத்தில் திமிறிக்கொண்டு வெளியில்
ஓடி வந்து விடுவான்.
உங்களால் எங்க மானம் போகுது சொல்லிச்
சொல்லி அழுதுப் பார்த்தாள். 
மணி கேட்பதாக இல்லை.

அதற்குமேல் அவளால் மணியை
அடக்க முடியவில்லை.

அவளையும் கண்டமேனிக்குத் திட்டவும்
அடிக்கவும் ஆரம்பித்தான்.

"எக்கேடும் கெட்டுப்போகட்டும் ..சனியன்
எங்களை விட்டால் சரி "என்பதுபோல
கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் இருந்து
விடுவாள்.

ஒவ்வொருநாள் வீட்டை உதைத்துப் பார்த்தான்.
கதவைத் திறப்பதில்லை.
அப்படியே வாசலிலேயே தூங்கி
விடுவான்.

இன்று என்ன நினைத்தானோ....
புதிதாக ஒரு பிரச்சினையை இழுத்து 
வந்தான்.
தான் வேலை செய்கிற தோட்டத்து அண்ணாச்சியை
வாயில் வந்தபடி பேசிக் கொண்டே வந்தான்.

எதிரே வந்த மச்சினன் "ஏய்...மணி 
ஓவரா போர... பேசாம வீட்டில் போய் படுத்து தூங்கு"
என்று அதட்டினான்.

"ஏன்...அண்ணாச்சியைச் சொன்னா உனக்கு
பொத்துகிட்டு வருதா...."

"அநாவசியமா வம்புக்கு இழுக்காத ...
சொல்லிபுட்டேன்."

"எனக்கென்ன...பயமா..
உனக்கு பயமா இருக்குன்னா நீ பேசாம
போ...."

"சீய்...நன்றி கெட்ட ஜென்மம்.... நன்றி கெட்ட
ஜென்மம்.... அந்த பெரிய மனுசரைப் போயி
பேசுறீய.....உனக்கெல்லாம் அன்னன்னிக்கி
படியளக்குறவரு அவரு "

"பெரிய படி அளக்குறவரு....காலையிலிருந்து
சாயங்காலம்வரை மாங்கு மாங்குன்னு
உழைக்கிறேன். கூலி கொடுக்கிறாரு...
வேறு என்னத்த பெருசா தந்து
கிழிச்சுபுட்டாரு "

"வாயை மூடிட்டு போ....
இல்லன்னா...மரியாதை கெட்டு
போயிருவா...."

"போ...போ...பெரிய மரியாதையைப் பற்றி
பேச வந்துட்டாரு...."

"குடிக்கிற கஞ்சியையும் தட்டிக் கவுக்குறதுக்கு
பாக்குறா....வேறு என்னத்த சொல்ல....
எக்கேடும் கெட்டு போ..."
என்று அவன்பாட்டுக்குப்
போய்விட்டான் மச்சினன்.

மச்சினன் போனதும் அண்ணாச்சி மகள்
வீட்டுப் பக்கத்தில்  நின்று கத்த ஆரம்பித்தான்
மணி.
".அண்ணாச்சிக்குக்கு நான் நாய்போல உழைத்துப்
போட்டேன்........

பிள்ள மாதிரி...புள்ள மாதிரி என்பாரு....
உன் புள்ளைக்கு குடுக்குறமாதிரி எனக்கு
குடுக்க வேணாம்..ஒரு பத்து சென்ட்
நிலம் வீடு கட்ட தந்தா என்னவாம்....
ராவு பகலா வேலை பார்த்து
என்னத்தை கண்டேன்.....இனி உம்ம
தோட்டத்துப் பக்கமே வர மாட்டேன்....
 நீரு குடிக்கபிடாது என்று சொன்னீருன்னு
 இத்தனைநாள் குடிக்கல.....
 இனி குடிப்பேன்.....நித்தம் நித்தம்
 குடிப்பேன்...என்ன செய்வீருன்னு
 பாத்துருவோம்...."
 
"குடிச்சா யாரைப் பேசணும்னு தெரியாதா....
பேசாம வீட்டுக்கு வாங்கப்பா...".கையைப் பிடித்து
இழுத்தாள் மகள் புவனா..

"கையை உடு....நீ பொட்டப்பிள்ளை இங்கெல்லாம்
வரப்பிடாது.....போ...போ...வாறேன்."

"வாங்கப்பா...எல்லாரும் பார்க்குறாங்க"

"பார்க்கட்டும்...எல்லாரும் கேட்கட்டும்
என்றுதான் பேசுறேன்.."

"அ...ப்..பா..".உரக்கக் கத்தினாள் மகள்.

"நீ இப்போ வீட்டுக்குப் போகப் போறியா
இல்லியா....பேசாமல் போயிடு...கன்னாமண்டையைத்
தவுத்துபிடுவேன் " என்றபடி கல்லைக் கையில்
தூக்கினான் மணி.

மகள் அழுது கொண்டே 
வீட்டை நோக்கி ஓடினாள்.

மகள் போனதும் சற்று நேரம்
அமைதியாக உட்கார்ந்திருந்த
மணி நேரே வீட்டுக் கதவைப் போய்
தட்டினான்.

கதவை திறந்துவிட்டுவிட்டு
ஒதுங்கி நின்று கொண்டார் மனைவி.

நேரே போய் கட்டிலில் குப்புற படுத்துக் கொண்டான்.
பிள்ளைகள் பயந்துபோய் சுவரைப் பார்க்க
படுத்துக் கொண்டிருந்தனர்.

காலையில் வழக்கம்போல மண்வெட்டியை
எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு 
அண்ணாச்சி வீட்டு வாசலில் போய் நின்றான்.

"என்ன மணி...நேற்று ரொம்ப ரொம்ப பேசுனியாம."?
கேட்டார் அண்ணாச்சியின் மனைவி அம்புஜம்.

யாரு....ஒன்றுமே தெரியாததுபோல்
பின்னால் திரும்பிப் பார்த்தான்
மணி.

"அங்க...யாரைப் பார்கிறா...உன்னைத்தான்
கேட்டேன்."

"என்னையா.....நான் பேசினேனா....?"
எதுவுமே தெரியாதது போல கேட்டான்.

"அண்ணாச்சி நிலத்தை தராம எமாத்திப்புட்டாரு...
எமாத்துக்காரன்....் அப்புடி ...
இப்புடி இன்னியாம...."

"அண்ணாச்சியைப் போய் அப்படி
பேசுவனா....நான் பேசுனேனா? 
அண்ணாச்சியைப் பேசினா ...
என் நாக்கே அழுகிப் போயிடும்." வாயைப்
பொத்தினான்.

"குடிச்சா கண்ணு மண்ணு 
தெரியாம பேசுவியா...?"

"நேத்து கொஞ்சம் தண்ணிய கூடுதலா
போட்டுபுட்டேன். அதனால உளறிபுட்டேன்
போலிருக்கு.....எனக்கு சுத்தமா தெரியாதுக்கோ....
சாமி சத்தியமா எனக்கு ஒண்ணும்
தெரியாதுக்கோ..."

"சரி...விடு விடு...குடிச்சுட்டு தெரியாம
உளறிட்டான் என்கிறான்ல்ல....குடிகாரப்பய...."
என்றார் அண்ணாச்சி.

"ஏன் தாத்தா...குடிச்சா வீடு அடையாளம்
தெரியாதா....?" என்று கேட்டான்
அண்ணாச்சியின் பேரன் கதிர்.

"தெரியும்."

"குடிச்சா ஆள் அடையாளம் தெரியாதா? "

" நன்றாகத் தெரியும்."

"மணி மாமா.....நேற்று நீங்க  யாரு வீட்டுல போய்
தூங்குனீங்க."

"வேறு யாரு வீட்டுல போய் தூங்குவேன்.
எங்க வீட்டுலதான் தம்பி...
ஏன் கேட்கிற..."

"இருங்க...வர்றேன்...
குடிச்சாலும் அடுத்த வீட்டுக் கதவை தட்டல....
நேரே உங்க வீட்டுக்குத்தான் போயிருக்கீங்க...
உங்களுக்கு உங்க வீடு நல்லா ஞாபகம்
இருந்துருக்கு...இல்லையா...?"

"என்ன இது பெரிய மனுஷனாட்டம்
கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு.."என்றார் பாட்டி.

"விடுங்க பாட்டி..இவரு நேற்று வேண்டுமென்றேதான்
தாத்தாவைத் திட்டியிருக்காரு...
அவருக்கு தாத்தாமேல கோபம்.
அதை எப்படியாவது வெளிப்படுத்தணும்.
அதற்கு குடியைக் காரணம் காட்டி
நம்மை எல்லாம் ஏமாற்றுகிறார்...குடிச்சாலும்
அவரு வீடு தெரியுமாம்....பிள்ளைகுட்டிகள்
அடையாளம் தெரியுமாம்...நேற்று பேசுனது
மட்டும் மறந்து போச்சாம்.....
நான் நம்ப மாட்டேன்....இந்த ஆளைப்
போகச் சொல்லுங்க தாத்தா..
எனக்கு இந்த ஆளைப் பிடிக்கல...
பிடிக்கல....." என்று
கத்தினான் கதிர்.

கதிரை அப்படியே கட்டிப்பிடித்து
அணைத்துக் கொண்டார் தாத்தா.

 மணி அதற்குமேலும் தன்னை நியாயப்படுத்த
 முடியாமல் தலை குனிந்து நின்றான்.


  

Comments

Popular Posts