முட்டாள்கள் தினம்
முட்டாள்கள் தினம்
ஏமாற்றுவதும் ஏமாறுவதும் மகிழ்ச்சியாக
நடைபெறும் நாள்தான் ஏப்ரல் ஒன்று
முட்டாள்கள் தினம்.
அம்மாவுக்கான நாள் ஒன்று உண்டு.
அப்பாவுக்கான நாளும் உண்டு.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நாளை
உருவாக்கி வைத்த நாம் குழந்தைகளை மட்டும்
விட்டு வைப்போமா என்ன ?
குழந்தைகள் நாள் என்று ஒன்றைக்
கொண்டாடி மகிழ்ந்தோம்.
குழந்தைகளிலும் பெண் குழந்தைகளுக்கு
ஒரு நாள் என்று பிரித்துப் பார்த்துக்
கொண்டாடினோம்.
பெண் குழந்தைகளைக் கொண்டாடும் நாம்
மகளிரை மட்டும் விட்டு வைத்தால் எப்படி என
மகளிர் தினமும் கொண்டாடினோம்.
தந்தையர் தினம் கொண்டாடினோம்.
மனிதர்களோடு மட்டும் கொண்டாட்டங்களை
வைத்துக் கொண்டால் எப்படி ?
நீருக்கு ஒருநாள்.நிலத்துக்கு ஒரு நாள்.
காட்டுக்கு ஒருநாள். நாட்டு விலங்குக்கு
ஒருநாள்.
சிட்டுக் குருவிக்கும்கூட ஒரு நாள்
என்று நமது கொண்டாட்டங்கள் பலுகிக்
கொண்டே போனது.
நினைத்தாலே சிரிப்புதாங்க வருகிறது.
அட...சிரிப்புக்கும் ஒரு நாள் கொண்டாடினோமே.
இப்படி பகுத்துப் பார்த்துப் பார்த்து நாட்களைக்
கொண்டாடி வந்தோம்.
எந்தவிதப் பகுப்புமின்றி அதாவது எந்தவிதப்
பால் பாகுபாடுமின்றி ஒரு நாளைக்
கொண்டாடி வருகிறோம்.
அதுதான் முட்டாள்கள் தினம் என்ற நம்
அனைவருக்குமான நாள்.
இது ...எனக்கான நாள்.
உங்களுக்கான நாள் .
நம் அனைவருக்குமான நாள் ..
அதெப்படி ...?
உங்களுக்கான நாளாக இருக்கலாம்.
எங்களுக்கான நாள் என்று என்ன தைரியத்தில்
கூறுகிறீர்கள் என்று நீங்கள் சினப்படலாம்.
சினப்படாதீர்கள்...இது முட்டாள்கள் தினம்
இல்லைங்க..
நீங்கள்தான் மற்றவர்களை முட்டாள் ஆக்கப்
பார்க்கிறீர்கள்.
அதனால் இதனை முட்டாள்கள் தினம் என்பதைவிட
அறிவாளிகளின் தினம் என்றுதான்
கூறவேண்டும்.
ஆம்..நீங்கள்தான் அறிவாளிகள்.
அதனால்தான் உங்களால் பிறரை
ஏமாற்ற முடிகிறது.
இந்த ஏமாற்றலும் ஏமாறுதலும் கொடுக்கும்
மகிழ்ச்சியே அலாதியானது.
இந்த நாளை முட்டாள்கள் தினமாக
கொண்டாடுவதற்காகக் கூறப்படும்
காரணம் சுவையானது.
வேடிக்கையானது என்றுதான் சொல்ல வேண்டும்.
1562 ஆம் ஆண்டு போப்பாண்டவர் 13 ஆம்
கிரேகோரி என்பவர் பழங்கால ஜூலியன் காலண்டர்
முறையை மறுபடியும் அறிமுகப்படுத்தினார்.
அதன்படி ஜனவரி
முதல்நாள் புத்தாண்டு தொடங்குகிறது.
பல நாடுகள் போப்பாண்டவரின் இந்தக் காலண்டரை
ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் நாளைப்
புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒரு சில நாடுகளிலிருந்து அதற்கு
எதிர்ப்பு கிளம்பியது.
எதிர்ப்பாளர்கள் எல்லாம் ஏப்ரல்
ஒன்றாம் நாளில் புத்தாண்டு கொண்டாடி
வந்தனர்.
இப்போது ஜனவரி முதல்நாளில் புத்தாண்டு
கொண்டாடும் மக்கள் உள்ளத்தில்
ஒரு சின்ன விளையாட்டு விளையாடிப் பார்க்கலாமே
என்ற எண்ணம் தோன்றியது.
விளைவு ...ஏப்ரல் முதலாம் நாள் புத்தாண்டு
கொண்டாடுவோருக்கு ஒரு பரிசுப் பொருளை
அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குப்
பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
பரிசுப் பொருட்களை ஆவலோடு
பிரித்துப் பார்த்தபோது உள்ளே ஒரு ஆச்சரியம்
காத்திருந்தது.
ஆம்.. பெட்டியில் எதுவுமே வைக்கப்படவில்லை.
வெறுமனே நீங்கள் ஒரு முட்டாள்
என்று எழுதிய காகிதம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
இப்படித்தான் ஆரம்பத்தில் முட்டாள்கள் தினம்
கொண்டாடப்பட்டதாம்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா....!
பிரான்ஸ் நாட்டில் இதனை ஆரம்பத்தில்
மீன்களின் தினமாகத்தான் கொண்டாடி
வந்திருக்கின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் அங்குள்ள ஏரிகளில்
அதிகமான அளவில் மீன்கள் காணப்படுமாம்.
மீன்களுக்கு இரை போடுவதுபோல போட்டு
அவற்றை ஏமாற்றி பிடிப்பதால் இந்த
ஏமாற்று விளையாட்டுக்கு மீன்கள் தினம்
என்று பெயர் வைத்திருந்தனராம்.
என்னென்ன வழிகளில் எல்லாம் ஏமாற்று
நடைபெற்றிருக்கிறது பாருங்கள் !
எதற்காகக் கொண்டாடியிருந்தாலும் பள்ளிப்பருவத்தில்
நாம் விளையாடிய முட்டாள்தனமான விளையாட்டை
இன்றும் மறந்துவிட முடியாது.
"உன் சட்டையில் கறை "
என்று எத்தனை பேரை
ஏமாற்றியிருப்போம்.
"உன் தலையில் இது என்னது?" என்று
கேட்டு மொத்த தலைமுடியையும் கலைத்துப்
போட வைத்து வேடிக்கைக் காட்டியிருப்போம்.
"உன்னைப் பார்க்க உங்க அம்மா வந்திருக்கிறார்கள்"
என்று சொல்லி தோழியை வகுப்பிலிருந்து
பள்ளி நுழைவாயில்வரை ஓடவிட்டு விட்டு
தோழி திரும்பி வந்ததும் "நல்லா ஏமாந்தியா...நல்லா
ஏமாந்தியா...ஏப்ரல் பூல் "என்று சொல்லி
கைகொட்டிச் சிரித்திருப்போம்.
கைவிரல்களில் இரத்தம் வருவதுபோல
கையைப் பிடித்துக் கொண்டு ஆ...ஊ...என்று
வலிப்பது போல பாவலா காட்டி
அனைவரின் அனுதாபத்தைச் சம்பாதித்த பின்னர்
"ஏப்ரல் பூல்...ஏப்ரல் பூல் "என்று சொல்லி
அனைவர் முகத்தையும் சுருங்க வைத்திருப்போம்.
பல்லி ...பல்லி என்று கத்தியபடியே
நெகிழிப் பல்லியைக் காலுக்குக் கீழே வீசி
அவர்கள் தையாத் தக்கா...என்று குதிப்பதைப்
பார்த்து "ஏப்ரல் பூல்...ஏப்ரல் பூல் "என்று
சொல்லி மகிழ்ந்திருப்போம்.
"அட போப்பா....ஒரு நிமிடம் எனக்கு
இதயமே நின்றுவிட்டது போலிருந்தது"
என்று தோழிகள் பயத்தோடு
சொல்வதைக் கேட்பதில் அப்படி
ஒரு அற்ப மகிழ்ச்சி.
இப்படிப்பட்ட சின்ன சின்ன
ஏப்ரல் பூல் விளையாட்டுகள்தான்
இந்த நாளை மகிழ்ச்சியாக்குகின்றன.
"ஏப்ரல் பூல் "வெறுமனே விளையாட்டாக மட்டுமே
இருக்கட்டும். விபரீத விளையாட்டுகள் வேண்டாம்.
வதந்தி பரப்புவர்களும் உங்களை முட்டாள்களாக்க
காத்திருக்கலாம்.
வலைத்தளத்தில் பதிவிடப்படும் செய்திகளை
நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.
இது முட்டாள்கள் தினம் இல்லை. அறிவாளிகளுக்கான தினம்.
அனைவருக்கும் அறிவாளிகள் தின
வாழ்த்துகள்.
.
So good.
ReplyDeleteகடமையைச் செய்
Deleteபலனை எதிர்பாராதே
எல்லாப் பலனும் கடவுளுக்கே என்று
எண்ணித் துணிக கருமம் .
ஏமாற்றுவோர்
ஏமாந்து போவார்.
நன்றி.
Deleteசிறுவயதில் நடத்திய ஏப்ரல் பூல் விளையாட்டுகளை மறுபடியும் நினைவுபடுத்தியது மிக அருமை.
ReplyDelete