வியாபாரம்
வியாபாரம்
தலைவாசலுக்கும் அடுப்பங்கறைக்குமாக
நடந்து கொண்டிருந்தார் அம்மா.
மனசு படபடவென்று அடித்துக்
கொண்டிருந்தது.
முகம் குப்பென்று வியர்த்து வடிந்ததால்....
ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை
முந்தானையால் முகத்தைத் துடைத்துக்
கொண்டிருந்தார் பங்கஜத்தம்மா.
தன்னைப் பெண் பார்க்க வந்தபோதுகூட
இந்தப் பதற்றம் இல்லை....
ஏனோ தெரியவில்லை இன்று
கூடுதலான ஒரு பதற்றம். வயசுக்கு வந்த
மூணு பிள்ளைகளை வைத்திருக்கும்
அம்மாக்களுக்கே அந்த வலியும் பதைபதைப்பும்
இருக்கத்தான் செய்யும்.
மூத்தவளுக்கு முடிந்தால்தான் அடுத்த
பிள்ளைகளுக்குப் பார்க்க முடியும்.
ஆனால் மூத்தவள் கொஞ்சம் மாநிறமாக
இருந்ததால் வருகிற வரன் எல்லாம்
தட்டிப் போய்க் கொண்டே இருந்தது.
மனதிற்குள் இந்த வரனாவது அமைய
வேண்டுமே என்ற பரிதவிப்பு முகத்தில்
அப்பிக் கிடந்தது.
ஒரு மாதிரி ஒரு படபடப்பாகவே இருந்தது.
என்ன செய்ய வேண்டும்
என்பதைக் கூட மறந்தவராக
ஒன்று கடக்க ஒன்றை செய்து
கொண்டிருந்தார்.
இருக்காதா பின்னே...இதுவரை பத்துக்கும்
மேல் மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்துவிட்டு
சென்றுவிட்டனர்.
போய் தகவல் சொல்லி அனுப்புகிறேன் என்று
போனவர்கள்தான்.
இன்றைக்கு வரும் தகவல்...நாளை வரும்
அப்படியே... நாட்கள் கடந்தது
போனதுதான் மிச்சம்.
தரகரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது
அனைவரும் பெண் மாநிறம்....அதனால்
பிறகு பார்க்கலாம் என்று இழுக்கிறார்கள்
என்று ஒருமாதிரியாக முனங்கிக்
கொண்டு போனார்.
இந்த முறை செல்வியின் அப்பா
பாக்கியநாதன் தரகரிடம் கறாராக
சொல்லிவிட்டார்.
"என் பொண்ணு மாநிறம்தான். பிடிச்சா வர
சொல்லுங்க...இல்லையா...முதலாவதே
சொல்லிடச் சொல்லிருங்க "என்றார்.
வந்து வந்து பார்த்துபுட்டு வேண்டாம் என்று
சொன்னால் மகள் மனது என்ன
பாடுபடும் என்று நினைத்து
ஒரு அப்பாவாக அவரால் இப்படித்தான்
பேச முடியும்.
மாப்பிள்ளை வீட்டார் வருவதும்...
மகளை அலங்காரம்பண்ணி நாலுபேர்
மத்தியில் நிறுத்துவதும்...
பின்னர் .. சொல்லி அனுப்புறேன்
என்று சொல்லாமலே போவதும்
பாக்கியநாதனுக்குச் சுத்தமா பிடிக்கல...
இந்த பெண்பார்க்கும் சம்பிரதாயமும் அதனால்
ஒரு பெண்ணின் உணர்வோடு விளையாடும்
விளையாட்டும் பாக்கிய நாதனுக்கு எப்பவுமே
பிடிக்காது.
தனது திருமணத்தின்போதே இந்த
சம்பிரதாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்
பாக்கியநாதன்.
தன் அம்மாவிடம் ஒரு பெண் மட்டும் தான்
பார்ப்பேன். அவளையே திருமணம் செய்வேன்
என்று பிடிவாதமாகச் சொல்லி பங்கஜத்தம்மாவைத்
திருமணம் முடித்தார்.
இப்போது அந்த மாதிரி எதுவும் பேச முடியாத
சூழ்நிலை. பாக்கியநாதன் சாதாரண விவசாயி.
பெரிதாக எதுவும் சேர்த்து வைக்க முடியவில்லை.
பாக்கியநாதனைப்போல வரதட்சணை
வேண்டாம் என்று சொல்லுகிற
முற்போக்குச் சிந்தனை உள்ள மாப்பிள்ளை
கிடைக்க வேண்டுமே...
இப்போதெல்லாம்
அழகும் பணமும் இல்லை என்றால்
கலியாணச் சந்தையில்
எளிதில் வியாபாரம் நடக்காது என்ற
கள எதார்த்ததை புரிந்து வைக்காமல்
போனதுதான் இத்தனை சிக்கல்களுக்கும்
காரணமாக அமைந்துவிட்டது.
வருகிற வரன் எல்லாம் ஏதோ ஒரு வியாபார
கணக்குப் போட்டு வருவது
போலவே தெரிந்தது.
ஆரம்பத்தில் பாக்கியநாதனும்
கொஞ்சம் முறுக்கிக் கொண்டுதான்
நின்றார்.
வரதட்சணை கூடுதலாக கேட்கும்போது
"கலியாணம் என்ற பெயரில் வியாபாரம்
பண்ணுராங்களா? "என்று எதிர்த்துக்
கேட்டுப் பார்த்தார்.
இந்த வரதட்சணை கொடுமையை
அடியோடு அழிக்கணும் என்று
சொல்லிக் கொண்டே இருப்பார்.
இது இயலாதவர்களின் கூக்குரல்.
எளியவன் சொல் அம்பலம் ஏறுமா என்ன...
இவர் ஒருவர் குரல் கொடுப்பதால் நாடு
திருந்திவிடப்போகிறதா...என்ன?
பிள்ளைகளுக்கு நகைபோட வக்கு இல்ல
வரதட்சணையைப் பற்றிப் பெருசா
பேச வந்துட்டாரு....ஏளனமாக பேச ஆரம்பித்தனர்.
ஆளாளுக்கு இப்படி ஒதுங்கிப் போனா...
யார்தான் இதுக்கு எதிரா பேசுறது.
ஒரு கட்டத்தில் ஊரு போகிற போக்கில்
போக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குத்
தள்ளப்பட்டுவிட்டார்.
நாளாக ஆக கொஞ்சம் கொஞ்சமாமாக
எல்லா முறுக்கலும் தளர்ந்து போச்சு.
அவர்கள் வியாபாரிகள் என்பதற்காக
நாமும் எத்தனை நாளுக்குத்தான்
ஒதுங்கி இருப்பது....நாமும் கூட குறைய
பேசி வியாபாரம் பண்ணிட வேண்டியதுதான்
என்ற நினைப்பு மெதுவாக வந்து
எட்டிப் பார்த்தது.
கலியாணம் ஒரு வியாபாரம் என்ற
நினைப்பு வந்ததும் அவமானம்
நெஞ்சைப் பிடுங்கித் தின்னுவதுபோல
இருந்தது.சே...என்ன மனிதர்கள் இவர்கள் !
எதில்தான் வியாபாரம் நடத்துவது
என்ற விவஸ்தை இல்லை...
தன்குள்ளேயே சொல்லிச் சொல்லி நொந்து
கொண்டார்.
இன்று அந்த வியாபார பேரம் பேசும்
இடத்திற்கு பாக்கியநாதனும் தள்ளப்பட்டுவிட்டார்
காலம் யாரைத்தான் விட்டு வைத்தது.
வருகிற வரன் எல்லாம் இப்படியே தட்டிக்
கழித்துவிட்டுப் போனால்....
தனது முற்போக்கு சிந்தனைகளை எல்லாம்
மூட்டை கட்டி வைத்துவிட்டு
மகளை நினைத்து கவலைப்பட ஆரம்பித்தார்.
அப்போதுதான் தரகர் புன்னையடியிலிருந்து
ஒரு சம்பந்த வீடு கேட்பதாகக் கூறினார்.
"என் புள்ளையைப் பத்தி எல்லாம்
நல்லா சொல்லிட்டீரா ? "
"எல்லாம் விவரமா சொன்னேன்...
கலரைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை
கலரா சோறு போடுது என்று மாப்பிள்ளையின்
அம்மா பேசுறாங்க....
ஆனால்...."என்று இழுத்தார் தரகர்.
"என்ன ஆனால்...எதுவானாலும்
முதலிலேயே சொல்லிபுடும்.
பிறகு பெண் பார்க்க வந்த இடத்துல அது
கூட ...இது குறைய ...என்று பேசப்பிடாது..."
பழைய நாட்டாமை என்ற மிடுக்கு
இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது
பேச்சில் எட்டிப் பார்த்தது.
"கொஞ்சம் நகை அதிகமாக எதிர்பார்ப்பது போல்
தெரிகிறது." இழுத்தார் தரகர்.
"சரி வரச் சொல்லும் பார்ப்போம்..என்ன
கேட்டுவிடப் போகிறார்கள் ...."
வியாரத்திற்குத் தயாராகிவிட்டார் பாக்கியநாதன்.
கடனைவுடனை
வாங்கியாவது இந்த வரனை முடித்துவிட
வேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தார்.
ஆனால் எவ்வளவு கூட கேட்பார்களோ? என்ற
பயமும் ....பணத்துக்கு எங்கே போகமுடியும்?
என்ற கலக்கமும் வயிற்றைப்
பிசையாமலில்லை.
கையில் பணம் புரளும்போதெல்லாம்
கூடுதலாக நாலு ஏக்கர் நிலத்தை வாங்கிப்
போட்டவருக்கு பெண் பிள்ளைகள்
இருக்கிறதே....கொஞ்சம் தங்கம் வாங்கி
வைக்கணுமே என்ற நினைப்பு வரல.
தங்கம் விலை இப்படி மலையில்
ஏறி நின்று கொள்ளும் என்று இந்த
இடைத்தட்டு மக்கள் நினைத்துகூட
பார்க்கவில்லை.
மழைதான் வஞ்சித்துவிட்டது என்றால்...
தங்கம்கூட ஏழைகளை ஏளனமாக
பார்க்க ஆரம்பித்துவிட்டது.
பங்கஜத்தம்மா பொட்டபிள்ளைகள் இருக்கு....
கொஞ்சம் தங்கம் வாங்கி வையுங்க...
தங்கம் வாங்கி வையுங்க என்று
தலையில் அடித்துக் கொண்டதுதான்
மிச்சம்.
இந்தப் பாழாய்ப் போன மனுஷன்
பொண்டாட்டி சொல்லை கேட்கவே இல்லை.
பாக்கியநாதன் பிள்ளைகள் வளர்ந்த
பின்னர் பார்த்துக்கலாம் என்று
சொல்லிச் சொல்லி இந்த நிலைமையில்
கொண்டுவந்து விட்டுவிட்டார்.
கடவுள் கண்முழிச்சி பார்த்தா ஒரு
வருச விளைச்சலுல ஒரு பிள்ளையைக்
கடத்திடலாம் என்றுதான் நினைத்தார்.
ஆனால் கடவுள் தான் கண்முழித்துப்
பார்க்கல..
மழையை கைக்குள்ளேயே பிடித்து
வைத்துவிட்டு கண்ணாமூச்சி
விளையாட்டு காட்டிவிட்டார்.
கடவுளின் விளையாட்டுக்கு சாதாரண
விவசாயி குடும்பங்கள்தான் முதற்பலி என்பது
தெரியாததா என்ன...
மழை இல்லை என்பதற்காக குமரைக் கடத்தாம
இருந்திட முடியுமா என்ன ...
மழை நின்று போனால்
வயிற்றையும் தாண்டி வேறு
என்னென்ன எல்லாம்
முடங்கிப்போகும் என்பது உழவனுக்கு
மட்டும்தான் தெரியும்.
மழை பொய்த்துவிட்டால் ....
விவசாயி பிள்ளைகள் படிப்பு,
திருமணம் என்று எல்லாமே
கேள்விக்குறியாகிவிடும்.
போட்டது போதும் என்று திருமணம்
செய்யும் காலம் எல்லாம் மலையேறி
போய்விட்டது என்பது இப்போதுதான்
பாக்கியநாதனுக்குப் புரிய ஆரம்பித்தது.
ஒன்று மட்டும் நிச்சயம்....
நகை நட்டு சேர்த்து வைக்கல என்றாலும்
வீட்டுக்கு அடக்கமான பெண்ணாக
வளர்த்து வைத்திருந்தார்.
யாருக்கு வேண்டும் அடக்கமான பெண் ?
என்று கேட்கும் காலம் ஆயிற்று. இப்படி
மனசு முழுவதும் ஒரு குழப்பமான
எண்ணவோட்டம் வந்து சிதறடித்துக் கொண்டிருந்தது.
மறுநாள்....
மாப்பிள்ளை வீட்டார் வாசலில் ஆட்டோவில்
வந்து இறங்கிவிட்டனர்.
வாசல்வரை சென்று வரவேற்ற
பாக்கியநாதன் அப்பா, அம்மா, பையன்
மூவருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்று
வீட்டுக்குள் அழைத்து வந்தார்.
வந்ததும் வராததுமாக பையனின்
அம்மா கண்கள் வீட்டை நோட்டமிட்டுக்
கொண்டே இருந்தன.
பெண்ணைத்தான் தேடுகிறாரோ என்று
நினைத்த பாக்கியநாதன்....
இப்போ வந்துருவா...என்றபடி
"பங்கஜம் "என்று ஓங்கி ஒரு
குரல் கொடுத்து வைத்தார்.
"அப்போ பையன்..."என்று மெதுவாக
பேச்சைத் தொடங்கினார் பாக்கியநாதன்.
"தரகர் எதுவும் சொல்லலியா...."
மடக்கினார் மாப்பிள்ளையின் அம்மா.
"சொன்னாரு...சொன்னாரு..."
அதற்குள் பங்கஜத்தம்மாவின் தலை
வெளியே வந்து தொங்கியது...
"என்ன ஏது ...."என்று கேட்க உள்ளே சென்றார்
பாக்கியநாதன்.
"உங்க பொண்ணு என்ன சொல்லுறான்னு
நீங்களே கேளுங்க "கையைப் பிடித்து
பெண்ணின் முன்னால் விட்டுவிட்டு
தனக்கும் இதுக்கும் பாத்தியம் இல்லை
என்பதுபோல சன்னலோரம் போய் நின்று
கொண்டார் பங்கஜத்தம்மா.
பாக்கியநாதன் மகளின் முகத்தைப்
பார்த்தார்.
கண்களிலிருந்து கண்ணீர் வடிய
பரிதாபமாக அப்பாவையே பார்த்தார் செல்வி.
பதறிப் போன பாக்கியநாதன்," என்னம்மா...
என்னாயிற்று "என்றபடியே அருகில் சென்றார்.
அதற்குள் ஓடி வந்து அ..ப்...பா என்றபடி
அப்பா தோளில் சாய்ந்து கேவி...கேவி
அழுதாள் செல்வி.
"என்கிட்ட சொன்னதை உங்க அப்பாகிட்ட
சொல்லு...."உலுக்கினார் அம்மா.
"என்ன சொல்லுறா...நீயாவது சொல்லித்
தொலையேன்....."எரிந்து விழுந்தார்
பாக்கியநாதன்.
"இந்த கோபத்துக்கு
மட்டும் குறைச்சலில்ல...."நேரம் பார்த்துத்
தாக்கினார் பங்கஜத்தம்மா.
"அப்பா...."மெதுவாக அழைத்தாள் மகள் செல்வி.
"என்னது என்றாலும் வெளிப்படையாக
சொல்லிரு....அப்பா ஒண்ணும்சொல்ல மாட்டேன்."
"எனக்கு இந்த கலியாணம் வேண்டாம்பா"
"ஏன்..மாப்பிள்ளையைப் பிடிக்கலையா....
பார்க்கவே இல்லை...
அதற்குள் இப்படி சொன்னால் எப்படி?"
"வேண்டாம்பா...பீளீஸ் என்னைப்
விட்டுடுங்க..."கெஞ்சினாள் செல்வி.
இந்த மாப்பிள்ளை வீட்டாரும் தன்னை
ஏதாவது சொல்லிவிடப் போகிறார்களோ
என்ற அச்சம் மகளை எப்படி எல்லாம் கசக்கிப்
போட்டிருக்கிறது என்பது
பாக்கியநாதனுக்குப் புரிந்து போயிற்று.
"ஒன்றுமில்லம்மா....ஒன்றுமில்ல...
அழாத...அப்பா எல்லாத்தையும்
பார்த்துகிறேன்... எல்லாம் நல்லபடியா
நடக்கும்"
மகளை சமாதானப்படுத்தினார்.
ஆனால் மனம் மகளை நினைத்து
உள்ளுக்குள் அழுதது.
இந்தப் பாழாய்ப் போன சம்பிரதாயம்
எத்தனை பெண்கள் மனசைப் போட்டு
வாட்டி வதைக்கிறது.
இதற்கு துணை நிற்பது ஒரு பெண்ணாக
இருப்பதுதான் இங்கே வெட்கக்கேடு.
சற்று மௌனமாக நின்றவர்,
"பங்கஜம் செல்வியை கூட்டிட்டு வா..."
என்றபடி அங்கிருந்து வெளியே வந்தார்.
கூடத்திற்கு வந்தவரிடம் "என்ன...பெண்
இன்னும் தயாராகவில்லையா...."நேரடியாகவே
கேட்டுவிட்டார் பையனின் அம்மா.
"இல்ல...தாயாராகிட்டா...இப்போ வந்துடுவாங்க"
போலியான சிரிப்பை வரவழைத்தபடி பேசினார்.
அதற்குள் மகளைக் கூட்டிக் கொண்டு
பங்கஜத்தம்மாளும் வந்து நின்றார்.
"பெரியவங்களை கும்பிட்டுக்கம்மா..."என்றார் அப்பா.
யாரு பெரியவர்...யாரு சின்னவர்
என்றே முகத்தைப் பார்க்காமல் அனைவருக்கும்
கும்பிடு போட்டுவிட்டு விருட்டென்று
உள்ளே சென்றுவிட்டாள் செல்வி.
மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும்
என்ற நினைப்பு கொஞ்சம்கூட எழவில்லை.
எத்தனை மாப்பிள்ளையைத்தான் பார்த்துவிட்டு
இவர்தான் தனக்கு வரப்போகிற மாப்பிள்ளை
என்று கனவு காண்பது ?
இப்போது கலியாணக்கனவு என்பது
செல்வியின் மனதிலிருந்து முற்றிலும்
காணாமல் போயிற்று.
பெண் விருட்டென்று வீட்டுக்குள் சென்றதும்,
"ரொம்ப வெட்கப் படுகிற டைப்பா இருக்கிறா..."
சிரித்து சமாளித்தார் தரகர்
இப்போது பையனின் அம்மா..
"பொண்ணு கொஞ்சம் மாநிறம்தான் தெரியுது.".என்று
பேச்சைத் தொடங்கினார்.
"அதுதான் தரகரிடம் நான் முதலாவதே
சொல்லியிருந்தேனே "என்றவர்
"சொல்லலியா ..".என்பதுபோல தரகரைப்
பார்த்தார் பாக்கியநாதன்.
"சொல்லி இருந்தார் ...சொல்லி இருந்தார் " முதன்
முறையாக வாயைத் திறந்தார் பையனின்
அப்பா .
"தம்பி நீ என்ன சொல்லுறா? "என்று
பையனிடமும் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார்.
அம்மாவைப் பார்த்த பையன்
மெதுவாக புன்னகைத்தபடி,
"அம்மா சொல்லுவாங்க" என்று
தான் அம்மாப் பிள்ளை என்பதை
சபையில் பதிவு செய்துவிட்டு
அடக்கமாக அமர்ந்து கொண்டான்.
தேர்வு செய்ய வேண்டிய முழு உரிமையும்
அம்மாவுக்குத்தான் என்பதைப்
பிரகடனப் படுத்தியாயிற்று...
இனி மிச்சம் மீதி பேச வேண்டியதை அம்மா
பார்த்துக் கொள்வார் என்பதுபோல இரு
ஆண்களும் தங்களுக்கும் இதற்கும்
சம்பந்தமே இல்லாதது போல
மௌனமாக இருந்தனர்.
"பொண்ணை நன்றாக வளர்த்திருக்கீங்க
என்று கேள்விப்பட்டேன்..."மறுபடி நல்லமுறையில்
பேச்சைத் திருப்பினார் பையனின் அம்மா.
"ஆமாங்க....அதுமட்டுமல்ல வீட்டு
வேலை எல்லாம் நன்றாக செய்வா..."
வீட்டு வேலை செய்வது பெண்களுக்கு
கூடுதல் தகுதி என்பது
போல தரகர் பரிந்துரை வழங்கினார்.
"ஆனால்...ஒன்று" இழுவையைப்போட்டு
பேச்சை இழுத்து நிறுத்தினார் அம்மா.
"அம்மா ...வேறு என்ன என்றாலும் நேருக்குநேர்
தயங்காமல் பேசி முடிச்சுடுங்க " என்று
பையனின் அம்மாவுக்கு பேச வாய்பளிப்பதுபோல
பேசினார் தரகர்.
"வேறு ஒண்ணுமில்ல..பேசி முடிச்சுபுடலாமே
என்கிறேன் "
அந்த வார்த்தையைக் கேட்டதும் பாக்கியநாதன்
மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.
"எவ்வளவு தருவீங்க...என்பதைச்
சொல்லுங்க." என்று நேரடியாக வியாபாரத்தைத்
தொடங்கினார் அம்மா.
"தரகர் சொல்லியிருப்பாரே... "
"தரகர் சொன்னது இருக்கட்டும்....நீங்க
சொல்லுங்க "
"ஒரு இருபது பவுனு நகையும் கையில ஒரு
இரண்டு லட்சமும் தான் எங்களால இப்போது
கொடுக்க முடியும் "
"எங்க பிள்ளைக்கா கேட்கிறோம்.
உங்க பிள்ளைக்குத்தான கொடுக்குறீங்க...
ஒரு நாற்பது பவுனா போட்டுக் கொடுங்க..."
கூடுதலாக இருபது கேட்டால்தான் ஒரு முப்பதாவது
தேரும் என்று ஒரு கணக்கு போட்டு வைத்துப்
பேசினார் பையனின் அம்மா.
" நாற்பது எல்லாம் ரொம்ப அதிகம்ங்க....
என் பிள்ளைக்குதான் கொடுக்குறேன்....
அதில் மாற்றுக் கருத்து இல்ல..
ஆனால் இப்போ மழை தண்ணி இல்லாமல்
வருமானம் கையில் இல்ல.....அதனால்தான்...."
தனது இயலாமையைச் சொல்லிக் கையைப்
பிசைந்து கொண்டு நின்றார் பாக்கியநாதன்.
"என்ன தரகரே...இப்படி சொல்றாக..."
தரகரை பேச்சு வார்த்தைக்கு இழுத்தார்
பையனின் அம்மா.
"நல்ல இடம்...பாத்துபாராம கொஞ்சம்
கூட்டிக் கொடுங்க "
தரகர் பையன் தரப்புக்காக பரிந்துரைக் கடிதம்
வழங்குவதுபோல பேசினார்.
"கொடுக்குறது பெருசு இல்ல...அடுத்தாலேயும்
ரெண்டு பிள்ளைகள் இருக்கு....அதுதான்
கொஞ்சம் யோசனையா இருக்கு..."
தலையைச் சொறிந்தார் செல்வியின் அப்பா.
"பையன் வந்த நேரம் உங்க அடுத்த புள்ளைகளுக்கும்
சட்டுபுட்டுன்னு வரன் அமைஞ்சுரும்...
கவலைப்படாதீங்க...நான் கொண்டு வந்து
நிப்பாட்டுறேன் ...".பாக்கியநாதனுக்கு
ஆறுதலாகப் பேசுவதுபோல பேசி
பாக்கியநாதனை சம்மதிக்க வைக்க முயற்சி
செய்தார் தரகர்.
"என்னங்க...இங்க கொஞ்சம் வந்துட்டுப் போங்க."
உள்ளே இருந்து மறுபடியும்
அழைப்பு விடுத்தார் பங்கஜத்தம்மா.
"இப்போ வர்றேன் என்றபடி உள்ளே
சென்ற பாக்கியநாதனிடம்,
"சரின்னு சொல்லுங்க...பைசா கணக்கு
பார்த்தா ஒண்ணும் நடக்காது..."
அவசரப்படுத்தினார் பங்கஜத்தம்மா.
"நாளபின்ன அடுத்த பிள்ளைகளுக்கும்
இதுமாதிரி
செய்ய முடியுமா என்பதுதான் கொஞ்சம்
யோசனையா இருக்கு."
"நாளைக்கு வருகிறத நாளைக்குப் பார்த்துக்கலாம்..
இப்போ மூத்தவளுக்கு
முடிப்பதைப் பாருங்க..."
"எத்தனை பவுனு சொல்லட்டும்..? "
"ஒரு பத்து பவுனை குறைச்சி
முப்பது பவுனுல
முடிக்க பாருங்க "
"அந்த அம்மாதான் ஒரேயடியா
மேல ஏறிலா நிற்காவ.. "
"அவிய ஆம்புள புள்ளையைப் பெத்தவுக...
கொஞ்சம் ஏறிதான் பேசுவாவ...
நம்மதான் அப்படி இப்படியுமா பேசி
கொஞ்சம் இறக்கிக் கொண்டு வரணும்"
"நீ சொல்லுவது சரிதான்...
நம்மளால இயலணும் இல்லையா...
உன்னை மாதிரி எனக்குப் பேசவும்
வராது. நீ வாயேன்...வந்துப் பேசு..."
பர்வதத்தம்மாவை கையோடு இழுத்து வர
முயற்சி செய்தார்.
நீங்க இருக்கும்போது நான் எதுக்கு?
தலை இருக்கும்போது வாலு ஆடபிடாது...
நீங்களே பேசுங்க..."
"சரிம்மா...சரி...சொல்லிப் பார்க்கிறேன்.
ஒத்துக்கிட்டா சரி "
என்றபடி திரும்பி வந்தார்.
"அம்மா என்ன சொல்றாக..."என்றார் தரகர்.
"ஒரு முப்பது வச்சிக்கோங்க....
நாற்பது அதிகம்....."
என்றபடி பையனின் அம்மா முகத்தைப் பார்த்தார்
பாக்கியநாதன்.
"சரி...நீங்க அதுலேதான் நிற்குறீங்க...
அது உங்க பொண்ணுக்கு கொடுப்பது...
உங்க இஷ்டம் .அதுல நான் தலையிடல....."
"அப்போ என்ன... அம்மா சம்மதிச்சுட்டாங்க...
நிச்சயார்த்தத்தை எப்போ வச்சுக்கலாம்
என்று பேசுங்க " எப்படியாவது முடித்துக் கொடுத்து
தரகு பணத்தை வாங்கிவிட வேண்டும்
என்பதில் குறியாக இருப்பது தரகரின்
பேச்சில் தெரிந்தது.
"இருங்க...இன்னும் பேசி முடிக்கல...
அதற்குள்ள அவசரப்பட்டா எப்படி?
பையனுக்கு ஒரு ஐந்து பவுனுல
ஒரு மைனர் செயின் போட வேண்டாமா?"
அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்
அந்த அம்மா.
"ஐந்து பவுனா...."அதிர்ந்து போனார்
பாக்கியநாதன்.
முப்பத்து பவுனே கைமீறிய பணம்தான்...
இதில் இன்னும் ஐந்து பவுனுக்கு எங்கே
போவது...?மௌனமாக நின்றார் பாக்கியநாதன்.
" என்ன யோசிக்கிறீங்க....
உங்க பொண்ணு மாநிறம்தான்....
இருந்தாலும் உங்க குடும்பத்துல
சம்பந்தம் வைக்கணும் என்ற
ஆசை எனக்கு இருக்கு "
கடைக்காரர் கிராக்கி பிடிப்பது போல
ஆசை வார்த்தை பேசி மடக்கிப் பிடிக்க
முயன்றார் பையனின் அம்மா.
"பங்கஜத்தம்மா ஒத்துக்கோங்க ...ஒத்துக்கோங்க"
என்பதுபோல வீட்டுக்குள் நின்று
கை காட்டினார்.
பாவம் பாக்கியநாதன்...
எது கேட்டாலும் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.
சரி என்பது போல தலையை ஆட்டினார்.
"பாக்கி சீர் செனத்தி எல்லாம் தரகர்
சொல்லி இருப்பார்....அதுல ஒரு மாற்றம்
வாசிங் மெஷின் வேண்டாம்...அது
எங்க வீட்டுல இருக்கு...ஒரு ஏசி வாங்கி
கொடுத்துடுங்க....உங்க பொண்ணுக்கு
எங்க ஊரு சூடு ஒத்துக்குமோ என்னவோ!"
என்று பட்ஜெட்டை ஏத்தினார் அந்த அம்மா.
"இவ்வளவுதானா இன்னும் உண்டா"
என்பதுபோல பாக்கியநாதன் மாப்பிள்ளையின்
அம்மாவையே பார்த்தார்.
"அப்போ ஒரு நல்லநாள் பார்த்து
திருமணத்தை வைத்துக் கொள்ளலாமா...."
இப்போது துணிந்து பேசத் தொடங்கினார்
பையனின் அப்பா.
அவர் பேச்சிலிருந்து இவ்வளவுதான்
என்பதைப் புரிந்து கொண்டார் பாக்கியநாதன்.
மெதுவாக பையனைப் பார்த்துப்
புன்னகைத்தார் அம்மா.
நல்ல வியாபாரம் பண்ணிட்டாம்மா...
என்பது போல பதிலுக்குப் புன்னகையால்
பாராட்டு தெரிவித்தார் மாப்பிள்ளை.
புனிதமான திருமண பந்தத்தை வியாபார நோக்குடன் மாற்றி வேடிக்கை பார்க்கும் தரகர்கள் இருக்கும் வரை பெண்ணும் பெண்ணைப்பெற்ற பெற்றோரும் வேதனை அடையத்தான் வேண்டும்.எனினும் காலத்தின் மாற்றத்தால் இந்த அவல நிலை மாறிக்கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன்.அருமையான பதிவு.
ReplyDelete