படிக்கத் தவறிய பாடம்

    படிக்கத் தவறிய பாடம்ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு
விதமான பாடத்தைக் கற்பித்துச்
சென்று கொண்டிருக்கிறது.
நல்லதோ கெட்டதோ நாளும் நம்
கண்முன் காட்சிகள் அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன.

நல்லவைவற்றைக் காணும்போது
கண்களை அகல விரித்து மகிழ்ச்சியை 
வெளிப்படுத்துகிறோம்.
தீயவற்றைக் காணும்போது முகம்
அப்படியே சுருங்கிப் போகிறது.
சோர்ந்து போய்விடுகிறோம்.

அனைவரின் மனநிலையும்
இப்படித்தான் இருக்கும்.
கும்மாளமும் குழப்பமும்
இல்லாமல் யாரும் நாட்களை
கடத்தி வந்திருக்க முடியாது.

விடியலில் இருந்து நடந்தவற்றை
மீள்பார்வை செய்து பார்ப்போமானால்
இந்த உண்மை புரியும்.
இந்த நாள் நமக்கு நடத்திச்
சென்ற பாடம் என்ன ?
கடந்து வந்த நாட்களில்
நாம் கற்றுக் கொண்டது என்ன ?

பாடம் என்ன என்று தெரியும்.
பாடத்தின் மூலமாக சொல்லப்பட்ட
கருத்து பல நேரங்களில் விளங்காது.
விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற 
ஆர்வமும் இருக்காது.
மனப்பக்குவமும் போதாது.
எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள
ஆசிரியரிடம் செல்லவும் முடியாது.

நாமாக விளங்கிக் கொள்ள முயற்சி 
மேற்கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்தவற்றை மீள்பார்வை செய்து
பார்க்கும்போது பல உண்மைகள்
தெரிய வரும்.
பாடம் என்ன என்பது புரிந்து
விட்டது.


ஆனால் பாடத்தைப் புரிந்து கொண்டால்
மட்டும் போதுமா?
அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டது
என்ன?

நாட்காட்டியில் நாட்கள் கிழித்து எறியப்படுகிறது
போல நாட்களைக் கிழித்து 
எறிந்துவிட்டு சென்று  கொண்டே
இருக்கின்றோமா?

அந்தந்த நாள் சொல்லித் தந்தப்
பாடத்தை மனதில் ஏற்றி
வைத்திருக்கிறோமா ?

ஒரு நாள் என்பது 24 மணி நேரம்
கொண்டது. 
24 மணி நேரத்தில் 1440 நிமிடங்கள்.
1440 நிமிடங்கள் என்றால் 86400 வினாடிகள்.

ஒருநாளை வீணடிப்போமானால்
86400 வீனாடிகளை மொத்தமாக
வீணடித்தவர்களாகிவிடுவோம்.
வீணடித்துவிட்டோமே!

அப்படியே தாளை கசக்கி வீசிவிட்டு
கடந்து போவதுபோல கடந்து
போய்க் கொண்டே இருப்போமானால்....
நாளாக ஆக நலிந்து போகும்
நாட்காட்டியைப் போல நலிந்து...மெலிந்து
இறுதியில் காணாமல் போய்விடுவோம்.


நாளை என்பது நிச்சயம் இல்லை.
இன்று மட்டுமே நிச்சயம் . இதைத்தான்
கொரோனா  சொல்லித் தருகிறது.
நிச்சயமாக நமக்குக் கொடுக்கப்பட்ட
இந்த நாளில் எப்படி வாழ வேண்டும் என்பதைக்
கற்றுக்கொடுக்க  வந்ததுதானே இந்த
கொரோனா.

நாட்காட்டியில் ஒவ்வொரு நாள் 
கிழிக்கப்படும்போதும்
வாழ்வின் ஒரு நாள் குறைக்கப்பட்டுள்ளது
 என்பதைநாட்காட்டி நமக்குச் 
 சொல்லித் தருகிறது.

நேற்றையநாள் பயனில்லாமலேயே 
கசக்கி வீசப்பட்டதா....?
நேற்றைய நாளின் அனுபவங்கள்
மழுங்கடிக்கப்பட்டு காணாமலேயே போயிற்றா ?

நம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கும்
 பயன்படாமல் கழிந்து போகப் போகிறதா?

கழிந்து போக வைப்பதும்
களிப்போடு கடந்து போவதும் நம்
கையில் உள்ளது.

நேற்றைய நிகழ்விலிருந்து பாடம்
கற்றுக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்.
கற்றுக் கொண்டோமா ?

கொரோனா என்ற ஒற்றைச் சொல்
நமக்குக் கற்றுத் தந்த பாடங்கள் 
எத்தனை !எத்தனை!

 மறந்து போய்விட்டோமா?

ஊரடங்கு...ஊரடங்கு என்றதும் ஒப்பாரி
வைக்கிறோம்.

ஊரடங்கிலிருந்து நாம் கற்றுக் 
கொண்டதுதான்
என்ன ?

மறுபடியும் ஊரடங்கு என்னும்போது
முதலாவது ஊரடங்கிலிருந்து நாம்
ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லையோ
என்ற ஐயம் ஏற்படுகிறதே !

இதற்கு யார் பொறுப்பு ?

இவர் அவரைக் குற்றம் சொல்வதும்...
அவர் இவரைக் குற்றம் சொல்வதும்...
வாடிக்கையாகிவிட்டது.

நாம் நம்மைப் பார்க்கும் காலம்
எப்போது வரப் போகிறது?

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல
தனிமனிதனாய்ப் பார்த்து கொரோனா
விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால்
எந்த ஊரடங்கும் பயன் தராது.

".....நல்லா ரொருவர் உளரேல் அவர் பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை."
என்பார் மூதுரையில் ஔவை.

"பொல்லார் இருவர் உளரேல் போகாது
 கொரோனா உலகை  விட்டு "
என்ற நிலைக்குக் கொண்டு வந்து
 நிறுத்தி விட்டோம்.

இத்தனை கோடி மக்கள் வாழும்
மாநிலத்தில் அரசு ஆளாளாளுக்கு
அறிவுரைகள் சொல்லி அருகிருந்து
கண்காணிக்க முடியுமா?

நாம்தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

பட்டும் திருந்தவில்லை என்றால் வேறு
என்ன சொல்வது?

ஒரு சில மக்கள் செய்யும் அத்துமீறல்களால்
ஒட்டு மொத்த பாமர மக்களும் பட்டினியால்
சாக வேண்டுமா ? 
இந்தமுறை இதுதான் நடக்கப்போகிறது.
யாரும் யாருக்கும் உதவப் போவதில்லை.

நாளை நம் நிலைமை என்ன  ஆகுமோ என்ற
அச்சத்திலேயே பெரும்பாலான மக்களின்
நிலைமை ஓடிக் கொண்டிருக்கிறது.   

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர்
உடமையடா.. ஆறிலும் சாவு
நூறிலும் சாவு 
என்று எதற்கும் துணிந்துவிட்டோம்.

அச்சம் கூடாதுதான்.
அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்ச வேண்டும்.

ஊரடங்கு என்று ஒற்றைச் சொல்லைச்
கூடவே கூட்டி வந்து 
நம்மை ஒட்டுமொத்தமாக அடக்கம் பண்ண
பார்க்கிறது கொரோனா.

அதற்கு மறுபடியும் வழிவிட்டது யார் ?
ஒட்டு மொத்தமாக...கூட்டம் கூட்டமாக..
கொண்டாட்டமும் கும்மாளமுமாக..
கொரோனா வழிகாட்டுதலை மறந்து...
சுற்றித் திரிந்ததால் ....வந்தது
கொரோனா.மறுபடியும் வாசலை
அடையுங்கள் என்கிறது அரசு.

வீட்டுக்குள்ளேயே முடங்கி இருங்கள் என்று
கூறிவிட்டு  திறந்துவிட்ட மறுமாதமே 
இருபதாயிரம் ...மும்பதாயிரம் என்று
மின்சார கட்டணம் கேட்டார்களே 
இதற்கு என்ன செய்வது ?
இந்த பயம் என்றாவது மனதிற்குள் 
வந்ததா ?

கடந்தமுறை மின்சார கட்டணம்
கட்ட முடியாமல்  பட்டபாடு போதாதா ?

எத்தனை பேர் மின்சாரக் கட்டணம்
கட்ட கடன் வாங்கியிருப்பீர்கள்.

இன்றுவரை அந்தக் கடனிலிருந்து
மீள முடியவில்லையே?

மறுபடியும் ஊரடங்கு என்றால்
இவை எல்லாம் 
பெரிய பிரச்சனையாக வந்து
நிற்காதா?


கொரானா காலத்தில் ரேசன் அரிசியைக் 
கொடுத்தது அரசு .
அதைப் பொங்கி தின்ன சிலிண்டர் வாங்க
பணம் இல்லாமல் திண்டாடியவர்கள்
எத்தனை பேர்.? 

இரவல் சிலிண்டர் கிடைக்குமா என்று
வீடுவீடாக கேட்டும் கிடைக்காமல் 
எங்கே போவது என்று
வழியும் தெரியாமல் விழித்தவர்கள் 
எத்தனைபேர் ?

உப்பு வத்தல் மல்லிவாங்க 
பணத்துக்கு எங்கே போவது...
என்று வெறுங்கஞ்சியைக் குடித்துவிட்டு
உயிரைப் பிடித்து வைத்திருந்தவர்கள்
எத்தனை எத்தனை பேர் ? 

எந்தத் தன்னார்வ அமைப்பாவது சோற்றுப்
பொட்டலம் தரமாட்டார்களா என கதவில்லா
வாசலோரம் காத்துக் கிடந்தோர் எத்தனை
எத்தனை பேர்?

முழு நேரமும் போர்வைக்குள் மூடி முகம்
மறைத்து....போகாத பொழுதைப் போக்கடித்தது
 முழுநேரமும் தூங்கிக் கழித்தவர்கள்
 எத்தனை எத்தனை பேர் ? 

இருபத்து மணி நேரமும் கீரியும் பாம்புமாக
சீரியும் ...பதுங்கியும் ஒற்றை அறைக்குள்ளே
குடும்பம் நடத்தியவர்கள்
எத்தனை எத்தனை பேர் ?

அப்பப்பா...காலத்துக்கும் போதுமடா சாமி..
என்று புலம்பியவை எல்லாம் மறந்து
போய் விட்டதா ? 

இல்லை.. அப்படி என்ன இந்த கொரோனா
செய்துவிடப் போகிறது என்ற அலட்சியமா ? 
கொரோனா ஒன்றும் செய்து விடப் போவதில்லை.

ஊரடங்கு நம்மை கொல்லாமல் கொல்லுமே...
அதற்காகவாவது பத்திரமாக 
இருந்திருக்கலாமல்லவா!

ஒவ்வொரு நாளும் என்னென்ன பாடம்
எல்லாமோ படித்தோம். ஆனால்
படிக்க வேண்டிய பாடத்தைப் படிக்க
தவறிவிட்டோம்.

இதுதான் அடுத்த ஊரடங்கிற்கு தயாராக
இருங்கள் என்ற அரசின் அறிவிப்பு
சொல்ல வரும் பாடம்.

Comments

Popular Posts