பெண் ஒரு போராளி

     பெண்  ஒரு போராளி


பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள்.
பாதுகாக்கப்பட வேண்டியவள்.
பாராட்டப்படவேண்டியவள்.
சீராட்டப்பட வேண்டியவள்.
பெண் என்றால் தெய்வம்.
பெண் என்பவள் மகாலட்சுமி
என்று எப்படி எப்படியெல்லாமோ
பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதார்த்தத்தில் பெண் என்பவள்
என்னவாக இருக்கிறாள்? 
கள நிலவரம் என்ன ? 

கவிபாட...கற்பனைத் தேர் ஓட்ட
பெண்ணை மிகைப்படுத்திப் பேசிப் பேசி
பெரும்பாலான பெண்களைப்
பேச விடாதபடி பேசா மடந்தைகளாக
முடக்கி வைத்திருக்கிறது
இந்தச் சமூகம்.

ஒவ்வொரு நாளும் அவளுடைய வாழ்க்கை
ஒரு போராட்டமாகவே கழிந்து கொண்டிருக்கிறது.
இதுதான் எதார்த்தம். இதை பெண்கள்
யாரும் மறுத்துவிட முடியாது.
ஆண்களும் எல்லாச் சுதந்திரமும் 
கொடுத்திருக்கிறேன்
என்று மார்தட்டிக் கொள்ளவும்
முடியாது.

காலையில் எழும்பியது முதல்
இரவு படுக்கைக்குச் செல்லும்வரை 
ஒருபெண் கடந்துவர
வேண்டிய போராட்டக் களங்கள்
எத்தனை ?எத்தனை ?


பிறந்து உலகத்திதைப் பார்த்த
மறுநொடியே போராட்டக்காரர்கள்
கூச்சலிட்டுக்  கொடிபிடித்து 
முன் வந்து நிற்கிறனர்.

கள்ளிப்பால் ஊற்றிக் கதையை
முடித்துவிட 
காத்திருக்கிறது ஒரு கூட்டம்.

 நெல் அள்ளி வாயில்
போட்டுக் கொல்ல பரிந்துரை வழங்கி
நிற்கிறது இன்னொரு கூட்டம்.

பெண்குழந்தை குரல் கேட்டதுமே
ஆற்றில் வீசலாமா...குளத்தில் 
வீசலாமா கள்ளிக்காட்டில்
வீசி கடைசி மூச்சுவிட
வைக்கலாமா என்று சதித்திட்டம் தீட்டுகிறது
மற்றொரு கூட்டம்.

நாலாவது பொண்ணு நடைக்கல்லைப்
பெயர்த்துவிடுவாள் என்று பிறப்புமுறை கூறி
பிஞ்சின் வாயில் நஞ்சை உமிழ்ந்து
நரபலி கொடுக்க உருட்டுக் கட்டையொடு நிற்கிறது
இன்னொரு  குருட்டுக் கூட்டம்.

எட்டாவது பெண் எட்டிப்பார்த்த இடமெல்லாம்
வெட்டை என்று குட்டிக் குட்டிக் குப்புறத்
தள்ளி எழும்ப விடாமல்
அமுக்கி வைக்க காத்திருக்கிறது
முடமாகிக் கிடக்கும்
முட்டாள்  கூட்டம்.


இப்படி பெண்ணுக்கு எட்டிப் பார்க்கும் 
இடம் எங்கும் தடையும்
தடைக்கற்களும் ...அப்பப்பப்பா...
எத்தனை எத்தனை
போராட்டங்கள்!
எத்தனை எத்தனை இடையூறுகள்!

அத்தனையும் கடந்து மேலே வருவதற்குள்
 மூச்சே நின்று விடும்.
கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணி
வெடி வைத்துக் காத்திருக்கும்
இந்த வஞ்சகர்களிலிருந்து தப்பி
உலகத்தில் அச்சமில்லாமல் வாழும்
சூழல் பெண்ணுக்கு 
வாய்ப்பது எப்போது??

பீதியோடேயே ஓடி ஒளிந்து,
பம்மிப் பம்பி காலத்தைக்
கடத்துவதுதான் பெரும்பாலான பெண்களின்
வாழ்க்கையாக இருக்கிறது.

பிறக்கும் போது எழும் போராட்டங்களைத்
தாண்டி வந்துவிட்டால்
வளர்ந்து...நடை பயின்று 
வீட்டைவிட்டு வெளியில் சென்றால்....
காமுகர்கள் கண் பட்டுவிடாமல் பத்திரமாக 
வீடுவந்து சேர வேண்டுமே 
என்ற மனப் போராட்டம் .

அதனால் வியர்த்து விறுவிறுத்து
ஒரு பதற்றத்தோடு ஓடும் சூழல்.

இன்னுங் கொஞ்சம் வளர்ந்து
பதின்ம வயது வந்துவிட்டால்...
காதல் என்று ஒன்று வந்து 
கண்கட்டி இழுக்கும்.
எங்கு செல்வது? 
 என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல்
 ஒரு மாயை உலகில் மாட்டிக் கொண்டு
 குழப்பமான சூழ்நிலையிலேயே இருக்க வைக்கும்
அகப்போராட்டம்.

பள்ளிப் பருவம் தாண்டி
கல்லூரிக்குச்
செல்ல விரும்பினால்...
பெண்பிள்ளை பெரிய பெரிய
படிப்பெல்லாம் படித்து என்ன
செய்ய போகிறாள்? என்று
  படிக்கவிடாமல்
 விதிக்கப்படும்
தடைகளை உடைக்கமுடியாமல் 
உள்ளுக்குக்குள்ளே நடக்கும் ஒரு
மனப்போராட்டம்.

அடுத்ததாக திருமண சந்தையில் ஏலத்தில்
விடப்படும்போது...
ஏலம் எடுப்பவர் எப்படிப்பட்டவரோ?
என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ ?
 என்ற திகிலும் கலக்கமுமான
 உளவியல் போராட்டம்.

எல்லாம் தாண்டி திருமணம் முடிந்தால் 
முழுநேரமும் கரண்டியைக் கையில் 
வைத்துக் கொண்டு 
சமையலறையில் நின்று
பொங்கவும் முடியாமல்
அணைக்கவும் முடியாமல்
பொங்கும் உலையென 
வெப்பக் காற்றை வெளியிட்டு
நிற்கும் குமுறல்
போராட்டம்.

இதுவே வாழ்வென்று 
ஏற்றுக் கொண்ட பின்னர்
அடுப்பில் நெருப்போடு 
நித்தம் நித்தம் 
 அக்னியோடு நடத்தும்
அக்னிப் போராட்டம்.

மாமியாரோடு மல்லுகட்ட முடியாமல்
வயிறு நிறைய சாப்பிடவும் முடியாமல்
 அஞ்சி அஞ்சித் 
 தின்னும் தின்னாமலும் 
வயிற்றோடு நடத்தும் 
வயிற்றுப் போராட்டம்...

பணம் இருந்தாலும் போராட்டம்...
பணம் இல்லை என்றாலும் 
பற்றாக்குறையைச்
சமாளிக்க முடியாமல்... நடத்தும்
பொருளாதாரப் போராட்டம்...

வீட்டில் இருக்கும் பெண்களுக்குத்தான் இத்தனை போராட்டங்கள் என்றால்
பணிக்குச் செல்லும் பெண்களாவது
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால்..

அலுவலகத்தில் வேலைபார்க்கும் 
பெண்களுக்கு
முதுவுக்குப் பின்னால்
பேசும் முகமறியா மனிதர்கள் வாயில் விழாமல்
இருக்க போலியாகச் சிரித்து 
சமாளிக்க நடத்தும் 
சாமாளிப்புப் போராட்டம்....

போக்குவரத்து நெரிசலில் இடிபடாமல்
குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து
சேர வேண்டுமே என்ற திகிலோடு ஒவ்வொரு
நிமிடத்தையும் நகர்த்தும்
 திக்..திக்...போராட்டம்...

கணவன்,குழந்தைகள், குடும்பம் என்று 
சதா அவர்களைப்
பற்றியே நினைத்து அவர்களுக்காகவே 
வாழ வேண்டும் என்று நித்தம் நித்தம்
நடத்தும் பாசப்போராட்டம்....

அப்பப்பா...விடிந்ததுமுதல் இரவு வரை 
எத்தனை எத்தனை போராட்டக் களங்களைச்
சந்திக்க வேண்டி இருக்கிறது...?

ஒவ்வொரு பெண்ணும் இந்தப்
போராட்டக் களங்களைச் சந்தித்து
"பேழையுள் இருக்கும் பாம்பென
உயிர்க்கும்" நிலைதான் பெண்களின்
நிலை.

இவர்கள் கடந்து வர வேண்டிய
போராட்டக் களங்களில்
 ஒன்றில் தோற்றுப் போனாலும்
வேறு வகையான முத்திரை குத்தப்பட்டு
முடக்கிப்போட காத்திருக்கும் இந்தச் சமூகம்.

போராட்டத்தில் ஜெயித்தவர்களை 
அங்கொன்றும்
இங்கொன்றுமாக விரல்விட்டு எண்ணி விடலாம்.
மற்றவர்கள் அனைவரும் நித்தம் நித்தம்
ஒரு போராளியாகத்தான் வாழ்க்கை என்னும்
போராட்டக்களத்தில்  போராடிக் 
கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் பெண் 
ஒரு போராளி என்கிறேன்.

போராடி போராடி மரத்துப் 
போனவர்களும் உண்டு.
மன வலிமை பெற்று மேல் 
எழும்பி வந்தவர்களும்
உண்டு.

வலிமை பெற்றவர்களை வாழ்க்கையில்
ஜெயித்தவர்களாக உலகம் கொண்டாடும்.

ஆனால் கடைசிவரை ஒரு போராளியாக இருந்து
குடும்பத்தைக் காப்பவர்கள்தான்
பெரும்பாலான 
போராளிகள்.

இந்தப் போராளிகள் மட்டும் இல்லை என்றால்....
உலகம் என்னவாகி இருக்கும்?

பாசம் போராட்டம் நடத்தும் பெண்கள்
உரிமைக்காகப் போராடுவதில்லை.

உரிமைப் போராட்டம் மட்டும்
நடத்தியிருந்தால் ....
உலகம் என்னவாகியிருக்கும்?
வீடு எப்படி நடந்திருக்கும்?

பெண்ணே !
 நீ 
உனக்கான இடத்தைத்
தக்க வைத்துக்கொள்ள
உன் உரிமைக்காகப்
போராட...
தளை நீக்கி
சிறகை விரித்து
சிறுபுள்ளாய் 
சிறகடித்துப் 
பறந்திடும் நாள்
எந்நாளோ?












Comments

  1. V. V. Nice tr. All the points are true. Keep it up, congrats Selvabai. J. Tr

    ReplyDelete

Post a Comment