ஹோலியும் ஹோலிகாவும்

    ஹோலியும் ஹோலிகாவும்


தீபாவளி என்றால் பட்டாசு .
 பொங்கல் என்றால் கரும்பு.
 கிறிஸ்துமஸ் என்றால் கேக்.
 ஹோலி என்றால் வண்ணம்.
 இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும்
 ஒரு தனி அடையாளம் உண்டு.
 
பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானாக
வந்து குடி கொண்டுவிடும்.
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு
விதமான மகிழ்ச்சியைத் தரும்.
எல்லா பண்டிகைகளும் ஏதோ ஒரு சிறப்பைப்
பெறுவதாக இருக்கும். 
ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள சிறப்பு
அது கொண்டாடப்பட்டதன் வரலாறு ஆகியவற்றை
அறியும்போது எந்த ஒரு பண்டிகையும் 
வெறுமனே பொழுது போகாமல்
கொண்டாடப்பட்டதல்ல என்ற உண்மை
புரிய வரும்.
புராண கதைகளாக இருக்கலாம் அல்லது
வரலாற்று உண்மை நிகழ்வுகளாககூட
இருக்கலாம்.
பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி ஒன்றையே 
குறிக்கோளாக கொண்டிருக்கும்.
இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கியது.
அப்பாடா...இனி எந்த அச்சமும் இல்லை.
கொண்டாடுவோம் வாருங்கள் என்று 
அழைப்பு விடுப்பதாகவே இருக்கும்.

 வண்ணங்களின் பண்டிகையான ஹோலி
கொண்டாடப்பட்ட  வரலாறு  சுவாரசியமானது.
பால்குன் மாதத்தில் வரும் முழுநிலவு நாளில்
ஹோலி கொண்டாடப்படுவது வழக்கம்.

ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாள்
நெருப்பு மூட்டி வழிபடுவர்.
அதனைக் ஹோலிகா தகனம் என்று
அழைப்பர்.
யார் இந்த ஹோலிகா ? 
ஏன் அவளைத் தகனம் செய்வதாக சொல்லி
தீ மூட்டுகின்றனர் ? 
இந்த ஹோலிகா கதைதான்  ஹோலி கொண்டாடப்படுவதன்
முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

இரணியன் என்று ஒரு அரக்கன்
இருந்தான். அவன் சிவன்மீது
அளவுகடந்த பக்தி கொண்டவன்.
தன்னைப் போலவே தன் நாட்டில் உள்ள
 அனைவரும் சிவனையே வழிபட
 வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
 அரக்கனான இரணியன் கடும் தவம்
 புரிந்து சிவபெருமானிடம் இருந்து
 சாகாவரம் பெற்றிருந்தான்.

அதாவது தனது மரணம் எப்படி எல்லாம்
நிகழக்கூடாது என்று சிவனிடம் இருந்து
வரம் பெற்றிருந்தான்.

பகல் பொழுதிலும் என் மரணம் 
நிகழக்கூடாது.
இரவு பொழுதிலும் என் மரணம் 
நிகழக்கூடாது.

மனிதனாலும் மரணம் நிகழக்கூடாது.
மிருகத்தாலும் மரணம் நிகழக்கூடாது.

ஆகாயத்திலும் மரணம் நிகழக் கூடாது.
பூமியிலும் மரணம் நிகழக்கூடாது.

வீட்டிற்கு உள்ளேயும் மரணம் நிகழக்கூடாது.
வெளியிலேயும் மரணம் நிகழக்கூடாது.

எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம்
 நிகழக்கூடாது.
 
 இப்படி ஒரு சாமர்த்தியமான வரத்தை வாங்கி
 வைத்திருந்தான்.
 வரம் கிடைத்ததும் ஒரு மமதை.
 இனி என்னை யாராலும் கொல்ல முடியாது
 என்ற கெக்கலிப்பு.

இவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை.
பூமியில் உள்ளவர்கள் எல்லாம் இரணியன்
என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினர்.
தன்னையே வணங்கும்படி ஆணையிட்டான்.

இந்த ஆணவப் போக்கிற்கு முற்றுப்புள்ளி
வைப்பது யார் ? 
அனைவருக்கும் இறைவனிடம் முறையிடுவதைத்
தவிர வேறு வழி தெரியவில்லை.
இறைவனுக்கும் இவன் கொட்டத்தை எப்படியாவது
அடக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இரணியனுக்கு பிரகலாதன் என்ற ஒரு
மகன் பிறந்தான்.
அவன் நாராயணனின் தீவிர பக்தன்.
எப்போதும் ஹரி நாமத்தையே உச்சரித்துக்
கொண்டிருப்பான்.
ஊரே நான் சொல்வதைக் கேட்கும்போது
தான் பெற்ற பிள்ளை மட்டும் தனக்கு எதிராக
நாராயணனை வழிபடுவதை இரணியனால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சொல்லி சொல்லி பார்க்கிறான்.
பிரகலாதன் கேட்பதாக தெரியவில்லை.
பிள்ளை என்றும் பாராது பல தொல்லைகளைக்
கொடுத்துப் பார்த்தான்.
யானை காலில் இட்டு கொல்ல முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பிரகலாதனிடம் இரணியனின்
அராஜகம் எடுபடாமல் போயிற்று.

இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது...
என்ன செய்வது?
 தன் சகோதரி ஹோலிகாவோடு ஒரு சதித்திட்டம்
தீட்டுகிறான். இதன்படி பிரகலாதனை தீயிட்டு
கொழுத்தி கொன்றுவிட வேண்டும் என்று
முடிவெடுக்கப்படுகிறது.

ஹோலிகா நெருப்பு தன்னை தீண்டாத வரம்
பெற்றிருந்தாள்.அதன்படி அவள் மேலாடை
மீது தீ பிடிக்காதாம்.

அதனால் ஹோலிகா 
மடியில் பிரகலாதனை வைத்து
தீ வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி ஹோலிகா மடியில் பிரகலாதனை இருத்தினர்.
இப்போது தீ பற்ற வைக்கப்பட்டது.
தீ பற்றியது.
அந்த நேரத்தில் ஹோலிகா மீது போர்த்தப்பட்டிருந்த
மேலாடை பிரகலாதனை
மூடிவிட ஹோலிகா  மீது தீ பற்றிக் கொண்டது.
பிரகலாதன் காப்பாற்றப்பட்டான் .
ஹோலிகா தீயில் கருகி மாண்டு போனாள்.

அதாவது தீய சக்தி அழிக்கப்பட்டுவிட்டது.

அதனால்தான் ஹோலிக்கு முதல்நாள் இரவு
ஹோலிகா தகனம் என்று தீயிட்டுக் கொழுத்துவது
ஒரு சடங்காகவே நடைபெற்று வருகிறது.
 
தீமை அழிந்த நாள்தான் ஹோலி பண்டிகையாக 
இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த நாளில் ஒருவர்மீது ஒருவர்
வண்ணப்பொடிகளைத்தூவி தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
அதனால்தான் ஹோலி வண்ணங்களின் 
பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

ஹோலிகா அழிவைக்  கொண்டாடும்
நாள் ஹோலி.
Comments

Popular Posts