வாழ்த்தி வரவேற்கிறேன்

வாழ்த்தி வரவேற்கிறேன்



மகுடம் சூட்டிய நாள்முதலாக
மணிமுடியில் வைரக்கற்களென
நாளொரு திட்டம்  தந்து மக்கள்
நல்வாழ்வுக்கு உறுதி செய்கின்றீர்!

தங்கள் திட்டங்கள் அத்தனையும்
படைத்து வருகிறது  புதிய வரலாறு
அதனால் பெற்றுவிட்டீர்
மதிப்பெண் நூற்றுக்கு நூறு!

புகுந்த வீட்டில் மகிழ்வாக வாழ்ந்தாலும்
பிறந்தவீட்டுப் பெருமை பேசும்
சராசரி பெண்ணாக 
தமிழகம் என் தாய்வீடு
என்பதில்  எனக்குப் பெருமிதம் உண்டு

தாயை இழந்தபின் 
தாய்வீட்டுப் பெருமை பேசுவதில்
ஏது மதிப்பு?
ஏதிலியான மனநிலைதான்
எம்மிடம் எப்போதும் உண்டு!


தாயின் மடிமீது அமர்ந்திருந்து
நிலாச்சோறு உண்டிருக்கும் குழந்தையை
ஏக்கத்தோடு பார்த்து நிற்கும்
அண்டை வீட்டுக் குழந்தை போல
ஏக்கத்தோடு தமிழகத்தைப்
பார்த்து நின்றேன்!

"புலம் பெயர் தமிழர் நல வாரியம்
அமைக்கப்படும் "என்ற 
ஒற்றை அறிவிப்பைத் தந்து
உலகத் தமிழரின் உள்ளங்களைக்
கற்றையாய் அள்ளிக் கொண்டீர்!

"வா..தாய்வீட்டு அரவணைப்பும்
பாதுகாப்பும் உனக்கும் உண்டு"
என்றுரைத்த உம் கரிசனத்தை
என்னவென்பேன்? 
ஏது சொல்லி பாராட்டுவேன்?

நன்றி என்ற மூன்றெழுத்தைச் சொல்லி
அந்நியப்பட்டு நிற்க மனமில்லை
உணர்வாய் உதிரமாய்
உடன்பிறப்பாய் தமிழரை
உள்ளத்தில் சுமக்கும் தாயாய்த்
தமயனாய்த்  தாங்கள் வாய்த்தது 
தமிழர் வாங்கி  வந்த  வரமன்றி
வேறென்ன என்பேன்?

"புலம்பெயர் தமிழர் நலவாரியம்"
அமைத்தமைக்காய்
மும்பை வாழ் மக்கள் சார்பாக
நெஞ்சம் நெகிழ்ந்து
வாழ்த்தி மகிழ்கிறேன்!

வானும் நிலனும் போல
வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு
இன்றுபோல் என்றும் எம்
உள்ளங்களை ஆண்டு!



                   திருமதி. செல்வபாய் ஜெயராஜ்,
                    ஆசிரியை ( ஓய்வு )
                    மும்பை.



Comments

Post a Comment

Popular Posts