திருவள்ளுவர் பார்வையில் காகம்


திருவள்ளுவரின் பார்வையில் காகம்


காகம் அல்லது காக்கை  பற்றி
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான
கண்ணோட்டம் உண்டு.

 காகம் என்றால் சிலருக்கு
 ஓர் அலட்சியம்.
 
 கருப்பாக இருப்பவர்களை அண்டங்காக்கா 
 என்று இழிவாகப் பேசுவர்.
 
 கூட்டமாக சாப்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும் 
 காக்கா கூட்டம் மாதிரி வந்து 
 கூடிட்டானுங்கப்பா என்று
 கிண்டலடிப்பர்.
 
காக்கை கரைந்தால்  விருந்து வரும்
என்பது சிலரது  நம்பிக்கை.

 இப்படி  காகத்தைப்  பற்றி 
  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான
  கண்ணோட்டம் உண்டு.
  
  ஆனால் வள்ளுவருக்கு மட்டும்
  காகத்தைப் பற்றிய 
  எண்ணம் மிகவும் உயர்வானது.
  
  ஒரு அரசன் போருக்குச் சொல்லும்போது கூட
  அவன் காக்கையைப் பார்த்து கொஞ்சம்
  கற்றுக்கொண்டு செல்ல வேண்டும் 
  என்கிறார் வள்ளுவர்.
  
  அடேங்கப்பா....
  அரசனே காகத்திடம் போய் கற்றுக்கொள்ள
  வேண்டுமா?
  
 ஏன் கூடாதா?
 நல்ல காரியத்தை யாரிடம் கற்றால் என்ன ?

  வள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள்.
  
  "பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது "
என்று கூறுகிறார்.

அதாவது காக்கையைவிட கோட்டான் அதாவது
கூகை வலிமையானது.
ஆனால் கோட்டானுக்குப் பகலில் கண் தெரியாது. 
இந்த உண்மை காகத்திற்குத் தெரியும்.
அதனால் கோட்டானைத் தாக்க வேண்டுமென்றால்
காகம் பகல் நேரத்தில்தான் தாக்குமாம்.
கண் தெரியாத கூகை எந்தப் பக்கமிருந்து
எதிரி தாக்குகிறார் என்பது தெரியாமல்
தடுமாறி தோற்றுப் போகும்.

காகத்திற்குக் கூகையோடு சண்டைப் போடும்
நேரம் பகலாக இருந்தால் மட்டுமே சாதகமாக
அமையும். காகம்  கூகையின் பலவீனத்தை
அறிந்து வைத்திருக்கிறது.

 அதாவது தக்கநேரம் பார்த்து எதிரியை 
 வீழ்த்தும் அறிவு காகத்திற்குஉண்டு.
 
 அதுபோலதான் வேந்தர்களும் தங்கள்
 எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அந்த 
 பலவீனத்தை அதாவது நேரத்தைத்
 தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் 
 போருக்குச் செல்ல வேண்டும்.
 அப்போதுதான்  எதிரியை எளிதாக வெற்றி 
 கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.
 
 மன்னனுக்கு அறிவுரை சொல்லுமிடத்து 
 காகம்  உவமையாகியது திருவள்ளுவரிடமிருந்து 
 காகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய 
 அங்கீகாரம் இல்லையா ?

மன்னனுக்கு மட்டுமானால்  காகம் 
உவமையாகி இருக்கலாம்.
நமக்கும் இந்தக் காகத்திற்கும் எப்போதும்
செட்டாகாது என்ற நினைப்பில் எழும்பி
ஓடப் பார்க்கிறீர்களா?

எங்கே ஓடுகிறீர்கள்....?

இந்தக் காகத்தை வைத்து நமக்கு
என்ன சொல்லிவிட முடியும் என்றுதானே
நழுவப் பார்க்கிறீர்கள்.

கொஞ்சம் வள்ளுவர் சொல்வதைத்
கேட்டுவிட்டு அப்புறம் இருந்து கேட்பதா?
செல்வதா ?என்று முடிவெடுங்கள்.

எங்களுக்கெல்லாம் சொல்லும்படி
இந்தக் காகத்திடம்  என்ன செய்தி இருக்கிறது
என்பதுதானே உங்கள் நினைப்பு!

ஏன் இல்லை? 

மன்னனுக்கே மதி மந்திரியாகிப்போன
காகம் நமக்கும் ஏதும் செய்தி சொல்லாமலா
போய்விடும்.?

 "காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும் 
   அன்ன நீராக்கே உள "
   என்கிறார் வள்ளுவர்.
   
 காக்கை ஒருபோதும் சுயநலவாதிபோல் 
 தனித்து உண்பதில்லையாம்.
  இரையைக் கண்டால் போதும்.
  கா..கா...என்று தன் கூட்டத்தைக் 
  கரைந்து கரைந்து ....
  வலிந்து வலிந்து  அழைத்து
  அனைவரோடும் சேர்ந்துதான் 
  உண்ணுமாம். 
  
  இப்படி காகத்தைப் போன்று 
  தன் இனத்தோடு சேர்ந்து
  பகிர்ந்து உண்ணும் பண்பு
  உள்ளவர்க்கு மட்டுமே வளர்ச்சி 
  உரியதாக இருக்குமாம்.

மென்மேலும் வாழ்வில் உயர வேண்டும் 
என்று ஆசையா?
காகத்தைப் போன்று பகிர்ந்து உண்டு
பாருங்கள். உங்கள் வளர்ச்சி
தானாக நிகழும் என்கிறார் வள்ளுவர்.

அடேங்கப்பா....
ரொம்ப நல்ல கருத்தாக 
இருக்கிறதில்லையா?
.

 "  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
    
   ஆம்.நமக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கு 
 கொடுத்து உண்ணுதலாகிய பண்பு 
 அறநூல்கள் எது எல்லாம் அறம் 
 என்று கூறுகிறதோ 
 அந்த அறங்களில் எல்லாம் 
 தலையாய அறமாகும் என்பது
 வள்ளுவர் கருத்து.
 
 அப்படியானால் அறங்களில் எல்லாம்
 தலையாய அறம் பகிர்ந்து உண்டலில்தான்
 உள்ளதா?
 
  இந்த உயரிய அறம் காகத்திடம் 
  மட்டுமே உண்டாம். 
  எம்மாடியோவ்.... இதைவிட காகத்திற்கு வேறென்ன
  பெருமை வேண்டுங்க?
   
     
 காகத்தைப் பெருமைப்படுத்த 
 வள்ளுவரைவிட வேறு ஆள் வேண்டுமா என்ன!
 
 காகத்தை மாதிரி   இருங்கப்பா 
 என்று நச்சென்று சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.
 
 பண்பில் நம்மைவிட எவ்வளவு 
 உயர்வான பறவையாக இருந்திருக்கிறது 
 காகம் என்பது இப்போது புரிகிறதல்லவா?
 
வள்ளுவரின் பார்வையில் காகம் உயர்வாக 
மதிப்பளிக்கப்பட வேண்டிய பறவை
இது இப்படி இருக்க...

காகத்தை எள்ளி நகையாடவே கூடாது
என்கிறார் இன்னொருவர்.

அந்த இன்னொருவர் யார் என்கிறீர்களா?
நம்ம முன்றுறை அரையனார் தாங்க...

யார் இந்த முன்றுறை அரையனார்
என்று முணுமுணுப்பதுபோல் இருக்கிறதே!

இந்த அரையனாரும் தெரியலியா?

பழமொழி நானூறு பாடியவர் தாங்க
முன்றுறை அரையனார் .

ஓ....நன்றாக தெரியுமே!

இப்படி விவரமாகச் சொன்னால் தெரிந்திருக்கும்...
இல்லையா?

நான்தாங்க கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கணும்.
போகட்டும்....மன்னித்து விட்டுவிடுங்கள்.

பழமொழி நானூறு என்ன சொல்லி இருக்கிறது
என்று பார்ப்போம்.

"கள்ளி அகிலும் கருங் காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார் வாயின் நல்லுரையை  - 
.....   ......
.... .......        .....    ..... "
என்கிறார் முன்றுறையரையனார்.

அதாவது கள்ளியிடம் பிறக்கும் அகிலையும்
கரிய காக்கையது சொல்லையும் 
பிறந்த இடம் நோக்கி இழிவாக 
கருத வேண்டாம்.
அதுபோல நல்ல சொற்கள் யார்
வாயிலிருந்து வந்தாலும் இழிவாக
எண்ணலாகாது. சொல்லும் கருத்து
உயர்வானதாக இருந்தால் கேட்டுக்
கொள்ள வேண்டும் என்கிறது 
பழமொழி நானூறு.

பிறப்பை வைத்து ஒருவரையும்
தவறாக எடை போட்டு விடாதீர்கள்.
வாய்மொழி என்ன என்பதைப் 
பாருங்கள்....நன்றாக இருக்கு இல்ல...
ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு இல்ல.!

காகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டார்
முன்றுறை அரையனார்.

இனி காகம் தலையை உயர்த்தி
கம்பீரமாக பறக்கலாம் இல்லையா!


" காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

என்றாரே பாரதி.

இனி காகத்தை இழிவாக நினைப்போமா 
என்ன?

காகத்தைப் போல நேரம் பார்த்து 
செயலில் ஈடுபடுவோம்.
வெற்றியை நமதாக்கிக் கொள்வோம்.

காகத்தைப்போல  பங்கிட்டு உண்ணும் 
பழக்கத்தை 
ஏற்படுத்திக் கொள்வோம்.

அனைவரின் உள்ளங்களையும் வெல்வோம்!
    

Comments

Popular Posts