பலாப்பழத்தை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?

பலாப்பழத்தை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?
மா , பலா , வாழை முக்கனிகள் 
என்று சொல்லும்போதே
சாப்பிட வேண்டும் என்ற ஆவல்
மேலிடும். 
மூன்றுமே அனைவருக்கும் பிடித்தமான
பழங்கள் தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. 
இதில் பலாப்பழம் என்றாலே நாவில்
தேனூறும்.
பலாப்பழம் தொலைவில் இருக்கும்போதே
நான் இங்கு இருக்கிறேன் என்று 
மணத்தைத் தூதாக அனுப்பி 
நம்மை அழைக்கும். 
கால்கள் அந்த இடத்தை நோக்கி
நகரும்.
கண்கள் எங்கே பலாப்பழம்?
எங்கே பலாப்பழம் ?
என்று ஆலாய்ப் பறக்கும்.
இதுதாங்க பலாப் பழத்துக்கான சிறப்பு.

இப்படிப்பட்ட பலாப்பழத்தை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கி வந்து சாப்பிட ஆசை.

வாங்கி வந்தாயிற்று.

பழத்தை வாங்கி வந்து
வெட்டிப் பார்த்தால் உள்ளுக்குள்
சுளையையே காணோம்.
பூந்தியுள் கையைப் போட்டுத் 
துழாவித் துழாவிப் பார்த்தாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஐம்பது சுளை கூட தேரவில்லை.

அப்படியே ஏமாந்து போயிருப்போம்.
இந்த வியாபாரி என்னை நன்றாக
ஏமாற்றிவிட்டார் என்று 
வசைபாடிவிட்டு பூந்தியை எடுத்து
வழித்து நக்கி நமது பலாப்பழ ஆசையைத்
தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
வேறு என்ன செய்வது? 
இப்படி கையைப் பிசைந்து கொண்டு
நின்றிருக்கிறீர்களா ?
எங்கள் வீட்டில் இது நடந்திருக்கிறதுங்க..

இப்படி என்ன வெறும் மெக்குப்
பழம் வாங்கி வந்திருக்கிறாய் ?
என்று எத்தனை முறை திட்டினாலும்
இந்தப் பலாப்பழத்தை மட்டும் 
எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்
என்று யாரும் சொல்லித் தரவே இல்லைங்க...

பலாப்பழத்தை எப்படி வாங்குவது ?

யாரிடம் போய் கேட்பது?
கேட்டால் இதுகூட தெரியாதா என்று
சொல்லிவிடுவார்களோ என்ற 
தன்மானம் குறுக்கே வந்து 
கட்டையைச் போட்டு நின்றது.

மானப் பிரச்சனைதான். 
யார் இல்லை என்றது?

வேறு எந்தப் பழமானாலும் விட்டிருப்பேன்.
பலாப்பழமாயிற்றே !சிறு வயதிலிருந்தே
நிறைய தின்று வளர்ந்தாயிற்று.

"சீனிக்கிழக்கு தின்ற வாய்
செவியறுத்தாலும் நில்லாது"
என்பதுபோல பலாப்பழம் தின்றவாய்
பசபசவென்று வருகிறது.

வெட்கம் ஒரு பக்கம் இருந்தாலும்
பலாப்பழம் பற்றிய தேடல் 
மறுபக்கம் நடந்து கொண்டேயிருந்தது.
அப்போது வலையில் அகப்பட்டது
ஒரு பலாப்பழக் கணக்கு.

பலாப்பழத்தின் சுளையறிய வேண்டுமா? 
என்ற வரியைப் பார்த்ததும் அந்த
இடத்தில் அப்படியே நின்று விட்டேன்.
பலாப்பழம் தின்றது போன்றதொரு மகிழ்ச்சி.
என் பலநாள் தேடலுக்கு 
கிடைத்தது நல்லதொரு தீர்வு.

இனி யாரும் ஒரு பலாப்பழம் கூட சரியாக
வாங்கத் தெரியவில்லையே என்று
கை நீட்டி குற்றப்படுத்த முடியாதல்லவா!
 ஒரு பெருமிதத்தோடு பாடலை 
வாசிக்க ஆரம்பித்தேன்.


இதோ பாடல் உங்களுக்காக...


"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை 
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
 வேறெண்ண வேண்டாஞ் சுளை"

பலாப்பழத்தின் உள்ளே எத்தனை சுளைகள்
இருக்கும் என்பதை அறிய வேண்டுமா?
ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பார்த்துக்
கொள்ளுங்கள்.
காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை 
எல்லாம் எண்ணுங்கள்.
அதன் பின்னர் முட்களின் எண்ணிக்கையை
ஆறால் பெருக்குங்கள்.
பெருக்கிக் கிடைத்த எண்ணை ஐந்தால்
வகுத்துப் பாருங்கள்.
இதுதான் பலாப்பழத்தின் உள் இருக்கும்
சுளைகளின் எண்ணிக்கையாக இருக்கும்.
என்கிறது கணக்கதிகாரம் என்ற 
கணித நூலிலுள்ள
இந்தப்பாடல்.

தமிழில் இப்படி ஒரு பாடலா?
வியப்பாக இருக்கிறதல்லவா!
யார் சொல்லித் தந்தால் என்ன? 
சொல்லித் தராமல் போனால் என்ன?

எல்லாவற்றையும் சொல்லித் தர
நம் தமிழ் இருக்கிறது.

இப்போது மனதிற்குள் ஒரு
குழப்பம் வரும்.
என்ன குழப்பம் என்று கேட்கிறீர்களா?

யார் பலாபழத்து முள்ளை எண்ணிக்கொண்டு
நிற்க முடியும்?
இதுதானே உங்கள் குழப்பம்.

ஒன்றுக்கும் கவலைப்படாதிருங்கள்.
கண்களாலேயே கணக்குப் 
போட்டுப் பார்த்துவிடலாம்.
எப்படி என்கிறீர்களா?

காம்புக்கு அருகில் 
முட்கள் நெருக்கமாக இருந்தால்
அந்தப் பலாப்பழத்தின் பலாச்சுளைகள்
அதிகம் இருக்கும்.
முட்கள் காம்பருகில் கலப்பாக 
இருந்தால் பலாப் சுளைகள்
குறைவாகத்தான் இருக்கும்.
இப்படி மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

இனி கண்களாலேயே பார்த்துப் பார்த்து 
சுளைகள் அதிகம் உள்ள
பலாப்பழம் வாங்கி வந்துவிடலாமல்லவா?

எல்லாப் புகழும் 
கணக்கதிகாரத்திற்கே!

 


Comments

  1. மிகவும் பயனுள்ள மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts