உவமை அணி

        உவமை அணி


அணி இல்லாத கவிதை
மணி இல்லாத மாலை போன்றது.

கவிதையின் அழகுக்கு அழகு
சேர்ப்பது அணி இலக்கணம்.
அழகோடு மட்டுமல்லாமல் சொல்ல வந்த
கருத்தை எளிதாக புரிய வைப்பதற்காகவும்
செய்யுளில் உவமை கையாளப்படுதல்
உண்டு.

அணி இலக்கணத்தில் முதன்மையான
அணி உவமை அணியாகும்.

ஒரு பொருளை விளக்குவதற்காக
அதனோடு ஒப்புமை உடைய
இன்னொரு பொருளை உவமையாகக் கூறி
விளங்க வைப்பதை உவமை அணி 
என்கிறோம்.


உவமை நாம் அன்றாடம் கேட்ட
சொற்களாகத்தான் இருக்கும்.

"ஆஹா.....இந்த மாம்பழம் தேன் போல 
இனிக்கிறது "என்று சொல்லிச் சொல்லி 
சுவைத்திருப்போம்.

ஏதாவது மருந்தைப் குடிக்கும்போது
"பாகற்காய் போல கசக்கிறது "என்று
சொல்லி குடிக்க மறுத்திருப்போம்.

"நீர் அருவி போல கொட்டியது"
என்று சொல்லக் கேட்டிருப்போம் .

"ஒத்த பிள்ளை என்று கறிவேப்பிலை 
கண்ணுபோல வளர்த்தேன் "என்று அம்மாக்கள் 
சொல்லுவதைக் கேட்டிருப்போம்.

"பிள்ளை என்றால் பக்கத்து வீட்டு 
 ரவி போல இருக்கணும்.நீயும் இருக்கியே...."
என்று அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம்.

"அந்தப் பெண்ணுக்குப்  பூப்போல மனசு "
என்று  சொல்லியிருப்போம்.

இப்படி உவமை என்று தெரியாமலேயே 
அன்றாடம் ஒப்பிடுவதற்காக 
உவமையைக் கையாண்டு
வந்திருக்கிறோம்.

ஆனால் அது உவமை என்பது
நமக்கே தெரியாது.

எப்போது இரண்டு பொருள்களை
ஒப்புமைபடுத்திப் பேசுகிறோமோ
அங்கு போல என்ற உவம உருபும்
வந்து தொற்றிக் கொள்ளும்.
அப்படிப் பேசியிருந்தால்
அதுதாங்க உவமை அணி.


உவமை அணியின் இலக்கணமாக,

"பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை "

என்று சொல்கிறது  தண்டியலங்காரம்.

புலவர் தாம் சொல்ல வந்த
கருத்தை வேறு ஒரு பொருளுடன்
ஒப்புமைபடுத்திக் கூறும்போது
அப்பொருளின் பண்பு, தொழில் , மற்றும் அதன்
பயன் ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு
இருபொருள்களுக்குமிடையே
உள்ள ஒற்றுமை புலப்படும்படி பாடுவது
உவமையணியாகும் என்கிறது
தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல்.




1.உவமை அல்லது உவமானம்

2.பொருள் அல்லது உவமேயம்

3. . உவம உருபு

இந்த மூன்றும் உவமையணியில்
வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்க
வேண்டும்.
இதனை மனதில் பதிய வைத்துக்
கொள்ளுங்கள்.


 1.உவமை அல்லது உவமானம்
 
பொருளை  விளக்குவதற்காகவோ 
அழகுபடுத்தவோ இயைத்துக் கூற
பயன்படுத்தப்படும் சொல் உவமை அல்லது
உவமானம் எனப்படும்.

தாமரை போன்ற முகம்
என்ற சொற்றொடரை எடுத்துக்
கொள்வோமானால் இதில் உவமையாகக்
கையாளப்பட்டுள்ள பொருள் 
 தாமரை.
ஆதலால் தாமரை என்பது இங்கு 
உவமானம் .

ஒப்பிவடுவதற்காக எடுத்துக் கொண்ட 
பொருள்  உவமானம்.

2.  உவமேயம் :

எந்தப் பொருளைப் பற்றி நாம் 
சொல்ல விரும்புகிறோமோ
அது உவமேயம் எனப்படும்.
 
"தாமரை போன்ற முகம் "
 
இதில் சொல்ல வந்த பொருள்
முகம். 
ஆதலால் இத்தொடரில் 
'முகம் ' என்பது உவமேயம் ஆகிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட
வேண்டியது
உவமேயத்திற்கும் உவமானத்திற்குமான
ஒத்த பண்பு கண்டிப்பாக இருக்க
வேண்டும். அப்படி ஒத்தப் பண்பு
இருந்தால் மட்டுமே அதனை
உவமேயமாக கையாள முடியும்.
அப்போதுதான் சொல்ல வந்த
பொருளை  நன்கு  புரிய வைக்க
முடியும்.
தாமரை மென்மையான மலர்.
மலர்ச்சியாக இருக்கும்.
அந்த மென்மையும் 
மலர்ச்சியும் கொண்டது முகம்
என்று சொல்ல விழைவதால் தாமரை
இங்கே  உவமானமாக  இருக்கிறது.
முகம் உவமேயம் ஆகிறது.

 ஒப்பிடப்படும் பொருள் உவமேயம்

3.  உவம உருபு : 

இரு பொருள்களுக்கு இடையே உள்ள
ஒப்புமையை உணர்த்துவதற்காக
உவமைக்கும் பொருளுக்கும் இடையில்
வரும் இடைச்சொல் உவமை உருபு
எனப்படும்.

"போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன 
என்பவும் பிறவும் உவமத் துருபே"

என்கிறது நன்னூல் என்னும்
இலக்கண நூல்.


உவமானத்தையும் உவமையையும் 
இணைக்க போல, புரைய, ஒப்ப , உறழ ,மான 
....போன்ற உவம உருபுகள்
பயன்படுத்தப்படுகின்றன.

கயல் போன்ற விழிகள் -     ( போல )

( கயல் மீன் போன்ற கண்கள் )

கயல் -     உவமானம்

விழிகள். -  உவமேயம்

கிளி போலப் பேச்சு


தளிர் புரை மேனி -          (  புரை  )

(தளிர் போலும் மென்மையான உடல்)

வேய்புரை தோள்


பால் ஒப்ப மேகம் -.       ( ஒப்ப )

(பால் போன்ற வெண்மை நிற மேகம்)

தாயொப்ப பேசும் பிள்ளை


செவ்வான் அன்ன மேனி -       ( அன்ன )

(செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல்)

மலரன்ன சேவடி

இவை எல்லாவற்றையும் படித்து
விளங்கிக்கொள்ளுங்கள்.

இனி திருக்குறளுக்கு வருவோம்.


"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார்ப்  பொறுத்தல் தலை "


அகழ்வாரைத் தாங்கும் நிலம்  இங்கு 
உவமேயம் . அதாவது பொறுமை
 எப்படி இருக்க வேண்டுமாம்.?

 தம்மை இகழ்வாரையும் 
தாங்கி நிற்கும் பண்பு கொண்ட
நிலத்தைப் போல இருக்க வேண்டுமாம்.
.

தம்மை இகழ்வார் பொறுத்தல் 
என்பது உவமேயம்.

இங்கு  நிலத்தைப்போல பொறுத்துக்
கொள்ளும் தன்மை வேண்டும்
என்பதுதான்  சொல்ல வந்த கருத்து.

அகழ்வாரைத் தாங்கும்  நிலம்    -          உவமானம்
தம்மை  இகழ்வாரைப் பொறுத்தல் - உவமேயம்

போல  -        உவம உருபு

உவமானம் , உவமேயம்
உவம உருபு இந்த மூன்றும் 
வெளிப்படையாக கூறப்பட்டுள்ளதால்
இந்தக் குறள் உவமை அணிக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாகும்.



மேலும் சில எடுத்துக்காட்டு குறள்களை
வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்.


"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு "

                            குறள்.  -.   552

அதிகாரம் கொண்ட அரசன் தன்
அதிகாரத்தைப் பயன்படுத்தி வரிவிதிப்பு 
செய்வதுஎன்பது வேல் போன்ற ஆயுதத்தை 
காண்பித்து வழிப்பறி செய்வதற்கு
ஒப்பாகும்.

இதில் வந்துள்ள உவமானம்
உவமேயம், உவம உருபு
ஆகியவை வெளிப்படையாக வந்துள்ளது 
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு "

           குறள்.  - 339



"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்  கடை "

                     குறள் -  964



போன்ற குறள்களில் வந்துள்ள
உவமானம்
உவமேயம்  உவம உருபு இவற்றையும்
அறிந்து கொள்ளுங்கள்.

குடும்பத் தலைவன் என்ற
திரைப்படப் பாடலில் வந்துள்ள 
 உவமை அணியைக் கண்டு 
மகிழுங்கள்.


திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே
ஒருத்தி வருவாளாம் ( 2 )
......    ...... .....

சேரநாட்டு யானைத் தந்தம் 
போலிருப்பாளாம்
நல்ல சீரகச் சம்பா அரிசிபோல
சிரித்திருப்பாளாம்
சிரித்திருப்பாளாம்
ஒஹோஹ் ஹோ  ஹோய்

             (  திருமணமாம்....)
....
செம்பருத்திப் பூவைப்போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்


..... ......     ....

செம்புச்சிலை போல
உருண்டுத் திரண்டிருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா
மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்....


கவிஞர்கள் கையில் உவமை எப்படி
உருண்டு விளையாடுது என்று
பாருங்கள்!

இதுதான் உவமை அணியா?

எனக்கு இது நன்றாகவே தெரியும்
என்பீர்கள்.

உங்களுக்கு நன்றாகத் தெரிய வேண்டும்
என்பதுதானே  எங்கள் நோக்கம்.






Comments

Popular Posts