நாராய் நாராய்....

  நாராய் நாராய் செங்கால் நாராய்....

ஒவ்வொரு செய்திக்கும் ஏதோ ஒரு
பின்னணி இருக்கும்.

ஒரு காட்சியோ நிகழ்வோ ஒருவருடைய உள்
மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்போதுதான்
அது சொற்களாக வெளிவரும்.

இப்படி உருவானவைதான் பாடல்கள், 
சிறுகதைகள்,
நாவல்கள்  , கட்டுரைகள் , காப்பியங்கள்
என்று வெவ்வேறு வடிவங்களில்
வெவ்வேறு கோணங்களில் 
வெவ்வேறு இலக்கிய வடிவங்களாக
இன்று நம்மோடு உலவிக் கொண்டிருக்கின்றன.


இங்கே ஒரு புலவர் ஒரு பாடல்
என்று பாடுகிறார்.
அந்த ஒற்றைப் பாடலில் நம்
உள்ளங்களைக் கற்றையாக
அள்ளிக் கொண்டார் என்றால் அது
மிகையாகாது.

 பாடல் யாரிடம் பாடப்பட்டது
என்று கேட்டால் அசந்து போவீர்கள்.

ஒரு நாரையை தன் மனைவியிடம்
 தூது போகச்  சொல்கிறார் புலவர்.

நாரையிடமா?

ஏன் மேகத்திடம் தூது போகச் சொல்லும்போது
நாரையிடம் தூது போகச் 
சொல்லக் கூடாதா என்ன?

சொல்லலாம்...சொல்லலாம்.
தாராளமாகக் சொல்லலாம்
என்கிறீர்களா?

சாதாரண நாரை தானே என்று 
நீ போ .
போய் கண்டேன் உன் காதல் மணாளனை 
என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு 
வா என்று  சொல்லவில்லை.
அப்படிச் சொல்லி இருந்தால் இந்தப்
பாடல் இந்த அளவுக்கு நம் மனதில் 
இடம் பிடித்திருக்காது.
இன்றுவரை நம்மோடு நடைபயின்று
கொண்டிருக்காது.

பாடலில் அவர் கையாண்ட
சொற்கள் புலவரை அப்படியே
நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.
கண்ணுக்குள்ளையே  இன்றுவரை
நின்று கொண்டிருக்கிறது.

இப்போது பாடல் பற்றிய
கதைக்கு வருவோம்.

சோழ நாட்டிலுள்ள புலவர் ஒருவர்
பாண்டிய மன்னனிடம் பாடல் பாடி
பரிசில் வாங்கி வரலாம் என்று
பாண்டிய நாட்டிற்கு வருகிறார்.
மன்னனை பார்க்க அரண்மனை செல்கிறார்.
ஆனால் காவலாளிகள் புலவரை 
அரண்மனைக்குள் செல்ல 
அனுமதிக்கவில்லை. எவ்வளவோ சொல்லிப்
பார்க்கிறார். மன்றாடிப் பார்க்கிறார்.
ஆனால் இவை எதையுமே காவலாளிகள் 
காதில் வாங்கிக் கொள்வதாக  தெரியவில்லை.
சோர்ந்து போன புலவர் அப்படியே
திரும்பிச் சென்று ஒரு சத்திரத்தில்
போய் தங்குகிறார்.

இது ஒருபுறம் இருக்க,
பாண்டிய மன்னன் மாறன்
இளம் வழுதிக்கு தன் குடிமக்கள்
எவ்வாறு வாழ்கின்றனர் என்று கண்டு வர
ஆசை. அப்படியே மாறுவேடத்தில்
நகர்வலம் வருகிறார்.ஒரு  சத்திரத்தின்
அருகில் வருகிறார்.அங்கே ஒரு மனிதர்
 குளிரில் நடுங்கியபடி
படுத்திருப்பது தெரிகிறது.

யாரிவர் ? 
ஏன் இந்தக் குளிரில் போர்த்திக்
கொள்ள மேலாடைகூட இல்லாமல்
இவர் படுத்திருக்கிறார்.?

பசியா? பிணியா?
இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா?
அறிந்து விட வேண்டும் என்று 
மன்னர் அருகில் செல்கிறார்.

மன்னர் அருகில் வந்திருப்பது
கூட அறியாமல் அந்த மனிதர்
யாரிடமோ  பேசுவதுபோல் இருக்கிறது.
யாரிடம் பேசுகிறார் என்று
சுற்றுமுற்றும் பார்க்கிறார்
 மன்னர்.
மனிதர்கள் யாரும் இல்லை.
அப்படியானால்
 இவர் யாரிடம் பேசுகிறார்?

நாராய் ! நாராய்!

என்ன இது ?
சாதாரணமாக சத்திரத்தில்
முடங்கிக் கிடந்த மனிதனிடமிருந்து
நாராய்! நாராய்!
என்றொரு முனங்கல் வருகிறதே!
அடுத்தது என்ன என்று 
உற்றுக் கேட்கிறார் மன்னர்.


"நாராய் நாராய் செங்கால்
நாராய்
பழம்படு பனையின் கிழங்கு 
பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் 
நாராய்
நீயும் நின் மனைவியும் தென்திசைக்
குமரியாடி
வடதிசைக்  கேகுவீராயின்
எம்மூர்ச்  சத்திமுத்த வாவியுட்
தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரல்
பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக்
கண்டு 
எங்கோன் மாறன் வழுதிக்
கூடலில்
ஆடை யின்றி வாடையில் 
மெலிந்து
கையது கொண்டு மெய்யது
பொத்திக்
காலது கொண்டு மேலது 
தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென
உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் 
எனுமே"

இப்படியாகப் பாடல்பாடி
முடிக்கிறார் அந்த மனிதர்.


செங்கால் நாராய்!

பொருத்தமான அடைமொழி தான்.
சிவந்த கால்களை உடைய
நாராய் !

பழம்படு பனையின் 
கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!

இந்த வரியைத் கேட்டதும்
மன்னர் அசந்து போய்விட்டார்.
எவ்வளவு அருமையான உவமை!

பனங்கிழங்கை இரண்டாகப்
பிளந்து வைத்தது போன்று
 பளபளவென்று கூர்மையான
அலகு உனக்கு என்று தூது போக 
அழைத்தவரை
புகழ்ந்து பாடி விட்டார்.

மன்னன் மனதில் அப்படியே
பனங்கிழங்கும் அதை இரண்டாக வகுந்தெடுத்த
காட்சிகளும் வந்து போயின.

நீயும் நின் மனைவியும் தென்திசை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறீர்கள்.
தென்திசையில் தான் குமரி இருக்கிறது.
அங்கு சென்று நீராடிவிட்டு
திரும்ப வடதிசைக்குச் செல்வீராயின்
எங்கள் ஊர் சத்திமுத்தத்திற்குச்
செல்வீராக.
அங்குள்ள  சோலையில்
 தங்கிவிட்டு என் வீட்டைச் சற்று
பார்த்துவிட்டு வாருங்கள்.

என் வீட்டுக்கூரை  எப்படி இருக்கும் தெரியுமா?
ஒழுகும் மழையில் நனைந்து கிடக்கும்.
அந்தக் கூரை வீட்டுப் சுவற்றில்
செல்லும் பல்லி சொல்லும்
சேதி ஏதேனும் உண்டோ 
 என்ற எதிர்பார்ப்போடு
என் மனைவி  பல்லியையே
பார்த்திருப்பாள்.
என் மனைவியைப் பார்த்து
நான் சொல்லும் செய்தியைச்  சொல்லுங்கள்.
"என் மன்னனுடைய கூடல்
மாநகரில் உன் கணவனைத் கண்டேன்.
அவனோ மேலே போர்த்திக் கொள்ள
 மேலாடை கூட 
இல்லாமல் கைகளால் உடம்பை
மறைத்துக் கொண்டு கால்களை மடக்கி 
மேலது  தழுவி முடங்கிய நிலையில்
பெட்டிக்குள் இருக்கும் பாம்பு பெருமூச்சு 
விடுவது போல பெருமூச்சு விட்டுக்கொண்டு
கிடக்கிறான் என்று சொல்லுங்கள் "என்கிறான்.

 பாண்டிய மன்னனைப் பாடி
பொருள் பெற்றுச் செல்லலாம் என்று வந்தேன்.
ஆனால் இன்னும் என் வறுமை 
நீங்க மன்னனிடமிருந்து எனக்கு
எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று
சொல்லாமல் சொல்லிவிட்டார் புலவர்.

கேட்ட மன்னன் அதிர்ந்து
போய்விட்டார்.
என் ஆட்சியில் ஒரு புலவர்
ஏழ்மையில் கிடப்பதா?
என்னைக் காண வந்து 
வெறுமையாக திரும்பிச் செல்வதா? 
கூடாது....கூடவே கூடாது.
உடனே தான் அணிந்துவந்த
சால்வையை எடுத்து புலவர் மீது
போர்த்திவிட்டு அரண்மனைக்குச் 
சென்று விடுகிறார்.
மறுநாள் ஒரு வீரரை அனுப்பி புலவரை 
அரண்மனைக்கு
அழைத்து வரச் செய்தார்.
புலவரின் வறுமை நீங்க
 வேண்டும் மட்டும்
பொருள் கொடுத்து புலவருக்கு 
தக்க மரியாதை
செய்து திருப்பி அனுப்பினார்
என்பது வரலாறு.


வறுமையில் இருக்கும்போதே
பாடல் வருகிறது. வயிறு நிறைந்தால்
பாடாமல் இருப்பாரா ?

அதற்கும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்
இந்தப் புலவர்.

இதோ அந்தப் பாடலும் உங்களுக்காக....

 "வெறும்புற் கையும்அரி தாம்கிள்ளை
சோறுமென் வீட்டில் வரும்
எறும்புக்கும் ஆர்ப்பத மில்லை முன்னாளென்
இருங் கவியாம்
குறும்பைத் தவிர்த்தகுடி தாங்கியைச்
சென்று கூடியபின்
தெறும்புற் கொள்யானை கவளம் 
கொள்ளாமல் தெவிட்டியதோ!"

அதாவது மன்னன் பரிசில் கொடுப்பதற்கு
முன்புவரை என் வீட்டில் வெறுஞ்சோறு
கிடைப்பதுகூட அரிதாக இருந்தது.
என் வீட்டுக் கிளிகூட உணவில்லாமல் 
பசிப்பிணி வந்து தளர்ச்சியுற்று
சோர்ந்து காணப்பட்டது.
என் வீட்டிற்குள்  வரும் எறும்பிற்கும்
ஒரு சிறு அரிசிமணி கூட கிடைக்காது.

என் வீட்டில் ஒரு பருக்கைகூட
கீழே விழுந்து சிந்திச்சிதறி கிடப்பதில்லை.
அவ்வளவு வறுமை!
மன்னனைப் போய் பார்த்தேன்.
பாடினேன். பரிசில் பெற்றேன்.
எவ்வளவு பொருள் பெற்றீர் 
என்று கேட்கிறீர்களா?
யானையானது வாய் கொள்ளாமல் கரும்பைக்
கடித்து உமிழ்ந்து சிந்திச் சிதறிப் 
போடுவது போல வீடு முழுவதும்
இப்போது மிச்சம் மீதியாகப் பொருள் 
கிடக்கிறது என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.தாராளமாக,
ஏராளமாக பொருள் தந்து அனுப்பியதால்
என் வறுமை நீங்கி வளமாக
வாழ்கிறேன் என்று வாயார வாழ்த்தி
தன் நன்றியைத் தெரிவித்துள்ளார் புலவர்.


தமிழுக்கு மரியாதை செய்வதில் தமிழ்
மன்னர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லைங்க.

அருமையான பாடல்கள் இல்லையா?









"
 


Comments

  1. தமிழ் மொழியின் பெருமை புலவர்கள் பாடிய பாடல்களிலே வெளிப்படுகிறது.மிக அருமை.

    ReplyDelete

Post a Comment