புத்தாண்டு உறுதிமொழி

புத்தாண்டு உறுதிமொழி

"சந்திரா என்ன....புத்தாண்டுக்கு
தயாராகிக்கொண்டிருப்பதுபோல இருக்கிறது"

"என்னது?.... புத்தாண்டு வந்தாச்சா?
சொல்லவே இல்ல...."

"ஏன் உன்னிடம் அனுமதி கேட்டுத்தான்
புத்தாண்டு வர வேண்டும் என்ற
நியதி ஏதேனும் இருக்கா?

"அதற்குள்ளாக 
 ஓர் ஆண்டு ஆயிடுச்சா?
கண்மூடி கண் திறப்பதற்குள் 
 ஓராண்டு முடிந்தது போல் இருக்கிறது."

"இருக்கும்...இருக்கும்...
கண்களை மூடிக் கொண்டே இருந்தால்
கண்கள் திறப்பதற்குள் என்னன்னவெல்லாமோ 
நடந்து முடிந்துவிடும்."

"அப்படித்தாங்க இருக்கிறது.
எப்படி இந்த ஓராண்டு போயிற்று
என்றே தெரியவில்லை.
ஆனால் ஒண்ணு சொல்றேங்க....
ஓராண்டுக்குள் என்னவெல்லாமோ 
நடந்து போச்சு...."

"நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"

"உங்கள் வாழ்த்துக்கு நன்றி."

"இந்தப் புத்தாண்டிற்கு ஏதேனும் 
உறுதிமொழி எடுக்கும் உத்தேசம் உள்ளதா?"

"அட போங்கங்க...
நான் கடந்த ஆண்டு என்ன உறுதிமொழி
எடுத்தேன் என்பதை நினைவுபடுத்திப்
பார்த்துவிட்டுப் பேசுகிறேன்"


" என்ன உறுதிமொழி எடுத்தாய்
என்பதே நினைவில் இல்லை.
அப்படியானால் நல்லமுறையில்
கடைபிடித்திருப்பாய் போல் தெரிகிறது."

"என்னங்க...கிண்டலா?
இந்த ஒரு முறை மட்டும் 
போகட்டும்...
அடுத்தமுறை பாருங்கள்?
இந்த ஆண்டு உறுதிமொழி எடுத்து,
அதை நிறைவேற்றி உங்களிடம்
நல்ல பெயர் வாங்கல.!..
என்பெயர் என்னங்க..."

"பெயரே மறந்து போயிற்றா?
அப்படியானால் நீங்கள் உறுதிமொழியை
மறந்து போனதில் தப்பே இல்லை."

"நான் பெயரை மறந்துபோனது ஒரு
குற்றமா? தாமஸ் ஆல்வா எடிசனே
தன் பெயர் மறந்து போய்விட்டது என்று 
சொன்னார் என்று நீங்கள் சொல்லலியா? 
என்னவோ நான்
மட்டும்தான்  இமாலய குற்றம் 
செய்துவிட்டது
போல பேசுறீங்க..."

"அதையெல்லாம் சரியாக நினைவு 
வைத்திருக்கிறாய்....
கடந்த ஆண்டு எடுத்த உறுதிமொழி 
 மட்டும் நினைவில் இல்லை, இல்லையா?"

"ஒரு உறுதிமொழி மறந்துபோனதற்கு
இத்தனைப் பேச்சாப்பா ?"
பேசுங்க...பேசுங்க...இந்த ஆண்டு  
புத்தாண்டுக்கு என்ன உறுதிமொழி 
எடுக்கலாம் என்பதுபற்றி
கொஞ்சம் டிப்ஸ் கொடுங்களேன்"

இப்படித்தாங்க பலரும் புத்தாண்டு
வருவதும் தெரியாமல்
என்ன உறுதிமொழி எடுத்தோம்
என்பதைக்கூட மறந்து வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு 
உறுதிமொழி எடுக்குமுன் 
நடந்த நிகழ்வுகளைச் சற்று
திரும்பிப் பாருங்கள்....
நம்மை நினைத்து நாமே
உள்ளுக்குள் சிரித்துக் கொள்வோம்.


என்ன உறுதிமொழி எடுக்கலாம்?..
என்ன உறுதிமொழி எடுக்கலாம்?
அங்கேயும் இங்கேயும் ஒரு தேடல் 
ஏற்கனவே நடத்தியிருப்போம்.

வலையில் சிக்கிய மீனாக
ஏதாவது ஒன்றிரண்டு கட்டுரைகள் 
கிடைத்திருக்கும்.

இவர்கள் சொல்வது நன்றாக
இருக்குல்ல....இதையே 
செய்துவிடுவோம்
என்று முடிவு செய்யப்போகும் நிலையில்
இன்னொரு கட்டுரை கண்ணில் 
தட்டுப்படும்.

புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ளலாம் என்று எழுதியிருப்பார்
இன்னொருவர்.
இது செய்து முடிக்க இயலக்கூடிய
எளிதான செயல்தானே
இதையே நாமும் செய்யலாம் 
என்று தோன்றியிருக்கும்.

அதற்குள் புத்தாண்டு மலர் ஒன்று 
நம்மைப் பார்த்து சிரிக்க ...
புத்தகத்தைத் புரட்டினால் அங்கேயும்
புத்தாண்டு உறுதிமொழி எடுப்பது
எப்படி? என்ற கட்டுரை 
கண்டிப்பாக இருந்திருக்கும்.

அதில் நாளும் உடற்பயிற்சி மேற்கொள்ள
உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். 
அப்போதுதான் எந்த நோயும் அண்டாது என்று
எழுதப்பட்ட பரிந்துரை கடிதம் உங்கள்
மனதைத் தொட்டிருக்கும்.

.இதைத்தான் இந்த ஆண்டு உறுதிமொழியாக
எடுத்துக் கொள்ளப் போகிறேன்
என்று சொல்லி முந்தைய உறுதிமொழிகளை
எல்லாம் அப்படியே விட்டுவிட்டு 
அடுத்த உறுதிமொழிக்குத் 
தாவிவிடு என்று மனம் உங்களோடு
ஒரு தாவா நடத்தியிருக்கும்.

இப்படி எங்கெங்கேயோ சுற்றி
ஏதோ ஒரு உறுதிமொழி 
எடுத்திருப்பீர்கள்.


அதிகாலை ஐந்து
மணிக்கே எழும்பி விடவேண்டும்
என்று ஒரு சாதாரணமான 
செய்ய இயலும்படியான 
ஓர் உறுதிமொழி கடந்த ஆண்டு
எடுத்திருப்பீர்கள்.
 நாலு நாட்கள்தான் நடந்திருக்கும்.
குளிர் வந்து கொஞ்சம் படுத்துக்கோயேன்
என்று காதோடு கொஞ்சிவிட்டுச் செல்லும்.

அவ்வளவுதான்....உறுதிமொழி 
குளிரோடு போயே போச்சு.

இந்தக் குளிர்காலம் வந்து என் 
உறுதிமொழிக்குக் குந்தகம் விளைவித்துவிட்டது
என்று குளிர்காலத்தின்மீது பழியைப் 
போட்டுவிட்டு தப்பித்திருப்பீர்கள்.
இல்லையா?

இந்த ஆண்டுமுதல் அன்றன்றுள்ள
பாடங்களை அன்றன்று கற்றுவிட
வேண்டும் என்று முடிவெடுத்திருப்பீர்கள்.
எல்லாம் ஒருவாரம்தான்.
பிறகு எல்லாம் முன்பு போலவே தேர்வுக்கு
முந்தைய நாள் படிப்பாக மாறியிருக்கும்.
மாணவர்கள் எடுக்கும் 
 உறுதிமொழி இப்படித்தான்
காலாவதியாகிப் போயிருக்கும்.


கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்
என்று சில பல ஆண்டுகளாக 
தொடர்ந்து உறுதிமொழி
எடுத்திருப்பீர்கள்.
பதினைந்து நாட்கள்கூட 
தாண்ட முடிந்திருக்காது.
உங்கள் உறுதிமொழிக்கு முட்டுக்கட்டைப்
போடவேண்டும் என்றே ஒரு கும்பல்
கங்கணம் கட்டிக்கொண்டு
அலைந்திருக்கும்.இறுதியில்
அந்தக் கும்பலின் வலைக்குள் விழுந்து
இரையாகிப் போயிருப்பீர்கள்.
பொசுக்கென்று வந்திருக்கும் கோபம்.
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை 
காற்றோடு
போயாச்சு என்பதுபோல
உறுதிமொழியும் போயேபோச்சு.


இது நமக்குச் சரிபட்டு வராது.
இந்த உறுதிமொழிக்கும் நமக்கும்
சரிப்பட்டே வராது என்று 
சும்மா இருக்கலாம் என்று பார்த்தால்
ஆளாளாளுக்கு புத்தாண்டுக்கு என்ன
உறுதிமொழி ...புத்தாண்டுக்கு என்ன
உறுதிமொழி என்று கேட்டு உருட்டி
எடுத்துவிடுவார்கள்.

இதுதாங்க உங்களுக்கும் எனக்கும்
நடந்திருக்கும்.

நான் இந்தமுறை ஒரு முடிவு 
பண்ணியிருக்கேங்க.

பெரிதாக இல்லை என்றாலும்
வாரம் ஒரு புத்தகமாகவது
படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து
வைத்திருக்கிறேன்.
புத்தகம் என்றதும் பழைய நினைவு ஒன்று
கண்முன் வந்து நிற்கிறது.

ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால்
இப்படி ஒரு உறுதிமொழி எடுத்தேங்க.

நாலு புத்தகம் கூட தாண்டவில்லை
அதற்குள் ஒரு மனச்சோர்வு
தரும் நிகழ்வு வந்து எட்டிப்பார்க்க
உறுதிமொழியைப் பரணில் வீசிவிட்டு
கண்களை மூடிக்கொண்டேன்.        

எத்தனை புத்தகங்கள் முழுதாகப்
படித்திருப்பேன் என்றால்...
விரல்விட்டு எண்ணி விடலாம்.

ஆனால் ஒன்று ...இந்த ஆண்டும்
அதே உறுதிமொழியை எடுப்பது
என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இந்த ஆண்டாவது புத்தகங்களின்
எண்ணிக்கை இரண்டு இலக்க
எண்ணாக மாறினால் மகிழ்ச்சிதானே!

அவர் சொன்னார் ....இவர் சொன்னார்.
அதற்காக உறுதிமொழி எடுக்கிறேன்.

என் நண்பன் உறுதிமொழி எடுத்தான்.
அதற்காக நண்பர்கள் மத்தியில் ஒரு
கெத்துக் காட்டுவதற்காக
நானும் உறுதிமொழி எடுக்கிறேன்.

 என் காதலி சொன்னாள் .
அதற்காக உறுதிமொழி
எடுக்கிறேன்.

என் மனைவி சொன்னாள் அதற்காக
உறுதிமொழி எடுக்கிறேன்.

என் அம்மாவுக்காக 
உறுதிமொழி எடுக்கிறேன்.

என்றால் வேண்டாங்க....

இந்த உறுதிமொழிகள் எல்லாம் 
ஒருவாரம் கூட
தாக்குப்பிடிக்காதுங்க.

உங்களுக்காக...உங்கள் முன்னேற்றத்திற்காக...
உங்கள் நலனுக்காக....உறுதிமொழி
எடுங்கள்.

கடந்தமுறை பத்து நாளாவது 
கடைபிடித்தீர்களல்லவா!
அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

கடந்த முறையை விட அதிக நாட்கள்
உறுதிமொழி எடுத்த செயல் நடைமுறைப்படுத்தப்
பட்டால் அது  உங்களின் சாதனை தானே !

பத்து மதிப்பெண் வாங்கிய மாணவன்
நாற்பது மதிப்பெண் பெற்றுவிட்டால்
அது வளர்ச்சிதானே!
அந்த வளர்ச்சி நம்முள் நிகழட்டும்.

எத்தனை முறை விழுந்தாலும்
எழுவோமில்ல என்ற தன்னம்பிக்கை
இருக்கிறதில்லையா?

அந்தத் தன்னம்பிக்கையோடு
 உறுதிமொழியைக்
கையிலெடுங்கள்.

நமக்கு ஏற்ற உறுதிமொழிகள் 
பட்டியல் ஏராளம்
உள்ளன.

இந்த ஆண்டில்...

  *   விதவிதமான சமையல் கற்றுக்கொள்வேன்.

   *    பொருளீட்டும் தொழில் ஒன்றை
         கையில் எடுத்து செயல்படுத்துவேன்.


   *    புதிய மொழி ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.

   *     புத்தகம் படிக்கும் பழக்கத்தை
           ஏற்படுத்திக் கொள்வேன்.

   *     வீட்டில் காய்கறித்தோட்டம் அமைப்பேன்.

    *    அதிகாலை எழும்பும் பழக்கத்தைக்
         கடைபிடிப்பேன்.

    *    அரைமணி நேரமாவது உடற்பயிற்சி
          செய்வேன்.

    *     என் உடைமைகளை நானே சுத்தமாக
            பராமரித்துக் கொள்வேன்.

   *      எழுதும் பழக்கத்தை வளர்த்துக்
           கொள்வேன்.

  *       ஏதாவது ஒரு கைத்தொழிலைக் 
         கற்றுக் கொள்வேன்.

  *     உறவுகளோடு நேரத்தைச் செலவழிப்பேன்.

   *    ஆரோக்கிய உணவுகளை மட்டுமே எடுத்துக்
       கொள்வேன்.

  *     தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத்
         தவிர்ப்பேன்.

  *     நேரமேலாண்மையைச் சரியாகக்
          கையாளுவேன்.

    *    நல்லவை செய்யாவிட்டாலும்
          அல்லவை செய்யாதிருப்பேன்.

இவற்றுள் உங்களுக்கு ஏற்ற
உறுதிமொழியைக் கையிலெடுத்து 
விட்டீர்களல்லவா!


அதிகபட்சம் எவ்வளவு நாட்கள்
கடைபிடிக்க முடியுமோ முயன்று
பார்ப்போம்.

முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்.

உங்கள் இலக்கை நோக்கிய 
பயணம் இனிதே தொடங்கட்டும்.

வாருங்கள் . 
உறுதிமொழியை உறுதியாகக்
கடைபிடிப்பேன் என்ற உறுதியோடு
 புத்தாண்டை வரவேற்போம்.

இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!









முன்னூற்று அறுபத்து ஐந்து 
முத்தான நாட்களின்
முதல்நாள் முதல் விடியல்
வெள்ளைக்  காகிதத்தை நீட்டி
கோலம் செய்திட பணிக்க
விரல்கள் காகிதத்தை நெரிக்க
செயல்கள் சித்திரம்  வரைய
சத்தான உள்ளுரைக்கு 
முத்தான அச்சாரமிட்டு 
முத்தாய்ப்பாய் முன்னுரை எழுதி
முதற் பக்கம் தொடங்கிட 
வாழ்த்துகிறேன்!
செயல்களால் நாட்களைச்
செதுக்கிட விழைகின்றேன்!
முதற்தரமாய்ப்  புத்தகம்
வடிவம் பெற்றிட 
இறைவன்பால் வேண்டுகின்றேன்!


















Comments

Popular Posts