தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம் 
"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்..."
பாடலில் நெஞ்சைப் பறிகொடுக்காதவர் எவருமிலர்.
பாடல்தான் இனிமையா?
எங்கள் தமிழ் அதைவிட இனிமை.

"இமிழ் கடல் சூழ் உலகெங்கும்
போய் வாழ்ந்தாலும்
எந்தமிழர் தமிழ் மொழியால்
இணைந்து கொள்க"
என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

அப்படி என்ன தான் இருக்கிறது
தமிழ் மொழியில் என்று கேட்பவர்கள்
இல்லாமல் இல்லை.
என்ன தமிழ்....தமிழ்...என்கிறீர்கள்?
தமிழ் நமக்கு என்ன தந்தது?
தமிழ் படித்ததால் வாழ்வில்
எவற்றையெல்லாமோ  இழந்து
போனோம் என்று புலம்பிய நாட்கள்
உண்டு.

இவை எல்லாம் ஒரு காலக்கட்டத்தில்
காணாமல் போய்விட்டது.

இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் 
இல்லா நாடுகளே இல்லை என்னும் 
அளவுக்கு உலகெங்கும் உள்ள
எல்லா நாடுகளிலும் தமிழர்கள் 
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வாழ்வைத்தேடி வாழ்வாதாரத்தைத் தேடி
உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது
 என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
.
வீட்டை நாட்டைத் துறந்து அந்நிய தேசத்தில்
வந்து குடியமர்ந்து விட்டோம்.
பொருளாதாரத் தேவை நம் சொந்த மண்ணை விட்டு வெளியில் வர
காரணமாக இருந்திருக்கலாம்
ஆனால் எப்போதும் மனதிற்குள் ஒரு தேட்டம்.எதையோ இழந்துவிட்டது போன்ற வெறுமை. எதையோ தொலைத்துவிட்டது போன்ற 
தேடல் இவை இருந்து கொண்டே இருக்கும்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த நாம் 
மொழியை மட்டும் மறந்திலோம் என்பதை அங்கங்கே காணப்படும்
தமிழ்ச் சங்கங்கள் நமக்கு 
நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.


 தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்காரர்
என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால்
தமிழ்க் குரல் ஒன்று கேட்டுவிட்டால் போதும்.
திரும்பிப் பார்க்கிறோம்.
அனிச்சை செயலாகவே உதடுகள்
புன்னகை புரிகின்றன.
காரணம் என்ன ? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு?
முன் பின் பார்த்திருக்கிறோமா?
இல்லையே....பின்னர் ஏன் இந்த சிலிர்ப்பும்
சிரிப்பும்.உணர்வும் உள்ளக்கிளர்ச்சியும்.
அது புரியாத ஒன்று.

நீங்க தமிழா?
நானும் தமிழ்தாங்க....என்ற
ஓர் அறிமுகத்தை ஏற்படுத்திக்
கொண்டு அவரோடு பேச விரும்புகிறோமே
இவை எல்லாம் எதனால்? 
அவருக்கும் நமக்கும் 
என்ன பந்தம்?

அத்தோடு விட்டுவிடுவோமா?
அடுத்து எந்த ஊரு? என்று
கேட்டு அவரோடு மேலும் ஒரு நெருக்கத்தை 
ஏற்படுத்திக் கொள்ள முனைகிறோமே!
இது எதனால்?
முன்பின் தெரியாதவரிடம் வலியச்சென்று
பேச வைத்து ஒரு நட்பை ஏற்படுத்தச் செய்தது எது?

நமது தாய்மொழிதாங்க.
அந்நிய தேசத்தில் இருப்பவர்களுக்கு
தாய்மொழியைக் கேட்பது தாயின்
குரலைக் கேட்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தும்.

தாய் என்றால் ஏதோ ஒரு உணர்வுப்
பூர்வமான அன்பு ஏற்பட்டு அந்த அன்பில்
அப்படியே கட்டுண்டு கிடப்போம்.
தாய்க்கு அடுத்து நம்மைக் கட்டிப்போடும்
வல்லமை தாய் மொழிக்கு மட்டுமே உண்டு.
அந்நிய மண்ணில் வாழும்போது தான்
தாயின் அருமையும் தெரியும்.
தாய்மொழியின் அருமையும் புரியும்.

தாய்மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து 
அந்நிய மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 
எதை எதையெல்லாமோ
இழந்து நிற்கிறோம்.
அதில் முதன்மையானது 
தாய்மொழி
என்பது மறுக்க முடியாத உண்மை.
எனக்கு மட்டும் தான் அப்படியொரு
உணர்வா?
பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அனைவரிடமும் இப்படியொரு ஏக்கம்
இருக்கத்தான் செய்கிறது.
பொருளாதாரம் நம்மை எதைஎதையெல்லாமோ இழக்க வைத்திருக்கிறது.ஆனால் மொழியை
நம்மிடமிருந்து பிரிக்க முடியவில்லை.

"நாம் மொழியை உயிராக நேசிப்பவர்கள்.
பெயரில் கூட நம் மொழியை 
வைத்திருப்பவர்கள்  நாம்
மட்டும் தானே!
தமிழ்ச் செல்வன்,தமிழ்ச் செல்வி, தமிழரசன்,
தமிமிழரசி, தமிழச்சி என்று வீட்டுக்கொரு தமிழ்ப்பெயர்
உலவிக் கொண்டிருக்கும்.

எங்கேயாவது ஒரு மராட்டித்தாயி,
சிந்திராணி ,இந்திப்பல்,
போஜ்புரி லாலி 
என்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

எந்த மொழிக்கும் இல்லாத பெருமை
தமிழுக்கு உண்டு .
தமிழுக்கு மட்டும்தான் உண்டு.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு
என்பதுபோல அவரவர்க்கு அவரவர்
மொழி உயர்ந்தது. சிறப்பானது என்பதை
நாமும் ஒத்துக் கொண்டுதான்
ஆக வேண்டும்.
இந்தியாவின் பெருமையே
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான்.
பன்மொழி பேசும் மக்கள் இருந்தாலும்
நாம் அனைவரும் இந்தியர் என்னும்
ஒற்றைச் சொல்லைச் சொல்வதில்
பெருமிதம் கொள்கிறோம். பெருமகிழ்ச்சி
அடைகிறோம். மாற்றுக்கருத்து இல்லை
இருக்கவும் கூடாது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்குக்
காரணம் நிர்வாகம் சீராக நடைபெற வேண்டும்.
அந்தந்த மொழி பேசும் மக்களின்
கலை, கலாச்சாரம் பேணப்பட வேண்டும்.
இன்னபிற முக்கிய காரணங்களுக்காகத்தான்
இருக்க வேண்டும்.

முன்பு கன்னியாகுமரி மாவட்டம்
கேரளாவோடு இருந்தது.
அது தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக
வாழும் மாவட்டமாக இருந்ததால் 
மார்சல் நேசமணி
போன்றோரின் போராட்டங்களாலும்
முயற்சியாலும் தமிழ் நாட்டோடு
சேர்க்கப்பட்டதற்குக் காரணம்
மொழியால் கலாச்சாரத்தால்
ஒத்த  மக்களோடு
இணைந்து வாழ்வதே
சிறப்பாக இருக்கும்  என்ற
காரணமாகவே இருக்க
முடியும்.

மொழி வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துப்
பரிமாற்றத்திற்காக மட்டும் பயன்படுத்தப்
படுவதல்ல. தமிழ் பேசும் நம் யாவரையும்
ஓர் உணர்வால் கட்டி காத்து,
ஒரு பாதுகாப்பு வளையமாக நின்று
ஒன்றுபட்டு நிற்க வைக்கிறது.
இதனை அந்நிய மாநிலத்தில் வாழ்கிற
நாங்கள் பல்வேறு சூழல்களில் நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தமிழர் என்பதே நம் ஒற்றுமையில்தான்
இருக்கிறது என்பதைப் புரிந்திருக்கிறோம்.

மொழி என்பது ஓர் உணர்வு.
ஒரு பற்று. ஒரு பந்தம்.
அந்த உணர்வு அந்தப் பற்று அந்தப்
பந்தம் நம்மைவிட்டு 
எடுபட்டுப் போய்விடக்கூடாது.
ஒருபோதும் மொழியோடு நமக்குண்டான நெருக்கம் குறைந்து
போய்விடக்கூடாது.
மொழிப்பற்று குறைந்து போனால்
மொழிக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடும்
என்பது மட்டுமல்ல. அது அந்த
மொழி பேசும் அனைவரையுமே பாதிக்கும் என்பது உண்மை.


"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா "
என்றார்  பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழன் தமிழினத்தோடு தம்மை
இணைத்துக் கொள்ள வேண்டும்.

யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம் "என்று பாரதி
சும்மாவா சொல்லியிருப்பார்.

தமிழன் என்ற சொல்லே 
தமிழ்மொழியால் நமக்குக் 
கிடைத்த  நல்பெருமையல்லவா!

அந்தப் பெருமை நிலைத்திருக்க
தமிழராகிய நாம் இணைந்திருக்க
வேண்டும்.

அந்த இணைப்பு மொழியால் மட்டுமே சாத்தியமாகும்..

எங்கிருந்தாலும்
தமிழால் இணைவோம்.
தமிழராய்த் தலை நிமிர்ந்து நிற்போம்.

"தாழ்ந்திடு நிலையினில் உனை
விடுப்பேனோ?
தமிழன் எந் நாளும் தலைகுனிவேனோ?"
           - பாவேந்தர் பாரதிதாசன் 

தலைகுனியாத் தமிழனாய்த்
தலைநிமிர்ந்திருக்க 
தமிழால் இணைந்திருப்போம்.

Comments

Popular Posts