கெத்து காட்டும் செட்டு

கெத்து காட்டும் செட்டு

பொய் சொல்லுவதுன்னா சந்திராவுக்கு 
ரொம்ப பிடிக்கும்.
கொஞ்சம் பேசுவதற்கு ஆள்
கிடைத்துவிட்டால் போதும் 
சும்மா அளந்து விடுவாள். 
பொய் சொல்லி கெத்து காட்டியே
பொ. சந்திரா
பொய்ச் சந்திரா என்ற பெயரை
வாங்கி வைத்திருந்தாள்.

ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது
சொல்லவில்லை என்றால் பொய் 
சந்திராவின் தலையே
வெடித்துவிடும்.

தனியாக பொய் பேசியதில் ஒரு திரில்
இல்லை என்பாள் .
அதனால் பொன்மணியையும்
தோழியாக சேர்த்துக்கொண்டு 
கெத்துகாட்டிக்கொண்டு திரிவாள்.
சந்திராவும் பொன்மணியும் கழுத்தில்
கையைப்போட்டு செட்டாகத்தான்
பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிவார்கள்.

 துஷ்டனைக் கண்டால் தூர விலகு
 என்ற மாதிரி தூரத்தில்
 சந்திரா அண்ட் கம்பெனியைக்
 கண்டாலே பிள்ளைகள் விலகி
  ஓடிவிடுவர்.
  
 சில மாணவிகள் தங்களுக்குள்
 ஏதாவது சொல்லி சிரித்துக் கொண்டே
விலகிச் செல்வர்.
அப்படி தங்களைப் பார்த்து
யாராவது
சிரிப்பதைக்
 கண்டுவிட்டால் போதும்.
பின்னாலேயே வலியச் சென்று
"எதுக்குச் சிரிச்சா...எதுக்கு
சிரிச்சா...இப்போ நின்னு
 சொல்லிட்டுப் போ..."
பின்னாலேயே துரத்திச் சென்று
பிடித்து நிறுத்திக் கேட்பாள் சந்திரா.

இவளுக்குப் பின்பாட்டுக்காரி
பொன்மணியும்" ஆமாம்....சொல்லு
சொல்லு ..இப்ப சொல்லு" என்று
தாளவாத்தியம் இல்லாமலேயே 
பின்பாட்டுப் பாடுவாள்.

 தங்களைவிட சின்ன பிள்ளைகளை எல்லாம் 
 அழ ...அழப்படுத்துவதில் இவர்களுக்கு
ஆனந்தம் என்றால் ஆனந்தம்
 அப்படி ஒரு ஆனந்தம்.
 
வெளியில்தான் இப்படி ஒரு
அராஜகம்.
 வகுப்புக்குள் போய்விட்டால் போதும்
பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய்விடுவர்.

 மூச்சு பேச்சு இருக்காது.
 இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
 என்பதுபோல அப்பாவியாக முகத்தை 
 வைத்துக் கொள்வார்கள்.
 
 வகுப்பு ஆசிரியரைக் கண்டால்
 அப்படி ஒரு பயம்.
 . 
 வகுப்புக்குள் வாய் திறக்க முடியாது.
 வீட்டுலேயும் வாயை திறக்க
 முடியாது. அண்ணன்காரன்
 இரண்டு வார்த்தைக்குக் கூட ஒரு
 வார்த்தைப் பேசிவிட்டால்
 போட்டுத் தாக்கிவிடுவான்.
 
 மண்டையிலேயே கொட்டி..கொட்டியே
  ரணகளமாக்கி வாயை மூட
 வைத்துவிடுவான்.
 
 
எல்லா ஜம்பமும் பள்ளியில் தான்.
அதுவும் பெரும்பாலான பொய் அரங்கேறும்
நேரம் மதிய இடைவேளையாகத்தான் இருக்கும்.


" நெஞ்சார பொய்தன்னைப் பேச வேண்டாம்."
படித்ததோடு சரி.
   ஆனால் வாயைத் திறந்தால்
   பொய்...பொய்..பொய்...
   பொய்யைக் தவிர வேறு எதுவும் வராது.
 
கொஞ்சம் பயந்த பிள்ளைகளை கண்டால்
இவர்களுக்குக் குதுகலம் வந்துவிடும்.

கிழக்கே நோக்கி கையை நீட்டாதே.
கிழக்கேதான் சுடுகாடு இருக்கு .பேய்
பிடிச்சு கிடும்.


தெற்கே ஓடைக்கரை பக்கம்
போகாதே.
அங்கே பேய்  இருக்கு.
 பேய் அலையுது...
 பிடிச்சுகிடும் என்று தெற்கு
 நோக்கித் திரும்பாமல் செய்துவிடுவாள்
 சந்திரா.
 
"வடக்கு பக்கம் தனியாகப் போகாதே.
அங்கு ஒரு முண்டம்
தலையில்லாமல் சுத்திக்கிட்டு இருக்கு....
இல்லையா பொன்மணி....?"என்று பொன்மணியைச்
சாட்சிக் கூண்டில் ஏற்றி தன்
வாதத்திற்கு வலுசேர்ப்பாள்.

"மேற்கு திசையில் உள்ள ஓடக்கரை பக்கம்
போகாதே....அங்கே. உள்ள கள்ளிக்காட்டில்
இருந்து எப்பவும்
ஒரு குழந்தை அழுகை சத்தம் வரும்.

முதலில் புறாவா இருக்குமோ என்று 
நினைத்தோம். அதன் பின்னர்
ஆந்தையாக இருக்குமோ என்று நினைத்தோம்.
அப்புறம்தான் தெரியுது அது 
அழுகுணிப் பேயாம் .
யாரும் தனியாகப் போனால் பிடிச்சு வச்சு
சிரித்து விளையாடுமாம்..."

இப்படி நான்கு திசைகளும் நான்கு
கதைகட்டி தாங்கள் மட்டும்
கெத்தாகச் சுற்றித் திரிவர். 

 
இன்றைக்கு கெத்தாக இருவரும்
வருவதைப் பார்த்தால்...
இவங்க கண்ணுல யார்
படப்போகிறார்களோ ? ஐயோ...பாவம்
என்று தோன்றியது.

 தொலைவில் உள்ள வேப்ப மரத்தடியில்
 இரண்டு மாணவிகள் புதிதாக 
 பள்ளியில் வந்து சேர்ந்தவர்கள் 
 பயந்தபடி ஒதுங்கியே
 நின்று கொண்டிருந்தனர்.

 நேராக இருவரும் அவர்களிடம்
 சென்றனர். என்ன நடக்கப் போகிறதோ
 என்ற பயத்தோடு அந்தப் பக்கமே பார்த்துக்
 கொண்டு நின்றனர் சில மாணவிகள்.
 
 
" எந்த ஊருல இந்த அம்மமாருக்கு?
  கெத்தோடு கேட்டாள்
  சந்திரா.
  பேச்சும் கேட்டத் தோரணையும்
  அப்படியே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
பதில்   சொல்லாமல்  இருவரும்
அப்படியே நின்றனர்.
  
" எந்த ஊருன்னு
 சொல்ல மாட்டியளோ..?
 ஏன் வாயைத் திறந்தால்
 வாய்க்குள் இருக்கும் முத்து உதிர்ந்திருமோ?
 வம்பை விலைகொடுத்து வாங்கினாள்
  பொன்மணி.
 
"வா ராணி. நாம் வகுப்புக்குப் போவோம்...." 
என்றபடி இருவரும் அந்த 
இடத்திலிருந்து நகரத் தொடங்கினர்.

"எங்க போறீங்க ராணிகளா?
நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில்
வரலியே....பதில் சொல்லிட்டுப்
போங்க...."கையை நீட்டி மறித்தாள்
சந்திரா.

"வழி விடுங்க....நான் 
டீச்சர் கிட்ட போய் சொல்லிபுடுவேன்."
சிணுங்கினாள் ஒரு மாணவி.

" சொல்லு போ...சொரைக்காய்க்கு
 உப்புல்லன்னு சொல்லு.
 டீச்சருகிட்ட சொல்லுவாவளாமில்ல
 எந்த டீச்சர் கிட்ட?
 உங்க ஊரு டீச்சர் கிட்டேயா?
 போ....போ...உங்க ஊரு டீச்சர் கிட்ட
 சொல்லி நாளைக்கு கூட்டிட்டு வா..
 இப்போ நான் கேட்ட கேள்விக்குப்
 பதில் சொல்லுங்க..."
 நெருங்கி நெருங்கி வந்து
 பயங்காட்டினாள் பொன்மணி.
 
"வகுப்புக்குப்
போகணும்.. "சொல்லியபடியே 
இருவரும் அழுதனர்.

"
"ஊரைச் சொல்லாமல் ஒரு அடிகூட
எடுத்து வைக்கமுடியாது.
தெரியுமில்ல....."
மிரட்டினாள் சந்திரா.

"நான் நாளைக்கு எங்க அம்மாவைக்
கூட்டிவருவேன்"

"ஏய்...இங்கப் பாரு...
இவள் அம்மாவைக் கூட்டிகிட்டு வருவாளாம்.
ஏன் பள்ளி கூடத்துல படிக்கதுக்கா.?
ஏய்...பாருப்பா இவள் அம்மாவும்
நாளையிலிருந்து ஆறாம்வகுப்பு
படிக்கப் போறாங்களாம்"
சொல்லிவிட்டு ஏதோ பெரிய ஜோக்
அடித்துவிட்டதுபோல கெக்கக்க புக்கக்க
என்று சிரித்தாள் சந்திரா.

"எங்க அண்ணனை நாளைக்குக் கூட்டிட்டு
வருவேன்" விரலை ஆட்டி ஆட்டிப்
பேசினாள் இன்னொரு மாணவி.

படக்கென்று விரலைப் பிடித்துக்கொண்ட
சந்திரா "உங்க அண்ணனை கூட்டிட்டு
வருவியோ....? . கூட்டிகிட்டு வா
பார்க்கலாம்.
எவ்வளவு திமிரா
விரலை விரலை ஆட்டிப் பேசுறா?
விரலை ஒடித்துவிடுவேன்" கையை விடாமல்
இழுத்து வைத்தபடியே பேசினாள் சந்திரா.

"அட...இன்னா பாரு...
கழுத்துல இது என்ன ஒட்டியாணமா?"
நக்கலடித்தாள் பொன்மணி.

"கழுத்தில் ஒட்டியாணமா?
கழுத்திலா ஒட்டியாணம் போடுவாங்க...?
இடுப்பிலல்லவா போடுவாங்க..."

"எங்க அம்மட்ட சொல்லுவேன்
தொடாத பார்த்துக்க...கழுத்துல கை வைக்காத
சொல்லிப் புட்டேன்"

"ஏன் தொட்டா தேய்ஞ்சு போவியோ...?
கொஞ்சம் தொட்டு பார்த்துகிடுறேன்.
தங்கமா..?.பித்தாளையா...?"

"தங்கம் தான் ....எங்க அம்மதான்
போட்டு விட்டாங்க..."

"தங்கம்தா....னா ....அதுக்குத்தான்
இந்தச் சிலுப்பு சிலுப்புறியா ?"

"நான் இப்போ போயி கண்டிப்பா
எங்க டீச்சர் கிட்ட சொல்லுவேன்."

"போ...யாருகிட்டேயும் சொல்லு.
உன் கிட்டதான் தங்கம் இருக்கா.
எங்க வீட்டுல இவ்ளோ... தங்கம் இருக்கு... 
இவ்ளோ தங்கம் இருக்கு..." 
கையை விட்டுவிட்டு விரித்துக் காட்டினாள்
சந்திரா.

அதற்குள்,"வா.. நாம டீச்சர் கிட்ட சொல்லுவோம்."
என்றபடியே இருவரும் அழுதுகொண்டே
ஓடினர்.

இரண்டுபேரும் போய் சற்று நேரத்தில்
இருவரும்
கழுத்தில் கையைப் போட்டபடியே
மெதுவாக வகுப்பிற்குள் நுழைந்தனர்.


"வாங்க ..உங்களைத்தான் எதிர் 
பார்த்திருக்குக்கோம். இவ்வளவு நேரம்
எங்க போனீங்க ?
என்றார் வகுப்பாசிரியர்.

இரண்டுபேரும் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தனர்.

"அங்கே என்ன பார்வை?
நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலியே..
சொல்லுங்க.... எங்கே போயிட்டு வாரீங்க"

"எங்கேயும் போகல டீச்சர்.
மனப்பாடச் செய்யுள்  படித்துக்
கொண்டு மரத்தடியில் இருந்தோம்."
பம்மினாள் பொன்மணி.

படித்தாயிற்றா இல்லை இன்னும்
படிக்க வேண்டிய பாக்கி இருக்கா?

"படிச்சு முடிச்சிட்டோம்."
கெத்தாகப் பதில் சொன்னாள் சந்திரா.

"வெளியில் யார்கூட எல்லாம் பேச்சுவார்த்தை
நடத்தினீங்க ? கொஞ்சம் விவரமாக
சொல்ல முடியுமா?"

"யார்கூட பேசினோம் ?"
பொன்மணியைப்
பார்த்துக் கேட்டாள் சந்திரா.

"யார் கூட பேசினோம் என்பதே மறந்து
போச்சா....
நான் கொஞ்சம் ஞாபகப்படுத்தட்டுமா?"

டீச்சர் என்ன இப்படி கேட்கிறார்கள்.?
இருவருக்கும் உள்ளுக்குள் உதறல்
எடுத்தது.


இருவரும் வாயைத் திறக்க கூடாது
என்ற முடிவோடு தரையைப் 
பார்த்தபடி நின்றிருந்தனர்.

"அந்த பக்ககுது ஊர் பிள்ளைகளைப் பார்த்து
என்ன சொன்னீங்க...கொஞ்சம்
விளக்கமா சொல்றீங்களா...?"
சிரித்தபடியே விசாரணையைத்
தொடங்கினார் ஆசிரியர்

"நாங்க ஒண்ணும் சொல்லல்ல
டீச்சர் "
இருவரும் ஒத்த குரலில் 
மொத்தமாய் பொய் பேசினர்.



"பொய்யா சொல்லுறீங்க...
என்னது...உங்க வீட்டில் எவ்வளவு 
தங்கம் இருக்கு?
இவ்வளோ தங்கம்
இருக்கோ? ....
இருக்கட்டும்.....மகிழ்ச்சி.
எங்களுக்கும் கொஞ்சம் தாரீங்களா?"
சிரித்தபடியே விசாரணையை
நடத்தினார் ஆசிரியர்.

இருவரும் ஒருவரைப் பார்த்து அடக்க
முடியாமல் 
சிரித்து விட்டனர்.

"உங்களுக்கு சிரிப்பு வருதா?
வரும்... வரும்....
அதைப்போயி ஏன் அந்தப் பிள்ளைகளிடம்
சொன்னீங்க...."

இரண்டுபேரும் தரையைப் பார்த்தபடி
அப்படியே நின்றிருந்தனர்.

"கேட்கிறேன் இல்லியா..? பதில்
சொல்லுங்க... "

இருவரும் மௌனம் கலைக்கக்கூடாது
என்று பிடிவாதமாக நின்றிருந்தனர்.

"இப்போதெல்லாம் வாயைத் திறக்காதீங்க...."
இனி அப்படிச் செய்வீங்க...
அப்படிச் செய்வீங்க...
அப்படியே தோளில் கை போட்டு
செட்டாகவே 
வகுப்பு முன்னால் போய்
நின்னுங்க....எவ்வளவு நேரம்
உங்க செட்டு கழறாமல் இருக்குது 
என்று பார்ப்போம்" என்று மாறுபட்டத்
தண்டனை ஒன்றைக் கொடுத்தார்
ஆசிரியர்.


இருவரும் தோளில் கைபோட்டபடி
செட்டாக வகுப்பு முன்னால் 
போய் நின்றனர்..
அரை மணிநேரம் கூட
இருவராலும் தாக்குப்பிடிக்க
முடியவில்லை.

சற்று நேரத்தில் செட்டு  
கழன்று கைகள்
தானாக கீழே விழுந்தன.





Comments

  1. மிக அருமையான சிறுகதை.

    ReplyDelete

Post a Comment