வஞ்சகப் புகழ்ச்சி அணி

வஞ்சகப் புகழ்ச்சி அணி


புகழ்ச்சி தெரியும்.
இது என்ன...வஞ்சகப் புகழ்ச்சி!
ஏதோ நெருடலாக இருக்கிறதே.
வஞ்சகத்தோடு இருக்கும் ஒருவரால்
புகழ்ந்து பேச முடியுமா ? 
பேச முடியும்.
நயவஞ்சகம் பற்றி தெரியுமல்லவா!
நயமாகப் பேசி நம்மை நம்ப வைத்து
ஏமாற்றி விடுவார்கள் இல்லையா?
இந்த நயவஞ்சகத்திற்கும்
வஞ்சகப்புகழ்ச்சிக்கும்
பெரிய வேறுபாடு இல்லைங்க.

ஒருவரைப்   புகழ்வது போல
பழிப்பது.
பழிப்பது போல புகழ்வது.

அதாவது எள்ளல்.
ஒருவரை எள்ளி நகையாடுவது
பள்ளிப் பருவத்திலிருந்தே
நமக்குக் கைவந்த கலைதான்.

அதுவும்  அவர்களுக்கு வலிக்காதபடி
பேசுவது ...ஒருவகையில் பொடி வைத்துப்
பேசுவது என்றே வைத்துக் கொள்வோம்.

பேசுபவர் பேசிவிடுவார்.
மேலோட்டமாக பார்த்தால் 
பொருள் இருக்கும்.
உடனே நமக்குப் புரியாது.
நாமும் சேர்ந்து சிரிப்போம்.
வீட்டிற்கு வந்த பின்னர்தான்
எங்கோ பொறியில் தட்டுவதுபோல 
இருக்கும்.
அவன் என்னை நக்கலடித்திருக்கிறான்.
நானும் முட்டாள் மாதிரி சிரித்துவிட்டு 
வந்திருக்கிறேனே என்று
நம்மையே நொந்து கொள்வோம். 
இது நம்மில் பலருக்கு ஏற்பட்ட
அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

இதைத்தான் வஞ்சகப் புகழ்ச்சி என்பது.

இனி வஞ்சகப் புகழ்ச்சி அணிக்கு
வருவோம். 

அணி இலக்கணங்களுள் முக்கியமான
அணி வஞ்சகப் புகழ்ச்சி அணி.

பிறரைத் காயப்படுத்தாமல்
தாக்கும் உத்தி இந்த வஞ்சகப்புகழ்ச்சி
அணியில் இருக்கும்.

ஔவை அதியமான் நட்பு
ஊரறிந்தது. உலகறிந்தது.
அதியமானுக்கும் அண்டை நாட்டு
மன்னனான தொண்டைமானுக்கும்
நெடுநாள் பகை இருந்துகொண்டே இருந்தது.
ஒருகட்டத்தில் பகைவர் இருவருக்கும்
போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

இந்தச் செய்தி ஔவையின்
காதுகளுக்கு எட்டியது.
போர் மூண்டால் இருபக்கமும்
சேதம்  விளையும். வீரர்கள் கொல்லப்படுவர்.
பொருளாதார பிரச்சினை ஏற்படும்.
நாட்டு மக்களும் பெரும்
அல்லலுக்குள்ளாவர். இதை எப்படியாவது
தடுத்து நிறுத்த வேண்டும் என்று 
நினைத்தார் ஔவை.

தொண்டைமானிடம் சென்றார்.
ஔவையைக் கண்டதுமே 
தன் எதிரி நாட்டிலிருந்து வந்திருப்பது
புரிந்து போயிற்று.

அங்குள்ள படைக்கலன்களை எல்லாம்
 காட்டினார் தொண்டைமான்.
 பார்த்தார் ஔவை.பாடினார் ஒரு பாடலை...
 
" இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனகர் அவ்வே;அவ்வே 
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குன்றில மாதோ !"

மன்னா! உன் படைக்கருவிகள்
மயிற்தோகை அணிந்து பூமாலை
சூட்டி புதிது மாறாமல் 
உன் நகரத்தில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கின்றன.பார்ப்பதற்கு
பளபளவென்று நன்றாக இருக்கிறது என்றார்.
தொண்டைமான் முகத்தில் ஒரு கர்வம்
வந்து தொற்றிக் கொண்டது.
ஆனால் அங்கே....என்றார்.
எங்கே என்பதுபோல நிமிர்ந்து
பார்த்தார் தொண்டைமான்.

அதியமான் படைக்கருவிகள்
பகைவர்களைக் குத்திக்குத்தி
கூர் மழுங்கி
எப்போதும் கொல்லன் பட்டறையிலேயேதான் 
கிடக்கின்றன என்றார்.

இப்போது தொண்டைமானுக்குள் சற்று
கலக்கம். அப்படியானால் ....
அப்படியானால்....களம்பல கண்டவன்
அதியமான்.அவனது
போர்வீரர்களுக்கும் நல்ல போர்ப் பயிற்சி 
இருக்கும்.அவர்கள் தயார் நிலையில்
உள்ளனர். அவர்களுக்கு அதிக போர்
அனுபவம் இருக்கிறது. அவர்களுக்கு
எதிராகப் போரிட்டு ஒருவேளை நான்
தோற்றுவிட்டால்.....

அச்சத்தால் போரைக் கைவிட்டுவிட்டார்
தொண்டைமான்.

இருமன்னர்களுக்கிடையே நடைபெற
இருந்த போரை நிறுத்த 
ஔவையின் இந்த
வஞ்சகப் புகழ்ச்சி அணி துணை
போயிருக்கிறது பாருங்கள்!
 
எப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல
வலிக்காமல் வந்த வேலையை
முடித்துவிட்டார் ஔவை.

ஆஹா..முனை மழுங்காத பேச்சு!


இப்போது உங்களுக்கு வகுப்பறை
காட்சிகள் கண்முன் விரியுமே!
ஆசிரியர் புத்தகத்தை எடுத்துப்
படிக்கச் சொல்லியிருப்பார்.
புத்தகம் புத்தம் புதிதாக இருந்திருக்கும்.
உடனே ஆசிரியர் புத்தகத்தைப் புதிதாக
அப்படியே வைத்திருக்கிறாயே என்றிருப்பார்.
நினைவு வருகிறதா?

புத்தகத்தை அழகாக மடங்காமல் கலையாமல்
வைத்திருக்கிறாயே...இப்படியே வைத்துக்கொள்
என்பதற்காகவா ஆசிரியர் 
அப்படிச் சொல்லியிருப்பார்?


புத்தகத்தைத் திறந்து படிக்கவே இல்லையா?
இதைத்தானே ஆசிரியர்
நாசுக்காக இப்படி  சொல்லியிருக்கிறார் 
என்பது இப்போது புரிகிறதா?

ஓ....இதுக்குத்தான் இப்படிச் சொன்னாங்களா?
புரிகிறது. நன்றாகப் புரிகிறது.
 இதுதான் வஞ்சகப் புகழ்ச்சியா?
தெரிகிறது...தெரிகிறது.

இனி காலத்திற்கும் வஞ்சகப் புகழ்ச்சி
அணி மறக்குமா?

இப்போது திருக்குறளுக்கு வருவோம்.


"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்"

என்ற குறளை எடுத்துக்கொள்வோமானால்
மக்களைப் போன்றவர்கள்தான் 
கயவர்களும்.அதில் வேறு எந்த ஐயமும் இல்லை.
என்று கூறியிருப்பார் வள்ளுவர்.
அப்படியானால் நானும் மனிதன்தானா
என்று கயவர்கள் மனதிற்குள் ஒரு
மகிழ்ச்சி துளிர்க்கும்.
அந்த மகிழ்ச்சியை ஒரு நிமிடம் கூட
நுகர விட்டிருக்க மாட்டார் வள்ளுவர்.

அதற்குள் இந்த ஒன்று மட்டும்தான் 
உங்களுக்குள் ஒப்புமை.
இதைத் தவிர வேறு எந்த ஒப்புமையும்
கிடையாது என்று 
ஒரேயடியாகச் சொல்லி 
மனதை அப்படியே சுருங்க 
வைத்திருப்பார்
வள்ளுவர்.

நீ மனிதன்தாய்யா....ஆனால் நீ மனிதனா ?
என்று கேட்பதுபோல் இருக்கிறது இந்தப் பாடல்.

நீ  மனிதன்தான் .....ஆனால் நீ மனிதனா?
இதென்ன கேள்வி?

ஆமாங்க...புறத்தோற்றத்தில் நீ மனிதன்தான்.
ஆனால் உன்னுள் மனிதனுக்கு இருக்க வேண்டிய
எந்த நற்குணங்களும் இல்லையே என்பதைத்தான்
இப்படிச்  சொல்லியிருப்பார்.

எவ்வளவு நயமாக தன் கருத்தைச்
சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

மக்களே....என்ற சொல்லில்
இருக்கும் சூட்சுமம் புரிகிறதா?


இனி யாராவது நீ மனிதன்தானா
என்று சொல்லிவிட்டால் உடனே 
வள்ளுவரின் இந்தக் குறளை நினைவுபடுத்திக்
கொள்ளுங்கள்.

புகழ்வது போல இகழ்தல்
இகழ்வது போல புகழ்தல்.

இதுதான் வஞ்சகப் புகழ்ச்சி அணி.


Comments

  1. அருமையான மிகத்தெளிவான விளக்கம்.வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts