தேடிச் சோறு நிதந் தின்று....


தேடி சோறு நிதந்  தின்று....


வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு
என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எண்சாண் உடம்பில் ஒரு சாண்
வயிறே பிரதானம் என்று
வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறோம்.
அதெல்லாம் ஒரு வாழ்க்கையாங்க.
வாழ்க்கை என்றால் எப்படி 
இருக்க வேண்டும்?
யாதோ பிறந்தோம்...இருந்தோம்...
வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாதுங்க.

எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை 
வாழணுங்க...
கவலை இல்லா வாழ்க்கை
வாழ வேண்டும் என்று ஆசைதான்.
ஆனால் இவை எல்லாம் நடக்குமா?

நல்வினையோ தீவினையோ எல்லாம்
இறைவன் செயல்.

நல்வினை எல்லாம் இறைவன் செயல்.
தீவினையுமா...?
தீவினையும் அவன் செயல்
என்றால்
சற்று நெருடலாக இருக்கிறதே
என்று கேட்கத் தோன்றும்.

"பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும்
பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும்
மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும்
விசாரிக்கிறவராய் இருப்பவர் இறைவன்"
என்று பைபிளில் வாசிக்கவில்லையா?


அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க
என்னதான் வழி?

ஒன்றும் செய்யமுடியாது.
அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது.

இறைவனிடம் முரட்டுக் பக்தன்
பிடிவாதம் பிடிப்பதுபோல பிடிவாதமாகக்
கேட்டால் கண்டிப்பாக இறைவன் கேட்ட வரம்
அருளுவார் .

இது இறை நம்பிக்கை உள்ள
அனைவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.

இதற்கு இலக்கியங்களில் பல 
முன்னுதாரணங்கள்
உண்டு.
பாரதி மட்டும் விதிவிலக்கா என்ன?

அவருக்கு இறைவனிடம் மென்மையாகப்
பேசவும் தெரியும். முரட்டுப் பிடிவாதம் 
பிடித்து வரம் கேட்கவும் தெரியும்.

அப்படி பாரதி இறைவனிடம் வரம் கேட்டப்
பாடல்கள் பல உண்டு.
 இதோ உங்களுக்காக ஒருசில வரிகள்.


"தேடிச் சோறுநிதந் தின்று- பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி  மனம்
 வாடித் துன்பமிக உழன்று பிறர் 
 வாடப் பல செயல்கள் செய்து -நரை 
 கூடிக் கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல 
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை
நேரே இன்றெனுக்குத் தருவாய்- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்  - இனி
என்னைப் புதிய வுயிராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் "

இரண்டு மூன்றுமுறை படிக்கத் தூண்டும்
வரிகள்.
படிக்கும்போதே பாரதியின் எழுச்சி
கொண்ட உணர்வு நமக்குள் ஏதோ ஒரு 
மாற்றத்தைக் கொடுப்பதை உணர
வைத்த வரிகள்.

பாரதிக்குத்தான் தன் மீது எவ்வளவு 
பெரிய தன்னம்பிக்கை!

முதல் எட்டு வரிகளை மறுபடியும்
வாசித்து விட்டு மறுபடியும்
கட்டுரைக்கு வருவோம்.

நித்தம் நித்தம் வேளாவேளைக்குச் சாப்பிட்டு 
வயிற்றை வளர்ப்பதாங்க வாழ்க்கை?

இல்லை அல்லவா?

அப்படியானால் வேறு என்னதான் 
வாழ்க்கை என்கிறீங்க?
கதைபேசி காலத்தை
வீணிலே கழிப்பதா?

வீணாய்க் கழிப்பது 
 எப்படிங்க நல்ல வாழ்க்கையாக முடியும்?

அப்புறம்....

நாமும் துன்பத்தில் இருந்து பிறரையும்
துன்பப்பட வைப்பதா வாழ்க்கை?

யார் சொன்னது?

அதுவும் இல்லை என்றால் வாழ்க்கை
என்பதுதான் என்ன?

இப்படியே சாதாரணமாக வாழ்ந்து
கிழப்பருவம் எய்தி சாவதாங்க வாழ்க்கை.

இப்படி சாதாரண மனிதனைப் போல்
வாழ்ந்து சாவேன் என்று நினைத்தாயோ?
என்று சக்தியிடமே கேள்வி 
கேட்கிறார் பாரதி.


பாரதியின் மன உறுதி, நம்பிக்கை
எல்லாம் புரிகிறது.

வேறு என்னதாங்க  பாரதிக்கு
வேண்டுமாம்?

வரம் வேண்டும்...வரம்.
அதுவும் எப்படிப்பட்ட வரம் 
கேட்கிறார் பாருங்கள்!

சாதாரண மனிதனாக வாழ்ந்து
என் வாழ்க்கை முடிந்து போகக் கூடாது.
முன்னோர் செய்த தீவினைகள் எதுவும்
என்னை வந்து சாராதிருக்க வேண்டும்.
தீவினைகள் வந்துவிட்டால்....
என்னால் எப்படி வாழமுடியும்?

என்னைப் புதியவனாக்கிவிடு.
மனம் கவலையற்ற வாழ்க்கை எனக்கு
வேண்டும்.
கவலையற்ற மனிதனுக்குக் தானே
அறிவு வேலை செய்யும்.
அறிவு வேலை செய்தால்தானே
மனதில் தெளிவு பிறக்கும்.
மகிழ்ச்சி மனதில் குடிகொள்ளும்.
அறிவு கொடுத்துவிட்டாய்
அதில் எனக்குச் சந்தேகமில்லை.

அதைப் பயன்படுத்துவதற்கான
மகிழ்ச்சியான சூழலைக் கொடு.
அதற்கான சக்தியைக் கொடு.

அப்போதுதான் நீ தந்த 
அறிவைக் கொண்டு
இவ்வுலகத்தைப் பாலித்திட
 உயிர்ப்புள்ள கவிதைகளை
என்னால் படைக்க
முடியும்.

வேண்டும் என்ற வேண்டுதலைத்தான்
இறைவன் முன் வைப்பது 
அனைவரின் வழக்கம்.

கொடு என்று இறைவனிடம
கேட்பவர் பாரதியாராகத்தான்   இருப்பார்.

நல்லதோர் வீணை செய்தே அதை
நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ?

என்ன ஒரு  கேள்வி பாருங்கள்!

படைத்து விட்டால் மட்டும்
போதுமா?
எங்கேடும்  கெட்டுப்போ என்று
விட்டுவிடலாமா?


அறிவுடன் படைத்துவிட்டால் 
மட்டும் போதுமா?
இந்த மாநிலம்
பயனுற நான் அதைப் பயன்படுத்த
வேண்டாமா?
அதற்கு எனக்கு என்ன
வேண்டும் என்பது 
உனக்குத் தெரியாதா?

என்று கேட்பதுபோல் இருக்கிறது
பாரதியின் கேள்வி.

 சக்தி கொடு.

என்ன ஒரு பிடிவாதமான
வேண்டுதல் பாருங்கள்!
அதுவும் தனக்காக இல்லையாம்.
நமக்காகவாம்!













.


Comments