யானைகள் எத்தனை?

 யானைகள் எத்தனை?

நானும் என் தம்பியும் ஓய்வு நாளை
மகிழ்ச்சியாகக் களிப்பதற்காக
காட்டிற்குச் சென்றோம்.

போகும் வழி எங்கும் உள்ள காட்சிகளைப்
படம் பிடித்தபடி நடந்தோம்.
தொலைவில் 
யானைகள் கூட்டமாக வந்து கொண்டிருப்பது
தெரிந்தது.
அப்படியே கிலிபிடித்தபடி என்னைக்
கட்டிப் பிடித்துக் கொண்டான் என்
தம்பி.
ஒருபோதும் இத்தனை யானைகள் 
கூட்டமாக வருவதை நானும்
பார்த்ததில்லை.
எனக்கும் உள்ளுக்குள் உதறல்
எடுத்தது.

என்ன செய்வது?

இருவரும் ஓடி விடலாமா என்று 
ஒரு கணம் நினைத்தோம்.

இருந்தாலும் காட்டைச் சுற்றிப் 
பார்க்காமல்  அப்படியே திரும்பிச்
செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்
என்று ஒரு அசட்டுத் துணிச்சலை
வரவழைத்துக் கொண்டு,

"தம்பி வா!
இந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வோம்.
யானைகளால்  மரம் ஏற முடியாது.
அதனால் பத்திரமாக 
யானைகள் கடந்து போகும் வரை
நாம் மரத்தின் மேல் இருந்து கொள்ளலாம்.
.அதோடு மரத்தில்
இருந்தபடி யானைகள் எங்கே போகின்றன?
என்ன விளையாட்டு காட்டுகின்றன
என்பதையும் கண்டு மகிழலாம் "என்றேன்.

"உண்மையாகவே யானைக்கு மரம்
ஏறத்தெரியாதா ?"  ஐயத்தோடு
கேட்டான் தம்பி.

"இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு
எப்படி யானையால் மரம் ஏற முடியும்.?
கொஞ்சமும் யோசிக்க மாட்டியா"
என்று பெரிய அறிவாளித்தனமாகப் 
கேட்டுவிட்டதுபோல
தம்பியின் முகத்தைப் பார்த்தேன்.

அவன் முகம் பேயறைந்ததுபோல்
இருந்தது.

"பேசுவதற்கு நேரமில்லை.
ஏறு....ஏறு" என்றபடி 
தம்பியை ஏந்தி  மரத்தில்
ஏற்றிவிட்டுவிட்டு பின்னாலேயே நானும்
மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்..

இப்போது மொத்தமாக வந்த யானைகள்
 மூன்று குழுக்களாகப்
பிரிந்து அருகில் இருந்த 
மூன்று வயல்களுக்குள் இறங்கி
மேய்ந்து கொண்டிருந்தன.
மூன்று வயல்களிலும் சரிசமமான
எண்ணிக்கையில் யானைகள் நின்றன.

விளையாட்டுப் பாட நேரத்தில் 
ஒன்று.. இரண்டு ...மூன்று

ஒன்று ....இரண்டு ...மூன்று என்று
வரிசையாக  மூன்றுவரை எண்களைச்
சொல்லி அணி பிரித்த நாட்கள்
என் நினைவுக்கு வந்தது.

ஒன்று என்று சொன்ன மாணவர்கள் 
சிவப்பு அணி என்றும்
இரண்டு என்று சொல்லியவர்கள்
மஞ்சள் அணி என்றும் மூன்று என்று
சொன்னவர்கள் எல்லாம் பச்சை அணி
என்றும் ஆசிரியர் பிரித்து விளையாட
வைத்தது நேற்று நடந்தது போல்
பசுமையான நினைவுகளாக கண்முன்
 வந்து போயின.

யானைகளை அணிஅணியாகப் பார்ப்பது
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அப்படியே கைபேசியில் படம் பிடித்து 
வைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில்  அத்தனை யானைகளும் 
வயலைவிட்டு வெளியில் வருவதற்காக
ஐந்து பாதைகளைத் தேர்ந்தெடுத்தன.
இப்போதும் ஒன்று ,இரண்டு ,மூன்று,
நான்கு, ஐந்து என்ற எண்களைச் சொல்லி
பிரித்துவிட்டதுபோல சம எண்ணிக்கையில்
குழு அமைத்து ஐந்து பாதைகள் வழியாக  
வயலைவிட்டு
வெளியேறியதைப் பார்த்து
மறுபடியும் அதிர்ச்சிக்குள்ளானேன்.


"தம்பி, இங்கே பாருடா...எப்படி இப்படி
ஒரு ஒழுங்காக யானைகள்  செல்கின்றன
என்று பாரேன் "என்றேன்.
அதுவரை அச்சத்தில் முழங்கால்களுக்குள்
முகம் புதைத்து இருந்தவன் மெதுவாக தலை
நிமிர்ந்து பார்த்தான்.

"அண்ணே! நாம் உடற்கல்வி வகுப்பில்
வரிசையாக 
செல்வதுபோல இருக்கிறதல்லவா ?"
என்றான்.

 குழுக்கள் அமைத்துச் சரிசமமாக
பிரிந்து செல்வதில் இனியாவது 
ஏதும் குழப்பம் ஏற்படுமா என்பதை 
அறிய ஆவலோடு காத்திருந்தேன்.

எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் 
ஏற்படப் போவதில்லை 
என்பது போல
பக்கத்தில் இருந்த ஏழு குளங்களுக்குள்
இறங்கி ஆனந்த குளியல் போட்டன.
இங்கேயும் ஒவ்வொரு குளத்திலும்
சம எண்ணிக்கையில் நின்று குளியலிட்ட
காட்சியைப் பார்த்ததும்
என்ன நடக்குதுடா இங்க...என்று
கேட்க வேண்டும் போல் இருந்தது.

இது எப்படி சாத்தியமாயிற்று.?
புரியாத புதிராக இருக்கிறதே....

எனக்கு அப்படியே தலையைப்
பிய்த்துவிடலாம் போல் இருந்தது.
சரியான எண்ணிக்கையில் குழு 
அமைப்பதில் யானைகளுக்கு 
இணை யாருமில்லை என்று
உள்ளுக்குள்ளேயே சொல்லி
பெருமைபட்டுக் கொண்டேன்.

"அண்ணே! அங்கே பாரேன்...
யானைகள் அடுத்து
ஒன்பது வரிசையில் செல்கின்றன ."
என்று கத்தினான் தம்பி.

"எண்ணு...எண்ணு 
சரியாக எண்ணு "
என்று தம்பியை யானைகளை எண்ணச்
சொன்னேன்.

இப்போதாவது குழு அமைப்பதில் குளறுபடி
இருப்பதைக் கண்டு பிடித்து பெரிய நக்கீரர்
பரம்பரை என்று பெயர் எடுத்துவிடலாம்
என்று ஒரு சின்ன நப்பாசைத்தான்.
அந்த ஆசைக்கும் ஆப்பு வைத்துவிட்டது
இந்த யானைகள் கூட்டம்.

 பக்கத்தில் உள்ள
ஒன்பது சோலைகளுக்குள்
எண்ணிக்கை 
மாறாமல் சரிசமமாக குழு அமைத்து
நடையைக் கட்டின யானைகள்.
மலைப்பில் வாய் பிளந்து நின்றேன்.

"என்னண்ணே ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.!
என்ன நடக்கிறது?
 ஒன்றுமே புரியலியே "என்றான்
தம்பி.

"அட போடா....எனக்குத் தலையே 
சுற்றுவதுபோல்
இருக்கிறது ......எறும்புகளிடமிருந்து
வரிசையாகச் செல்வது எப்படி
என்று கற்றுக்கொள்ள வேண்டும்
என்பார்கள். சரியான எண்ணிக்கையில் 
குழுக்கள் அமைக்க யானைகளிடம்தான்
கற்றுக்கொள்ள வேண்டும்போல
இருக்கிறது" என்றேன்.

ஆனால் அடுத்து என்ன நடக்கப்
போகிறது என்பதுபோல யானைகளைவிட்டு
கண்களை எடுக்காமல் அங்கேயே
பார்த்திருந்தேன்.

அடுத்து நேரே நகருக்குள் செல்லும் பத்து
நுழைவாயில்களை  நோக்கி
வரிசைகட்டின யானைகள்.
இப்போது மட்டும் எண்ணிக்கையில்
மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அதுதான் இல்லைங்க.

இப்போதும் பத்து வாயில்களையும் நோக்கி
சம எண்ணிக்கையில் குழு
அமைத்து கம்பீரமாக நடந்து
போனது எப்படி இருந்தது
தெரியுமா?
ராணுவ வீரர்களின்
அணிவகுப்பு நடந்தது போல
இருந்தது.


இப்போது யானைகள் முற்றிலும் எங்கள் 
கண்களிலிருந்து மறைந்து போயின.
இருவரும் மரத்திலிருந்து மெதுவாக
இறங்கினோம்.

"அண்ணே !"
என்றான் என் தம்பி.

"பயப்படாதே....யானைகள் இனி
திரும்பி வராது .
மொத்த யானைகள் எத்தனை என்று
எப்படி கண்டுபிடிப்பது ?
என்று தம்பியிடம் கேட்டேன்.

"முதலாவது மூன்று வயல்களிலும்
மேய்ந்த யானைகளைப்
படம் எடுத்தாய் அல்லவா...
அதைக் காட்டு  . எண்ணிப் பார்த்து
சொல்கிறேன் "என்றான் தம்பி.

வீட்டிற்குச் போய் பேசிக் கொள்ளலாம்
என்று பேச்சை அத்தோடு நிறுத்திவிட்டு
இருவரும் வீட்டிற்கு
வந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம்
யானைகளைப் பற்றி  
கதைகதையாகப் பேசினோம்.

அதற்குள் தம்பி வந்து என் கையில்
இருந்த செல்போனைப் பிடுங்கி
ஒன்று, இரண்டு ,மூன்று ....என்று
படங்களைப் 
எண்ண ஆரம்பித்தான்.

இப்போது தம்பியோடு அம்மாவும் 
சேர்ந்து யானைகளை எண்ண ஆரம்பித்தார்.

இறுதியில் "அட போப்போ...நீயும் உன்
கணக்கும்.ஒன்றும் புரியவில்லை "என்று 
அம்மா விளையாட்டில் இருந்து
விலகிக் கொண்டார்.

"ஐ.....கண்டு பிடித்துவிட்டேன்"
என்று உரக்கக் கத்தினான்  தம்பி.

"சொல்லு...சொல்லு...
மொத்தம் எத்தனை யானைகள்?"
என்றேன்.

"பொறு...பொறு...இப்போதான்
கணக்கு போட்டு பார்க்கிறேன்"
என்றான் .

"திரும்ப சொல்....திரும்ப வரிசையாகச்
சொல்" என்றான்.

"புனம் மூன்றில் மேய்ந்து
வழி ஐந்தில் சென்று
இனமான ஏழ்குள நீர் உண்டு
கா ஒன்பதில் சென்று
காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசல் பத்தில் புக்கு"

என்ற காரிநாயனாரின் பாடலை
ஒப்பித்தேன்.


மூன்று வயல்கள்.
ஐந்து பாதைகள்.
ஏழு குளங்கள்.
ஒன்பது சோலைகள்.
பத்து வாயில்கள்.

அப்படியானால் யானைகளின் எண்ணிக்கை மூன்று , 
ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய எண்களில்
மீதமின்றி வகுபடக்கூடிய
எண்ணாகத்தான் இருக்க வேண்டும் .

அப்படியானால்.... அப்படியானால்...
எத்தனை யானைகளாக இருக்கும்?

புரியவில்லையே!

உங்களுக்குப் புரிகிறதா?

தெரிந்தவர்கள் எத்தனை யானைகள்
என்பதை கண்டுபிடிக்க உதவுங்களேன்....ப்ளீஸ்!










"












Comments

  1. பள்ளி பருவத்தில் படித்த கணிதத்தை நினைவு படுத்தி விட்டீர்கள்.உங்கள் கேள்விக்கான பதில் 630.

    ReplyDelete

Post a Comment

Popular Posts