விலங்காபிமானம்



  விலங்காபிமானம்

தொலைவில் பறக்கும் பறவையைத் 
தொடர்ந்து பலநாள் பார்த்தபடி
சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்
கண்ணால் கடிதம் எழுதியே
கருணை மனு அனுப்பி வந்தான்

காட்சிப் பொருளாய்
நின்றிருந்தும் 
பறவை கூட்டம் யாவுமே
பாராமுகமாய்ச் சென்றன

பச்சைக்கிளி ஒன்று மட்டும்
பக்கம் வந்து அமர்ந்தபடி
பரிவாய் முகத்தைப் பார்த்தது
தம்பி உன்றன் 
கண்களிலே கவலை
இருப்பதைப் பார்க்கிறேன்
ஏதுன் குறை என்றுரைத்தால்
இயன்ற மட்டும் உதவுவேன்
என்றே சொல்லி நின்றது

பலநாள் வீட்டில் அடைபட்டு
மனசு நொந்து கிடக்கிறேன்
முடமாகித்தான் போவேனோ?
முழுசாய் உலகை மறப்பேனோ?
நாலுந் தெரியா சிறுவனாய்
அறைக்குள் அடங்கிக்  கிடப்பேனோ?
பள்ளி என்பதை நான் மறந்து 
பலநாள் ஆகி போயிற்று
ஓடி ஆடும் நாட்கள் எல்லாம்
இனியும் எனக்கு வாராதோ?
துளியும் தவறு செய்யா எம்மை
முடங்கிப் போடுதல் ஞாயமோ?
மனசு நொந்த சிறுவனும்
நீர்வார்க் கண்களோடு 
நீதி கேட்டு நின்றிட்டான் 

துள்ளித் திரியும் பருவத்தில்
துவண்டு கிடத்தல் ஆகாது
 என்னால் ஒன்றும் இயலாது 
என்றன் பறவைகள் கூட்டத்தில்
உன்றன் பிரச்சினையை எடுத்துரைத்து
ஏதும் வழி உண்டோவென
கேட்டு உடனே வருகிறேன்
விழிநீர் துடைத்துக் காத்திரு
விடியும் உனக்கும் ஒருநாள் 
 பச்சைக்கிளியும் பாசமாய்
தேறுதல் சொல்லிச் சென்றது
 
 பறவைகள் முன் போய் நின்றது
சிறுவன் நிலைமையைச் சொன்னது
 பறவைகள் கூடிப் பேசின
 கூண்டுக்குள் வாழும் சிறுவனை
 மீட்க வழி தேடின 
 அடுத்து என்ன செய்வதென 
 ஆலோசனை கூட்டம் நடத்தின
 
 இரும்பைக் கடித்திடும் 
 எலியிடம் சென்று
 இதற்கொரு வழி கேட்டிடவே
 வளைமுன் வந்து நின்றன
 வணங்கிக்  குரல் கொடுத்தன
  எட்டிப் பார்த்த  எலியாரும் 
  சட்டென முகத்தை உள்ளிழுத்து
 பத்திரமாகவே இருந்திட்டார்
 
 அண்ணே !அண்ணே! எலியண்ணே!
 எமக்கொரு உதவி வேணுமண்ணே
 வளையைவிட்டு வெளி வந்து
 வாய்மொழி சற்று கேட்பீரோ?
 வருந்தி அழைத்து நின்றன
 வரும்வரை காத்துக் கிடந்தன
 
  எட்டிப் பார்த்தபடி எலியாரும்
 யாதும் கோரிக்கை சொல்லுங்கள்
 முடிந்தால் செய்து தருகிறேன்
 முழுதாய் உறுதி தரவில்லை
  முன்னுரை ஒன்றைக் கொடுத்தபடி
 முன்னால் வந்து நின்றது.
 
சிறுவன் ஒருவன் வீட்டிற்குள்
சிறைபட்டுக் கிடந்து 
சிலமாதங்கள் கடந்து போயின
சிறுவனை மீட்கும் வழிதேடி
சிறு உதவி
கிடைக்கும் என நாடி
 தங்கள் வாயில் வந்துள்ளோம்
 பறவைகள்  தங்கள்
கோரிக்கையை  எலியின் முன் வைத்தன!
 
 சிறுவனை மீட்க  எலியாரும்
 சாளரம் அருகே வந்தது
 கடித்து இழுத்துப் பார்த்தது
 பற்கள் தேயுமட்டும்
 பார்த்துப் பார்த்துக் கடித்தது
 பாதி இரும்பை கடிக்குமுன்னே 
 பல்லும் வீழ்ந்து போனது 
 எலியும் வலியால் துடித்தது
 ஏதும் சொல்ல முடியாமலே
ஓடி மறைந்து போனது
 
 திகைத்துப் போன  பறவைகள்
 காட்டு ராசா சிங்கத்திடம் 
 கவலையை உரைத்து நின்றன
  அங்குமிங்கும் நடந்த சிங்கம்
 ஐயோ என்னால் முடியலியே..
 ஏதும் வழியும் தெரியலியே 
 காலைப் பிறாண்டி நின்றது
 நரியிடம் போய் கேளுங்கள்
 நல்ல வழி சொல்லுவான்
 காட்டு ராசாவும் கையை விரித்து
 கையறுநிலை உரைத்து
கடந்து மறைந்து போனது
 
 நரியாரிடம் போன பறவைகள்
நரியண்ணே! நரியண்ணே!
சிங்க ராசா மெச்சிடும்
சிறந்த அறிவு உமக்குண்டு
சின்னத்தம்பி கூட்டுக்குள் 
சிரிப்பைத் தொலைத்துக் கிடக்கிறான்
இரக்கம் கொண்டு தம்பிக்கு
நல்ல வழி செய்யுங்கள்
இதுதான் எங்கள் கோரிக்கை
என்ற வேண்டுதல் முன் வைத்து
நாணிக்கோணி  நின்றன

குள்ள நரியும் கூசாமல்
கூண்டில் கிடக்கும் தம்பியை
மீட்டு வெளியில் கொண்டுவர
லோட்டா என்றொரு அமைப்பினை 
நாமும் அமைத்துப் போராடுவோம்
இதுதான் அதற்கான வழி
 என்று கூறி சிரித்தது

புரியாமல் பறவைகள்  விழித்தன
பீட்டா மூலம் மனிதர்கள் 
நம்மைக்  காத்து நிற்கும்போது
லோட்டா மூலம் நாமும்
சிறுவனுக்கு ஏன் உதவக்கூடாது
என்ற கேள்வி ஒன்று கேட்டு
அனைவரையும்  அசர வைத்தது

அசந்து போன பறவைகள்
நரியார் சொல்வது
நல்லவழி
நானிலம்  விரும்பும் அறவழி
விலங்குகளைத் திரட்டி வந்தன
லோட்டா ஒன்றை அமைத்து
நரியாரைத் தலைமை ஏற்க
அழைத்தன

தலை இருக்கும்போது
வாலாடலாகுமோ ?
தலைவன் சிங்கராசா 
இருக்கும்போது
குள்ளநரி நான்
கொண்டாட்டம் போடலாகுமோ?
சிங்கராசா தலைமையே
சிறப்பு  என்ற நரியாரும்
தலைமை பொறுப்பை
ஏற்றிட காட்டு ராசாவை
அழைத்தது

மறுப்பு சொல்லா ராசாவும்
பொறுப்பாய்த்  தலைமை ஏற்றிட
ஒட்டுமொத்த விலங்குகளும்
மகிழ்ச்சி குரல் எழுப்பின
மனித வதை கூடாதென்று
மன்றம் ஏறிப் பேசின

ஒட்டுமொத்த குரல் கேட்டு
உலகமே விழித்துக் கொண்டது
விலங்காபிமானம்  கண்டு
வியந்து போய் நின்றது
லோட்டா அமைத்த விலங்குகளை
பாராட்டி அறிக்கை விட்டது
தளர்வுகள் எல்லாம் அறிவித்து
தம்பியை வெளியில் விட்டது

துள்ளி வந்த தம்பியை
அள்ளி தூக்கிய யானையும்
ஆனந்த  நடனம் ஆடியே
அனைவரின் முன்னால் நடந்தது
அழகு காட்சியானது!



லோட்டா - குவளை
 
 

Comments

Post a Comment

Popular Posts