பாராட்டும் வாழ்த்தும்

பாராட்டும் வாழ்த்தும் 


"வாழ்த்துங்கள். அது உங்களை வாழ்த்தும்.
 பாராட்டுங்கள். அது  உங்களைப் 
 பல பாராட்டுக்களுக்கு உரியவராக்கும்."
 
 "உலகுள்ளவரை உவகையோடு வாழ்க."
 இது ஒரு சாதாரண வாழ்த்து தான். 
 ஆனால் இதன் தாக்கம் எவ்வளவு என்பது 
 நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
வாழ்த்துகள் ஏதோ பொழுது போகாமல் 
கூறுகிறார்கள் என்று கூட 
நினைப்பவர்கள் உண்டு.

சில சமயங்களில் கடனே என்று 
வாழ்த்துகள் அனுப்புவதும்  உண்டு.
வாழ்த்துகள் கூறுவதற்கு அவ்வளவு 
சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.
இது சோம்பேறித்தனமா அல்லது நாம் 
வாழ்த்தும் அளவுக்கு இவர் 
அப்படி ஒன்றும் பெரிய ஆளா என்ற 
நினைப்பா என்று சொல்லத் தெரியவில்லை.

இரண்டுமே இருக்கலாம்.
இவை நமக்கும் இருக்கும் ஈகோவைத்தான்
வெளிப்படுத்துவதாக இருக்கும்.


இதே போன்றுதான் பாராட்டவும்
 பலமுறை தவறி விடுகிறோம்.
 பாராட்டினால் அவர் நம்மை விடப்
 பெரியவராகிவிடுவாரோ என்ற
 நினைப்பு பாராட்டுக்கு முட்டுக்கட்டை இடும்.

அல்லது நாம் பாராட்டுவதால்
என்ன கிடைத்துவிடும் போகிறது
என்று அலட்சியமாக விட்டுவிடுவோம்.

ஆனால் ஒவ்வொரு பாராட்டும் 
நம்மில் எப்படி எல்லாம் 
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது....
இல்லை ...இல்லை..
தூக்கி நிறுத்தி இருக்கிறது என்பதைச்  
சற்றே பின்னோக்கி திரும்பிப் 
பார்த்தால் பாராட்டில்
இருக்கக்கூடிய முக்கியத்துவம் புரியும்.

அம்மா  மடியில் படுத்திருக்கும்போது 
அம்மாவின் கை நம் முதுகை 
மெதுவாக தடவிக் கொடுத்து 
பரவாயில்லை ....போகட்டும்...
என்று சொல்லிவிட்டால்போதும்
அந்த உணர்வு....
வேறு எங்குமே கிடைக்காத பாதுகாப்பு
 உணர்வு மட்டுமல்ல....
 பாராட்டுமாய் அமைந்து
 எவ்வளவு பரவசப்பட்டுப்
 போயிருப்போம்.அம்மாவுக்காகவாவது
 நல்லபெயர் எடுத்துவிட வேண்டும்
 என்று மெனக்கெட்டு உழைப்போம்.
 படிப்போம்.நல்லவர்களாக நடப்போம்.
 
அப்பாவோடு விரல் பிடித்து வீதியில் 
நடக்க கிடைப்பது ஆசானோடு நடப்பது
போன்ற பெருமித உணர்வு.
அதுவும் அப்பா சபாஷ்டா தம்பி
என்று சொல்லிவிட்டால் உள்ளம்
உற்சாகத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடும்.

தோளில் கை போட்டு 
உடன்பிறப்புகளோடு 
நடக்கும்போது ஏற்படுவது எனக்கு நீ 
உனக்கு நான் என்ற பொறுப்புணர்வு ஏற்படும்.
அப்போது அண்ணன் நான் இருக்கேனாடா...
எதற்கும் பயப்படாத....இன்னும் நன்றாக
பண்ணு என்று பாராட்டுப் பத்திரம்
வாசித்துவிட்டால்....
அப்பப்பா....ஆகாயத்தில் இறக்கை கட்டிப் 
பறப்பது போல இருக்கும்.

நண்பனோடு நடக்கும்போது எங்கேயோ 
 கற்பனை உலகில் நடப்பது போன்ற கனவு.
 
இவர்கள் அனைவரும்
நம்மை பாராட்டிவிட்டால்....
ஐயோ....சொல்லவும் வேண்டுமோ!

வானமே கூடாகும்.
வாழ்த்துகள் வரமாகும்.
பாராட்டு பனிமழையில்
நனையும் பரவசத்தைக்  கொடுக்கும்.

ஆஹா...இனி என்னால் 
எல்லாம் கூடும் என்ற தன்னம்பிக்கை 
தானாய் வந்து ஒட்டிக் கொள்ளும்
உயரே...உயரே தூக்கிச் செல்லும்.
     
பாராட்டுகள்  தொடு உணர்வு 
சார்ந்ததாக இருக்கும்போது அதன்
மதிப்பே அலாதியானது.
பள்ளியில் ஆசிரியரால் தோளில் 
தட்டிக் கொடுக்கப்பட்டு 
பாராட்டுதலைப் பெற்ற 
மாணவனுக்குதான் புரியும் 
அந்தப் பாராட்டின் வலிமை அவனை 
என்ன பாடுபடுத்தியது என்பது!

மறுபடியும் மறுபடியும் அந்த 
பாராட்டுக்காக உள்ளம் ஏங்கும்.
அதற்காக பாராட்டுதலைப் பெறக்கூடிய 
செயல்களில் உள்ளம் ஈடுபடும்.
பள்ளியை விட்டு வெளியே வரும்போது 
ஒரு வெற்றியாளனாக 
வெளியேற வேண்டும் என்ற
மனநிலையை உருவாக்கித் தரும்.
ஆசிரியரின் பாராட்டுக்கு இப்படியொரு
 வலிமை உண்டு.

அப்பாவின் பாராட்டு அலாதி சுகம்.
தோளில் தட்டிக் கொடுப்பது. 
கை குலுக்குவது .கட்டி அணைப்பது.
இப்படி தொடுமொழி  சார்ந்த 
பாராட்டு அப்பாவிடமிருந்து
கிடைத்துவிட்டால்......
இறைவனே இறங்கி வந்து
தோளில் சுமப்பது போன்ற மகிழ்வு!
அது வார்த்தையால் விவரிக்க முடியாத
நெகிழ்வு!

எல்லா இடங்களிலும் தொடுமொழி 
பாராட்டு சாத்தியமானதல்ல.
அப்படியானால் பாராட்டாமல்
விட்டுவிடலாமா ?

வாய்மொழி பாராட்டுக்கும்  ஒரு 
 சக்தி உண்டு.வாயால் பாராட்டுவோம்.
 அலைபேசி மூலமாகவாவது நமது
 பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழரசனும் மதியழகனும் பள்ளியில் 
கால்பந்தாட்ட அணித் தலைவர்கள்.
எதிரெதிர் அணியினருக்கு இடையே
எப்போதும் போட்டியும் பொறாமையும்
ஏற்படுவது இயல்பு.

இரண்டு பேருக்குமே
தங்கள் அணி ஜெயித்துவிட
வேண்டும் என்பதில் வெறித்தனமாக
விளையாடுவர்.

இந்த நிலையில்
தமிழரசன் அணி மாவட்ட அளவில்
விளையாட தேர்வு செய்யப்பட்டது.

மதியழகனுக்கு உள்ளுக்குள் வெப்பம்.
பொறாமை பொங்கி வழிந்தது.
அடக்க முடியாதபடி விளையாட்டு
அங்குமிங்கும் உலாத்தினான்.

கால்களால் விளையாட்டு மைதானத்தை
உதைத்தை தனது வெறுப்பை வெளிப்படுத்தினான்.
அப்படி இருந்தும் அவனால் கோபத்தைக்
கட்டுப்படுத்த முடியவில்லை.


 வீட்டிற்கு வந்து புத்தகப்பையை
 எட்டி வீசினான்.
 என்றுமில்லாதபடி அம்மாவிடம்
 எகிறி எகிறி பேசினான்.
 
அம்மா மெதுவாக  பேச்சுக் கொடுத்தார்.
அவ்வளவுதான் தமிழரசன் மீது இருந்த
வெறுப்பு வார்த்தைகளாக வந்து
விழுந்தன.

அம்மாவிடம் சொல்லிச் சொல்லி 
புலம்பித் தள்ளினான்.
விளையாட்டில் இத்தனை 
பொறாமை கூடாது
என்று சொல்லிப் புரிய வைத்தார் 
அம்மா.

உன் அணி மாவட்ட அளவில் 
தேர்வாகி உள்ளமைக்கு 
வாழ்த்து தெரிவித்துவிட்டு
வந்திருக்கலாமே என்றார்
அம்மா.

"எனக்குப் பிடிக்கவில்லை" என்று
ஒற்றை வரியில் சொல்லிவிட்டு
நகரப் பார்த்தான் மதியழகன்.

கையைப் பிடித்து இழுத்து
தடுத்து நிறுத்திய அம்மா
அலைபேசியில் குறுஞ்செய்தி
அனுப்பி வாழ்த்து அனுப்பு
என்று கட்டாயப்படுத்தினார்.

மதியழகனும்,"வாழ்த்துக்கள்.
வெற்றிக் கோப்பையோடு 
திரும்பிவருக "என்று வேண்டா
வெறுப்பாக குறுஞ்செய்தி 
அனுப்பி வைத்தான்.


 தமிழரசனுக்கும் மதியழகன்மீது 
 ஒரு பொறாமை இருக்கத்தான்
 செய்தது. ஆனால் மதியழகன் 
 குறுஞ்செய்தயைப் பார்த்த மறுகணம்
 எல்லாம் காணாமல் போய்விட்டது.
 
மதியழகனைப் பற்றிய எல்லா
எதிர்மறை கருத்துகளும்
மறைந்து போயின.
இப்போது தமிழரசன்  இதயத்தில்
ஓர் உயர்வான இடம்பிடித்து
மதியழகன் சம்மணம் போட்டு அமர்ந்து
கொண்டான்.

ஒரு சிறிய பாராட்டு.
எத்தனை பெரிய மாற்றம்
தந்துள்ளது பாருங்கள்!
இதுதாங்க பாராட்டுக்கான ஆற்றல்.

வாய்மொழி பாராட்டும் ஆள்பார்த்து ,
நாள்பார்த்து., கிழமை பார்த்து
என்பது போல நாளடைவில் 
சுருங்கிக்கொண்டே வருகிறது.

பாராட்டுகிறேன்...என்ற ஒற்றை 
வார்த்தைக்குள் நம்மைச் சுருக்கிக் 
கொண்டோம்.
அதுவும் பல நேரங்களில் வேண்டா
வெறுப்பாக கூட இருக்கலாம்.

நன்றாக உணவு சமைத்த அம்மாவை 
எத்தனைநாள் பாராட்டி இருப்போம்.?
பாடம் எழுதித் தந்த நண்பனின் 
கரம்பிடித்து பாராட்டைத் தெரிவிப்பதில் 
அப்படி என்ன தயக்கம்.?

பள்ளிவரை கூடவே பையைச் சுமந்து 
வந்த அண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தோமா ?
அல்லது ஒரு சின்ன நன்றியாவது
தெரிவித்தோமா?

பள்ளியில் ஆசிரியர் தோளில்
தட்டிக்கொடுத்த நாட்கள் இன்றுவரை
 நம் நினைவுகளில் கூடவே வரவில்லையா?
 
பாராட்டு என்பது  மிகப்பெரிய மூலதனம்.
பன்மடங்காக உங்களிடம்திரும்பி வரும்.
மனதாரப் பாராட்டுவோம்.கூடுமானவரை 
யாரையெல்லாம் தொட்டுப் பாராட்ட முடியுமோ 
அவர்களை கரம் பிடித்தோ தோளில்
தட்டிக்கொடுத்தோ பாராட்டுவோம். 
      
இதுவரை எப்படி இருந்தாலும்
பரவாயில்லை.
நடந்தவை நடந்தவை யாக
இருக்கட்டும்.
நடப்பவை நல்லவை யாக
இருக்க வேண்டும்.

நல்ல செயல்களுக்குப் பாராட்டு 
தெரிவிக்க வேண்டும் என்று 
இன்றே முடிவு செய்வோம்.

முடிவு செய்துவிட்டீர்களல்லவா?
கண்டிப்பாக முடிவெடுத்திருப்பீர்கள்.

நல்ல முடிவுக்குப் பாராட்டு!
  அலைபேசியில் குறுந்தகவல்
  அனுப்பிய கவிதைகள் ஓரிரண்டு
  உங்களுக்காக

     அன்றலர் மலராய்
     என்றும் முகம் மலர்ந்திட
     குன்றா நலமும்
     குறையா திருவும் 
     இறைவன் தந்திட 
     வாழ்த்துகிறேன்

     குன்றென உயர் புகழும்
     நின்றுனை உயர்த்திடும் 
     தனமும் பெற்று 
     வாழ வாழ்த்துகிறேன்!

    நன்றாய் வென்றாயெனும்
    நற்புகழ் மகுடம் சூட்ட
    வாழ்க பல்லாண்டு 
    வாழ்த்துகள் பற்பலக் கண்டு!
         
       

Comments

Popular Posts