அற்றார் அழிபசி தீர்த்தல்....

அற்றார் அழிபசி தீர்த்தல்....

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றார் பொருள்வைப் புழி

       குறள் : 226

அற்றார் - பொருளற்றவர்

அழிபசி - கொடிய பசி

தீர்த்தல் - நீக்குதல்

அஃது - அவ்வாறு செய்தல்

ஒருவன் - ஒருவனுடைய

பெற்றார் - பொருள் மிகுதியாகப் பெற்றவர்

பொருள் - பொருளை

வைப்புழி - சேமித்து வைக்குமிடம்..


கொடிய பசியால் 
வாடுபவரின் வயிற்றுப் பசியைப் 
போக்கி அவர் வயிற்றில்
 இடம்பிடிப்பதுதான்
 பொருளுடைய ஒருவன்
தான் சேர்த்து வைத்தப் பொருளைச்
சேமித்து வைக்கும் இடமாக இருக்கும்.


விளக்கம் :

நிறைய பொருள் இருக்கிறது.
அதனைப் பிற்காலத்தில் பயன்படுத்துவதற்காக
களஞ்சியத்தில் சேர்த்து வைப்போம்.
அதிக விலை வரும்போது விற்று
மேலும் அதிகம் பொருள் ஈட்டலாம்
என்று நினைப்போம்.

நீங்கள் பொருளைச் சேர்த்து
வைக்க வேண்டிய இடம்  அது அல்ல .
அதைவிடப் பாதுகாப்பான இடம்
ஒன்று உண்டு.
அவ்வாறு நீங்கள் சேமித்து வைக்கும்
இடம் பிற்காலத்தில்   உங்களுக்கு 
உதவுவதாக இருக்கும்.

அது எந்த இடம் என்று கேட்கிறீர்களா?

ஏழையின் வயிறு .

கொடிய வயிற்றுப்பசியால் வாடுகிறவனுக்கு
உங்கள் பொருள் அவன் பசியைப்
போக்க உதவுவதாக இருக்க வேண்டும்.
உங்கள் பொருள் ஒரு ஏழையின்
வயிற்றுப்பசியைப் போக்குவதாக இருந்தால்
அதை உண்ட மனது 
மனநிறைவோடு வாயார வாழ்த்தும்.

அந்த வாழ்த்து என்றென்றும் உங்களுக்குப்
பாதுகாப்பாக கூட வரும்.உங்கள்
பொருளுக்கு ஒருபோதும் பங்கம்
ஏற்படாது.
ஏழையின் வயிற்றில் இடம் பிடித்த
உங்கள் உணவு உங்கள் சேமிப்புக் கிடங்கில்
பத்திரமாக இருப்பதற்குச் சமம்.

உழைப்பால் கிடைத்த பொருள்
தகுதி உடையோருக்கு உதவுவதற்காகவே
இருக்க வேண்டும் என்று சொன்ன வள்ளுவர்
இன்னும் ஒருபடி மேலே போய்
உங்களிடம் பொருள் இருக்கிறதா?
அதனை வெறுமனே வீட்டில் 
சேமித்து வைக்க வேண்டாம்
கொடிய வயிற்றுப்பசியால் வாடுகிறவனின்
பசியைப்  போக்க உங்கள்
பொருள் உதவுவதாக இருக்கட்டும்
என்கிறார்.

"மிகுதியாகப் பொருளைப் பெற்றிருக்கும் 
ஒருவர் அந்தப் பொருளைச்
சேமித்து வைக்கும் இடம்
ஏழைகளின் வயிறாக இருக்க வேண்டும்.
அதாவது பசித்தவனுக்கு உணவளிப்பது 
செலவு அல்ல .
சிறந்த சேமிப்பு" என்கிறார்
 வள்ளுவர்.

English couplet :

"Let man receive the wasting hunger men endure
For treasure gained thus finds he treasure -house secure"


Explanation :

The removal of the killing hunger of the poor is the place 
for one to lay up his wealth.

Transliteration :

"Atraar azhipasi theerththal aqdhoruvan
Petraan porulvaip puzhi"




Comments

Popular Posts