ஆனைக்கும் பானைக்கும் சரி

ஆனைக்கும் பானைக்கும் சரி 


ஆளாளுக்கு ஒன்றும் சொல்லாமல் நின்றால் எப்படி?"

 "நடந்தது நடந்து போச்சு...காலாகாலத்துல 
     ஒரு மூக்கணாங்கயிறு போட்டுருந்தா
      இப்படி நடந்துருக்காது.
     கால சுத்திகிட்டு கெடந்திருக்கும்.
     செய்ய வேண்டியத செய்யாம விட்டுபுட்டு 
     இப்போ வந்து லொபோ..லொபோ என்று 
     வாயிலும் வயிற்றிலும் அடிச்சுட்டு 
     வந்து நின்னா எப்படி?"
 கூட்டத்தினரின் மௌனம் கலைத்தார் 
 சட்டாம் பிள்ளை.    
 
"பாதிக்கப்பட்டவக நாலும் பேசத்தான் 
செய்வாக .நாம பொறுத்துத்தான் 
போவணும் ."

"அதுக்காக உசுர பறிப்போன்னு நின்னா எப்படி?

"இப்படி ஆளாளுக்கு அறுவாவை கையில
 எடுத்தாகடைசியில எந்த உயிர் தான் மிஞ்சும்."
  
  சட்டாம்பிள்ளையிடமே சட்டம் பேசினர்
  கூட்டத்தில் நின்றிருந்த பெரியவர்கள்.

"இதுக்கு மேல நான் பேசுவதற்கு 
என்ன இருக்கு?"

"ஐயா பெரியவுக பார்த்து என்ன 
சொல்லுராகளோ அதுக்கு 
கட்டுப்பட்டு தான் ஆகணும்."

 பட்டும் படாமலும் சொல்லிவிட்டு அமர்ந்தார் 
 கைப்பிள்ளை.
 
  இவர் சம்பந்தப்பட்டவருக்குச் சொந்தக்காரர்.
  அவர் வாயிலிருந்து வேறு என்ன 
  எதிர் பார்க்கமுடியும்?
  
 "இதுக்கு இதே சோலியா போச்சு...
 ஒரு நாளா இரண்டு நாளா? 
 பொறுத்துப் போவதற்கு?"
 
 எத்தனை நாளைக்குத் தான் 
 பொறுத்துப் போவது.? கள்ளக் காளையல்ல 
 வளர்த்து வைச்சிருக்காவ...
 ஊருல மேயவிட்டு உடம்பை 
 வளர்க்கணும் என்று அலைகிறாக..."
 பாதிக்கப்பட்டவர் தன் குமுறலை 
 வார்த்தையாக கொட்டினார்.
 
  "இது இந்த ஒரு முறை மட்டும் நடக்கல. 
  பலமுறை இது போல் நடந்திருக்கு..
  நான்தான் பெரிய வீட்டு பொல்லாப்பு வேண்டாம்.
   என்று இத்தனை நாளும் கண்டும் 
   காணாதது போல் இருக்கச் சொன்னேன்.
   இன்று நேருல பார்த்ததும் வைத்தெரிச்சலா போச்சு.
    அது தான் கோபத்துல ஒரே போடாக 
    போட்டு தள்ளிப்புட்டாக."கணவன் 
    செய்த செயலுக்கு நியாயம் கற்பித்தாள் செல்லம்.
    
   "ஆமாம். பாத்தா பச்ச தண்ணி கூட 
   பல்லுல படாது.பொத்தி பொத்தி வளர்த்தேன்.
     ஒரே நாளுல நாசம் பண்ணி 
     என் சோத்துல மண்ண அள்ளி போட்டுட்டு.
     அது தான் ஒரே போடா போட்டு தள்ளினேன்."
      வீச்சறுவா வீச்சுக்கு இப்படி ஒரு வியாக்கியானம் 
    சொல்லி மீசையை முறுக்கிக் 
    கொண்டு நின்றார் செல்லையா.
    
  "எவன் சுத்தம்? சொல்லச் சொல்லு பார்க்கலாம்.
பெருசா நாக்கு மேல பல்ல போட்டு 
பேச வந்துட்டானுவ."

"கடந்த மாட்டுப் பொங்கலுக்கு வெடலை 
எல்லாம் உசுப்பேத்தி விட்டு
மொத்தமா  எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டு
 வந்தப்போ அது தப்பா உங்க 
 கண்ணுக்குத் தெரியல."
 
  "இன்றைக்கு நீ வீச்சறுவா தூக்குன 
  மாதிரி நானும் அன்றைக்கு தூக்கி
   இருந்தா உன் வீட்டுல 
   ஒரு வெடல மிச்சம் இருந்திருக்காது .
 பெருசா பேச வந்துபுட்டாக!   "
 
  " உசுருன்னா உசுரு தான். 
  அது எனக்கா இருந்தாலும் 
  உனக்கா இருந்தாலும் ஒண்ணு தான்."
  
 "வாயில்லா சாதின்னா வெட்டி சாச்சுபிடுவியளோ!
என்புள்ள மாதிரி வளர்த்து வைச்சேன்.
  வெட்டுனவன் கைய துண்டா எடுக்காம 
  விட மாட்டேன் "என்று எம்பி குதித்தார் 
  பாதிக்கப்பட்டவரின் தம்பி.
  
  "மூணுமாசமா பொத்திப்பொத்தி 
  வளர்த்தது போச்சே என்று 
  ஏதோ வெப்ராளத்துல செய்து விட்டான்.
  விடுங்கப்பா .
  இதுக்குப் போய் மாறுகால் மாறுகை வாங்குவேன்
  என்று பேசினால் எப்படி?"
  
  " ஏதோ தெரியாமல் நடந்து விட்டது. 
  நீங்களும் ஒரு மூக்கணாங்கயிறு 
  போட்டு கட்டி வைத்திருக்கணும்."
  
     "நமக்கு உசுறு பயிர் தான்.மாசக்கணக்கா
      உழைத்த உழைப்பு ஒரே நாளுல
       அழிஞ்சு போச்சே என்ற ஆவேசத்தில் 
       இப்படி ஆத்திரப்பட்டு தப்பா ஒரு காரியத்தை செய்திட்டார்."
       
       
 "  நீரும் என்ன தான் இருந்தாலும் 
 இப்படி மாட்டை வெட்டியிருக்கக் கூடாது."
 
  "கம்பை எடுத்து நாலு அடி அடிச்சி விரட்டியிருக்கலாம்.
இரண்டு பக்கமும் தப்பு இருந்தாலும் 
மாட்டை வெட்டினது மகா தப்பு.
 மாடு தான் நம்மள மாதிரி 
 விவசாயிகளுக்குச் சோறு போடும் சாமி.
 அதனால்   காளைய வெட்டினதுக்காக 
 செல்லையாவுக்கு ஆயிரம் ரூபாய் 
 அபராதம் விதிக்கிறேன்   . 
  
  பயிரு அழிவு இருப்பதால மாட்டுக்குச் 
  சொந்தக்காரரும் ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டணும்
  இதுதான் என் தீர்ப்பு "
  என்று தீர்ப்பு வழங்கிவிட்டு 
  எழும்பினார் சட்டாம்பிள்ளை. 
  
   ஆனைக்கும் பானைக்கும் சரி என்பது போல 
   தீர்ப்பு சொல்லிப்புட்டாகள
    ஆளாளுக்கு முணுமுணுத்தபடி நடையைக் கட்டினர்.

Comments

Popular Posts