குளிர் நிழல் தரும் மரம்

குளிர் நிழல் தரும் மரம்


பல்லுக்கும் பல்

கண்ணுக்குத் கண்"

இப்படி பதிலுக்குப் பதிலடி

கொடுத்திட வேண்டும்.

அல்லது சிலருக்குத் தூக்கமே வராது.


இது தீயவர் உள்ளம்.


"தீயவை செய்தார் கெடுதல்

நிழல்தன்னை

வீயாது அஇஉறைந் தற்று"

என்பார் வள்ளுவர்.


நிழலானது தன்னை விடாமல் வந்து தன்

காலடியிலேயே  தங்கி இருத்தலைப்போல

தீயசெயல்கள் செய்பவர்க்கு கேடு

விடாமல் கூடவே வந்து நிற்கும் 

 என்கிறார் வள்ளுவர்.




எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு.

அதுபோல தீமைக்குத் தீமை 

என்பதும் எல்லா இடங்களிலும் 

எல்லா நபர்களிடமும் இருக்காது.


நல்லோர் உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும்.

பொறுத்துப் போதல், விட்டுக்கொடுத்துப் போதல்

இப்படி ஆளாளுக்கு நற்பண்புகளோடு நடமாடும்

நல்ல உள்ளங்களும் இருக்கத்தான்

செய்கின்றனர்.


மரத்தை வெட்டும் மனிதனுக்கும்

நிழல் தரும் பண்பு 

மரத்திற்கு உண்டு.

நீ என்னை வெட்டிவிட்டாய். அதனால் நான்

உனக்கு ஏன் நிழல் தர வேண்டும்? என்று 

மரம் வீம்பு பிடிப்பதில்லை.


என் கடைசி கிளை இருக்கும் வரை

நிழல் தந்துகொண்டுதான் இருப்பேன்

என்று பிடிவாதமாக நிழல் தந்துகொண்டே இருக்கும்.


அதுபோல தீங்கு செய்பவரையும் தன்னால்

இயன்றவரை காக்கும் நற்பண்பு

அறிவுடைய மாந்தரிடம் இருக்கும் .

 தீமைக்கு தீமை என்ற எண்ணம்

 என்னிடம் எப்போதும் இருக்கப்போவதில்லை.

 தீமையை நன்மையால் வெல்வதுதானே

 நல்லோர் நற்பண்பு.

 சாகும்வரை அவருக்கு ஒருவர் தீமையே செய்து

 கொண்டிருந்தாலும் அவர் தீமைக்குப்

 பதிலாக தீமை செய்யப் போவதில்லை.

அத்தோடு விட்டுவிடுவாரா?

தமக்குத் தீமை செய்பவரையும்

இறுதிவரை காத்து நிற்பாராம்.

மரத்தைப் போன்ற இந்த நற்பண்பு

அறிவுடையவருக்கு மட்டுமே உண்டு 

என்கிறார் ஔவை.


இதோ பாடல் உங்களுக்காக 


சாந்தனையும் தீயனவே செய்திடினும் 

தாம் அவரை


ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்


குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து


மறைக்குமாம் கண்டீர் மரம்"


 மூதுரை பாடல். :30


அருமையான பாடல்.

ஆழ்ந்த கருத்து.

கண்முன்னே நிற்கும் மரத்தைக் காட்டி

இதைப்போல வாழுங்கள் என்று

சொல்லித் தருகிறார்.


அருமையான இந்தப்பாடலோடு

ஔவை தனது மூதுரையை

நிறைவு செய்திருக்கிறார்.


 முப்பதுப் பாடல்களிலும்

சொல்லப்பட்ட விழுமியங்களைக்

கற்று அதன்வழி நடப்போம். 

நல்ல சமுதாயத்தில் நானும் ஒருவன் என்று பெருமிதம் கொள்வோம்.




Comments