பாண்டிச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து

 பாண்டிச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து 


 தமிழ்த்தாய்

வாழ்த்து "நீராருங்கடலுடுத்த

நிலமடந்தைக் கெழிலொழுகும்"

என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதை எழுதியவர் மனோன்மணியம்

சுந்தரம் பிள்ளை அவர்கள்.


அதேபோன்று பாண்டிச்சேரியின்

தமிழ்த்தாய் வாழ்த்து எது என்பது

தெரியுமா?


பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய

"வாழ்வினில் செம்மையைச்

செய்பவள் நீயே...."

என்ற வாழ்த்துப் பாடல்தான்

பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய்

வாழ்த்துப் பாடலாக உள்ளது.



பாவேந்தர் பாரதிதாசன் தமது 

தமிழ் அமுது பாடல் தொகுதி 

இரண்டாம் பகுதி முதல் பாடலாக

இதனை எழுதியிருந்தார்.

இந்தப் பாடல்தான் பாண்டிச்சேரி அரசின்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக

பாண்டிச்சேரி அரசால் தேர்வு 

செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.


பாண்டிச்சேரி அரசின் எல்லா அரசு

விழாக்களும் தமிழ்த்தாய் வாழ்த்துப்

பாடல் பாடியே தொடங்கப்படும். 

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் 

இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன்

அவர்கள்.



தமிழைத் தாயாக உருவகப்படுத்தி

பாரதிதாசன் பாடிய  

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

இதோ உங்களுக்காக:



வாழ்வினில் செம்மையைச்

செய்பவள் நீயே

மாண்புகள் நீயே 

என் தமிழ்த்தாயே

வீழ்வாரை வீழாது 

காப்பவள் நீயே

வீரனின் வீரமும் 

வெற்றியும் நீயே

தாழ்ந்திடு நிலையினில்

 உனை விடுப்பேனோ?

தமிழன் எந்நாளும்

தலைகுனிவேனோ?

சூழ்ந்தின்பம் நல்கிடும்

பைந்தமிழ் அன்னாய்

தோன்றுடல் நின்உயிர்

நான் மறப்பேனோ?

செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை மூச்சினை

உனக்களித்தேனே

நைந்தாய் எனில் 

நைந்து போகும் என்வாழ்வு

நன்னிலை உனக்கெனில்

எனக்கும் தானே!

முந்திய நாளினில்

அறிவும் இலாது 

மொய்த்த தன் மனிதராம்

புதுப்புனல் மீது

 செந்தாமரைக் காடு

பூத்தது போலே


செழித்த என் தமிழே 

ஒளியே வாழி!


செழித்த என் தமிழே

ஒளியே வாழி!


செழித்த என் தமிழே

ஒளியே வாழி!


            -  இசையமுது



எம் வாழ்வை செம்மையாக்கியவள் நீ!

மாண்புகள் தந்தவள் நீ!

வீழாது காப்பவள் நீ!

வீரனின் வீரம் நீ!

வெற்றியும் நீ!

என் நிலை தாழ்ந்திடினும்

உன்னைத் தாழ

விட்டிட மாட்டேன்!

என்றும் என்னோடு 

இருப்பவள் நீ!

நான் தமிழன்!

நான் ஒருநாளும் ஒருபோதும்

யாரிடமும் எதற்காகவும்

தலை குனியப் போவதில்லை.

எமக்கு நல்லின்பம் வழங்கிடும்

பைந்தமிழ்த் தாயே!

என் உடல் நீ !

உயிர் நீ!

உடலினை உயிரினை

நான் மறப்பேனோ?

செந்தமிழே! உயிரே!

நறுந்தேனே!

என் செயலினை உனக்கு

அர்ப்பணித்தேனே!

உயிர்மூச்சினை உனக்கென

விடுவேன் தாயே!

தமிழே! உனக்கொரு குறை என்றால்

அது எனக்கும் தானே!

நன்னிலை நீ  அடைந்தால்

எனக்கும் நன்னிலை உண்டு.

முந்தைய நாளின்

அறிவு இல்லாதிருந்திடினும்

புதிதாய்ப் பிறந்த

 நல்மனிதராக

புதுப்புனல் மீது பூத்த

செந்தாமரைப்பூங்காடு போல

எம் நினைவினில் செழித்து

வளர்ந்து நிற்கும் என் தமிழே !

என் வாழ்வின் ஒளியே!

நீ வாழி!



அருமையான தமிழ் உணர்வூட்டக்கூடிய

பாடல். 

தமிழை எப்படி எப்படி எல்லாம்

அழைத்து மகிழ்கிறார் பாருங்கள்!


செந்தமிழே!

என் உயிரே!

நறுந்தேனே!


மொழிமீது காதல் கொண்டு

கனிந்து வந்த வரிகள்!

பாடலை இசையோடு கேட்க

வேண்டும் என்ற உணர்வு

ஏற்படுகிறதல்லவா!




Comments